புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா திங்கள்கிழமை (டிச.12) நடைபெறுகிறது.

News image
Updated On :11 டிசம்பர் 2016, 11:38 pm

சரவண பெருமாள்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா திங்கள்கிழமை (டிச.12) நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபம், கோயில் கொடிமரம் எதிரே சில நிமிடங்கள் மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ஆம் நாளான கடந்த வியாழக்கிழமை வெள்ளித் தேரோட்டமும், விழாவின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றன.

இன்று அதிகாலை பரணி தீபம்: விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன. இதையொட்டி, அதிகாலை 3.50 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதே நேரத்தில், கோயில் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டு, பக்தி இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Story image


பஞ்சமூர்த்திகள் வீதியுலா: இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், இதர வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.
காவல் துறை கட்டுப்பாட்டில் நகரம்: தீபத் திருவிழாவைக் காண திங்கள்கிழமை மாலை சுமார் 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 5 ஐ.ஜி.க்கள், 4 டிஐஜிக்கள், 19 எஸ்.பி.க்கள் உள்பட 8 ஆயிரத்து 630 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் திங்கள்கிழமை மலை மீது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், 100 கமாண்டோ வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே திருவண்ணாமலை நகரம் முழுவதையும் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டனர். நகரை சுற்றியுள்ள 9 சாலைகள், நகருக்குள் உள்ள குறுக்குச் சாலைகளில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் 2 குட்டி விமானங்கள்: தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 2 ஆளில்லா குட்டி விமானங்களை காவல் துறை பயன்படுத்துகிறது.
இந்த விமானங்கள் அருணாசலேஸ்வரர் கோயில் மீதும், கிரிவலப் பாதை, திருவண்ணாமலை நகரம் மீது சுமார் 200 மீட்டர் உயரம் வரை பறந்து ஆங்காங்கே ஏற்படும் கூட்ட நெரிசலை விடியோ எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவைக்கும்.
புதிய மகா தீப கொப்பரையில்... 13 ஆண்டுகளுக்குப் பிறகு மகா தீபம் ஏற்ற புதிய கொப்பரை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகர ஸ்டேட் வங்கி ஊழியர்கள் காணிக்கையாக செய்து கொடுத்துள்ள புதிய கொப்பரையில் இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி

பரணி தீபத்துக்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்துக்கு 6 ஆயிரம் பக்தர்களும் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கோயில் நன்கொடையாளர்கள், உபயதாரர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும், பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.