சாலியமங்கலத்தில் 373 ஆவது ஆண்டாக பாகவத மேளா நாட்டிய நாடகம்

நரசிம்ம ஜயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகேயுள்ள சாலியமங்கலத்தில் பிரகலாத சரித்திரம் என்ற பாகவத மேளா நாட்டிய நாடகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாடகத்தில் ஹிரண்யகசிபு உள்ளிட்டோர் பங்கேற்ற காட்சி.
நாடகத்தில் ஹிரண்யகசிபு உள்ளிட்டோர் பங்கேற்ற காட்சி.
Updated on
1 min read

நரசிம்ம ஜயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகேயுள்ள சாலியமங்கலத்தில் பிரகலாத சரித்திரம் என்ற பாகவத மேளா நாட்டிய நாடகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நாடகம் தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1645 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. வைணவ வழிபாட்டு மரபில் லட்சுமி நரசிம்மருக்கு அவரது அடியார்கள் வழங்கும் கொடையாக பாகவத மேளா கருதப்படுகிறது. இரவு முழுவதும் ஆடவர்களே நிகழ்த்தும் தொழில் முறையல்லாத அரங்கக் கலை இது. இந்த நாடகம் இரணியனை, நரசிம்மர் வதம் செய்யும் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
மெலட்டூர், சாலியமங்கலம், தேப்பெருமாநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் பாகவத மேளா நடைபெற்றாலும், சாலியமங்கலத்தில் இடைவிடாமல் 373 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், சாலியமங்கலத்தில் 373ஆம் ஆண்டாக பாகவத மேளா நாட்டிய நாடகம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்த நாடகம் முழுவதும் தெலுங்கு மொழியில் இருந்தது. இதில், ஹிரண்யகசிபுவாக சி.எஸ்.எம்.சுப்பிரமணியன், லீலாவதியாக மணிகண்டன் என்கிற ஜி. கணேச ரத்தினம், பக்த பிரகலாதனாக வி.பி. நவீன், என். ஹரீஷ், பால பிரகலாதனாக ஞானேஸ்வர், ஸ்ரீநரசிம்மராக எஸ்.வி.விஜயராகவன், கோணங்கியாக ஜெய்சுப்பிரமணியம், விநாயகராக விஜயன், கட்டியங்காரராக கோதண்டராமன், வீரர்களாக பரத், ரமேஷ் ஆகியோர் நடித்தனர். இந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் அலுவலக ஊழியர்களாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருந்தனர். தொழில் முறை நடிகர்களாக இல்லாவிட்டாலும் கூட, ஒவ்வொருவரும் அப்பாத்திரங்களாகவே மாறி நடித்து பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெற்றனர். இந்த நாடகத்தில் மிக முக்கியமான நிகழ்வான ஹிரண்யகசிபுவை ஸ்ரீ நரசிம்மர் வதம் செய்யும் காட்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. 
ஏறத்தாழ ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தக் காட்சியில் ஹிரண்யகசிபு - நரசிம்மர் இடையேயான வசனம் நெடுநேரம் நிகழ்ந்தது. தூணை ஹிரண்யகசிபு அடிப்பது, அத்தூணிலிருந்து உடைத்துக் கொண்டு நரசிம்மர் வெளியே வந்து ஹிரண்யகசிபுவை வதம் செய்வது போன்ற காட்சிகள் தத்ரூபமாக இருந்தன. இதில், ஸ்ரீ நரசிம்மராக நடித்த விஜயராகவன் அதற்கான முக கவசத்தை அணிந்த பிறகு அக்கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். குறிப்பாக, ஹிரண்ய கசிபுவை வதம் செய்யும் காட்சியின்போது அவர் உண்மையாகவே உக்ர நிலையை அடைந்தார். இறுதியில் பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் வைபவத்துடன் நாடகம் முடிவடைந்தது. இதில், தெலுங்கு மொழியிலான பாட்டும், வசனமும் கலந்திருந்தது. குறிப்பாக, பரதம், குச்சுப்புடி, யக்சகானம் ஆகியவை நிறைந்திருந்தன. அழுத்தமான கருத்துகள், பழைமை வாய்ந்த பாடல்களை வீணை வித்வான் ஜி. ராம்தாஸ் குழுவினர் பாடினர்.
இந்த முறை முதல் முதலாக நாடகத்தின் தொடக்கத்தில் தட்டு சித்து என்ற நாட்டியம் அரங்கேற்றப்பட்டது. சொற்கள், ஜதிகள் கச்சிதமாக இருந்த இந்த நாட்டியத்தை அனிருத் ஆடினார். நாடகத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லஷ்மி நரசிம்ம பாகவத மேள பக்த சமாஜத்தினர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com