புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எவ்வளவு பெரிய VIP ஆனாலும் கடைசியில் RIP தான்! ஆயுள் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

அநேகமாக நம்மில் அனைவருக்குமே "மரணம்" என்ற சொல்லைக் கேட்டாலே பயம் வந்துவிடுகிறது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2018, 8:09 am

அநேகமாக நம்மில் அனைவருக்குமே "மரணம்" என்ற சொல்லைக் கேட்டாலே பயம் வந்துவிடுகிறது. சிலருக்கு தங்கள் மரணம் குறித்து கவலை இல்லாமல் இருந்தாலும், தங்களுடைய நண்பர்கள், பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினரின் மரணம் குறித்து பயம் ஏற்படுகிறது. ஆக மரணம் என்பது நாம் விரும்பாத ஒரு சொல். இதை யாரும் மறுக்கவே முடியாது. ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத கஷ்டத்தை அளிக்கிறது.

மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு. மரணம் அடைந்த ஒருவர் திரும்பிவராத இடம் ஒன்றிக்குச் செல்கிறார். ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, அழகற்றவனாக இருந்தாலும் சரி - அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். ஆனால் யாரும் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது

இறப்பு என்பதை யோசிக்க ஆரம்பித்தால், எதை எடுத்துக் கொள்வது?

1. மூச்சு நிற்பது இறப்பா? இல்லை

2. இதயம் துடிப்பது நிற்பது இறப்பா? இல்லை

3. மூளை சிந்திப்பதை நிறுத்தும் போதா? இல்லை

4. இரத்த ஓட்டம் நிற்கும் போதா? இல்லை 

தேஹினோ' ஸ்மின் யதா தேஹே 

கெளமாரம் யௌவனம் ஜரா

ததா தேஹான்தரப் ப்ராப்திர் 

தீரஸ் தத்ர ந முஹ்யதி

எனப் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். அதாவது உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின்போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை"

மரணம் நேரும்போது ஏற்படும் அவஸ்தைகள்

Story image

இறப்பின் இந்த நேரத்தில் நிகழ்பவற்றை வார்த்தைகளிலோ வடிப்பதோ அல்லது சொற்களில் விவரிப்பதோ மிகவும் கடினம். பார்க்கப்போனால் இந்த வேறுபாடுகள் மிகவும் நுட்பமானவை. அவை மிக அழகான அசைவுகள், பார்வைகள், உடலில் பரவும் ஒளி, இருப்பின் வெளிப்பாடு ஆகியவை அவர் அதனுடன் தொடர்பு கொண்டுள்ளதைக் காண்பிக்கும். அதுபோல அவர் ஆன்மீக நிலைமாற்றம் அடையும்போது அதை வெளிப்படுத்தும். வார்த்தைகள் கிடைத்துவிட்டால்கூட அவர் அந்த அருள்நிலையில் அதைச் சொல்ல முடிவதில்லை என்பதே எனது தெளிவு. பல சமயங்களில் அவர்களது கண்கள் நான் காணாத ஏதோ ஒன்றின் மீது நிலைத்து நிற்பதுடன் அவர்களது முகங்களில் வெளிப்படும் புன்னகை எந்தப் பயமும் எந்தப் பீதியும் இல்லாமல் மிகவும் அழகானதாக, மிகவும் அற்புதமானதாக அமையும்.

Story image

சிறுநீர் கழிப்பதிலும் மலம் கழிப்பதிலும் அவர்களுக்குக் கட்டுப்பாடு இல்லாமல் போகும், ஏனெனில் அந்த தசைநார்கள் தளர்வு கொள்ள ஆரம்பிக்கின்றன. அந்தச் செயல்பாடு நின்று போகிறது. ரத்தஓட்டம் குறைவதாலும், ஆக்ஸிஜன் உள்ளிழுப்பு குறைவதாலும் பல்வேறு ஹார்மோன்களின் அமைப்புகளும் தங்களது செயல்பாட்டை நிறுத்துகின்றன. உடலிலுள்ள அனைத்துச் சக்திகளும் ஒரே மூச்சில் தேவையான ஒரே அமைப்பான நுரையீரலுக்கும் இதயத்துக்கும் மட்டுமே செல்கின்றன. கிட்னி, லிவர், கணையம் ஆகியவை நின்று போகின்றன. இவற்றின் செயல்பாடு குறைவதால் அது மேலும் மேலும் உடலின் மீது அழுத்தமாக மாறி குறைவுபட்ட ரத்த ஓட்டத்தை நிறுத்துவதால் உடல் முழுமையாகத் தனது செயல்பாட்டை இழந்து முற்றிலுமாக நின்றுபோக வழிவகை செய்கிறது.

ஜோதிடத்தில் இறப்பு மற்றும் ஆயுள்

ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதிமுக்கியமான பதவியில் இருப்பவர்.  சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். முதல் புத்திரர் யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளைப் பறிக்கும் தொழிலைச் செய்பவர். சகோதரி யமுனை. சனி கர்ம வினை கிரகம். கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்குப் பிடிக்காது.

Story image

ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளைத் தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் கீழ்க்கண்ட அம்சங்களை நாம் பார்க்கவேண்டும்.  

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் எட்டு வயது வரை பாலாரிஷ்ட காலம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பாலாரிஷ்டத்தின் தன்மையைப் பொறுத்து எட்டு வயதிற்குள் மரணம் ஏற்படுகிறது. எட்டு வயது முதல் இருபது வயது வரை யோகாரிஷ்டம் ஏற்படுகிறது. யோகாரிஷ்ட காலத்தில் ஆயுளை தீர்மானிப்பது என்பது சாதாரண விஷயம் அன்று.

Story image

லக்னத்துக்கு எட்டாம் இடம், லக்னத்துக்கு மூன்றாம் இடம், லக்னத்துக்கு பத்தாம் இடம் பத்தாம் இடத்தில் நின்ற கோள்கள், சூரியன், ஆயுளுக்கு அதிபதியான சனி பகவான். இவர்களைக் கவனிக்க வேண்டும். லக்னாதிபதியும் சூரியனும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகமானால் ஆயுள் தீர்க்கம். லக்னாதிபதியும் சூரியனும் சமமானால் மத்திமமான ஆயுள். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பகையான  கிரகமானால் அற்ப ஆயுள். அற்ப ஆயுள் என்றால் அந்த ஜாதகன் 32 வயது மட்டுமே வாழ்வான். 

ஆயுளை அறியும் முறை

ஆயுள் கணிதம் என்பது மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட செயல் என்றாலும் ஜோதிட சாஸ்திரத்தில் இதற்காக சில விதிமுறைகள் முனிவர்களாலும் ரிஷிகளாலும் வகுக்கப்பட்டிருக்கிறது.

1. லக்னாதிபதியின் நிலை மற்றும் எட்டாமதிபதியின் நிலை

2. லக்னாதிபதியின் நிலை மற்றும் சந்திரனின் நிலை

3. லக்னாதிபதியின் நிலை மற்றும் ஹோரா லக்னத்தின் நிலை

லக்னாதிபதியும் எட்டாமதிபதி, சந்திரன், ஹோரா லக்னாதிபதி ஆகிய அனைவரும் சர ராசியில் இருந்தால் பூர்ண ஆயுள். மாறாக இவை அனைத்தும் ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள். ஆனால் இவை அனைத்தும் உபய ராசியில் நின்றால் மத்திம ஆயுள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது,

மரணம் நேரும் காலம்

ஒரு ஜாதகத்தில் 8-ஆம் இடத்தை கொண்டு ஆயுளைப் பற்றியும் 2, 7, 11-ம் இடத்தை கொண்டு மாரகத்தைப் பற்றியும் கூறமுடியும். மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிகக் கவனமுடன் இருப்பது அவசியம். 

Story image

ஒருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் நேர்ந்துவிடுகிறது. இந்த மாரகாதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு/ கேது ஆகிய சர்ப்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்கு அமைந்து நிற்கும் போது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது. அந்த நேரத்தில் லக்னமோ அல்லது லக்னாதிபதியோ 6/8/12 அதிபதிகளின் தொடர்புகொள்ளும்போது மரணம் நிகழ்ந்துவிடுகிறது. மாரகாதிபதிகளின் தசாபுத்திகாலத்தில் லக்னத்திற்கு ஏற்படும் கிரகங்களின் தொடர்பைப் பொருத்து மரணத்தின் தன்மை அமைந்துவிடுகிறது.

சூரியன் அல்லது குருவின் சேர்க்கை பெற்றால் புனித தினங்களிலோ அல்லது கோயில் போன்ற தெய்வீகத்தன்மைகள் நிறைந்த இடத்தில் நிகழும். 

சுக்கிரன் சேர்க்கை பெற்றால் சுகமான மரணமும் மருத்துவமனை போன்ற இடங்களில் பலர் சேவை செய்ய மரணம் நிகழும்.

சனி சேர்க்கை பெற்றால் பொது இடங்களிலோ அல்லது தர்ம ஸ்தாபனங்கள் போன்ற இடங்களிலோ மரணம் நிகழும்.

சந்திரன் சேர்க்கை பெற்றால் நீர் நிலைகளுக்கு அருகிலோ அல்லது பயணத்திலோ மரணம் நிகழும்.

செவ்வாய் சேர்க்கை பெற்றால் விபத்துகளாலும் அகால மரணமும், புதன் சேர்க்கை பெற்றால் அவஸ்தைகளுடன் கூடிய மரணமும் நிகழும்.

ராகு/கேது தொடர்பு கொண்டால் விபத்து, விஷ ஜெந்துகளாலோ அல்லது விஷம் அருந்துதல், தற்கொலை போன்றவையும் நிகழும்.

மாந்தி தொடர்பு கொண்டால் உடல் சிதைந்த நிலையிலான மரணம் நிகழும்.

எனவே "ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா" என்பதை உணர்ந்து "எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான் அவன் சதாசிவ பக்தனென்றால் தொடமாட்டான்" என அறிந்து தர்ம நெறி தவறாமல் அமைதியாக வாழ்ந்தால் எமவாதனை இன்றி அமைதியான மரணம் நேரும்.

ஆயுள் வளர்க்கும் பரிகாரங்கள்

1. ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானை வணங்குவது மற்றும் பித்ரு வழிபாடுகள் தொடர்ந்து செய்வது. தர்ம காரியங்கள் செய்வது.

Story image

2. வருடம் தோறும் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை பிறந்த நாட்களில் செய்வது.

3. எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையுர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியைப் பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திர நாட்களிலும் வணங்குவது.

4. எமனை சாம்பலில் இருந்து உயிர்ப்பித்த திருச்சி திருப்பைஞ்சிலி ஸ்ரீ ஞீலிவண நாதர் ஆலயத்திற்குச் சென்று பிறந்த நாளில் ஒருமணி நேரமாவது தியான வழிபாடு செய்வது.

5. "காசியை விட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவதலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம் ஸ்ரீ வாஞ்சியத்தில் வாஞ்சிநாதேஸ்வரரை தரிசிப்பது மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்வது.

6. இவற்றோடு உடல் ஆரோக்கியத்தை காக்க வருமுன் காக்க சரியான ஆரோக்கியமான உணவு முறைகளையும் வருடம்தோறும் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்வது மற்றும் தேவையான அளவு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பிடு ஆகியவற்றைக் காலாவதியாகாமல் வைத்துக்கொள்வது

Story image

நமது வாழ்க்கை முடிந்து போகும் தருணத்தில் நாம் இறப்பு என்னும் காலகட்டத்தில் நுழைகிறோம், அது சில நாட்களோ அல்லது சில மணி நேரங்களோ பிடிக்கலாம். நோய் முற்றிப்போய் நாம் தளர்ச்சியடைந்து நமது உடல் அதன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது அதன் செயல்பாடுகள் விரைவாகச் சரிந்து முடிவுக்கு வரும். அதுதான் இறக்கும் சமயத்தில் மிக முக்கியமான தருணம். ஏனெனில் அந்தக் கணம்தான் இறைமைக்கான நேரம். 

எனவே இதுவரை நாம் நல்ல செயல்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் இனியாவது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 

துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே

ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே

எனப் பெரியாழ்வார் கூறியுள்ளது போல் ஸ்ரீமன் நாராயணின் நாமத்தை மரணம் நேரும் காலத்தில் சொல்லமுடியாமல் போனாலும் இப்போதே சொல்லி வைகுண்ட வாசனின் அருளைப் பெறுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.