தற்கொலைக்குத் தூண்டும் கிரகநிலைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

நாம் தினசரி பேப்பரிலும், டிவி செய்திகளிலும் பார்க்கிறோம். பிரபல நடிகை தற்கொலை, பிரபல தொழில் அதிபர் தற்கொலை கடன்....
தற்கொலைக்குத் தூண்டும் கிரகநிலைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

நாம் தினசரி பேப்பரிலும், டிவி செய்திகளிலும் பார்க்கிறோம். பிரபல நடிகை தற்கொலை, பிரபல தொழில் அதிபர் தற்கொலை கடன் தொல்லை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை, காதல் தோல்வியில் தற்கொலை எனவும் பலவாறு பார்க்கிறோம், படிக்கிறோம். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி கவலை கொள்ளலாம். தனக்கு ஏற்பட்ட நெருக்கடியான பாதிப்பே பெரியதாக கருதி ஒரு முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

தற்கொலை வேதப்படி மகா பாவம். தற்கொலை மனுதர்மப்படி கொடூர செயல். தற்கொலை சட்டப்படி குற்றமாகும். தற்கொலை சமூக கோழை செயல். தற்கொலை நியாயமான முடிவும் அல்ல. இதனை உணர்ந்தவர்கள் தற்கொலை புரியும் மனப்போக்கு மாறும். இறைவன் கொடுத்த உயிரையும், உடலையும் அழித்துக்கொள்ள முடிவு எடுக்கும் அளவில் மனப்போக்கு மாறும் அளவில் தாளமுடியாத கஷ்டப்படும் மனமே முதலில் இறந்துவிடுகிறது. அதன்பின்புதான் உயிரை இறக்க செய்கிறார்கள். 

மனிதனுக்கு வரக்கூடிய துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தற்கொலையே முடிவு அல்ல என்பதை உணர வேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் முடிவு தற்கொலை என்று முடிவு எடுக்காமல் இன்றைய விஞ்ஞான உலகத்தில் மனிதனாகப் பிறக்கவே புண்ணியம் செய்ய வேண்டும். உலக விஞ்ஞான சுகங்களையும், புதுப்புது அறிவியல் வளர்ச்சியைக் கண்டும், உலக சுகங்களை அனுபவிக்க மனித பிறவி எடுக்க வேண்டும். பரந்து விரிந்த அதிசய உலகங்களை கண்டு குதூகலம் காணும் மனம் எறும்புக்கும், சின்ன புழு போன்ற உயிர்களுக்கும் வாழ்க்கை இருக்கும் போது மனிதனுக்கு மட்டும் வாழ்க்கை இல்லை எனத் தீர்மானம் செய்யக்கூடாது. 

இவ்வாறு தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் ஜாதகர்களின் கிரக அமைப்பு நிலைகளைப் பற்றி பார்ப்போம். 

தற்கொலைக்குரிய கிரக நிலைகள்

தற்கொலைக்கு முடிவு எடுத்துச் செயல்படும் சக்தி லக்னத்திற்கு தான் உள்ளது. நம்முடைய லக்னம் தான் நமக்கு தலைமைச் செயலகமாக உள்ளது. இந்த லக்னம் ஒரு முடிவை சட்டென்று எடுத்துச் செயல்பட வைக்கிறது. தற்கொலைக்கு லக்னம் எவ்வாறு செயல்படுகிறது எனப் பார்ப்போம். 

லக்னம் 

• லக்னம் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரக நட்சத்திரசாரம் பெற்று இருப்பதும், 

• லக்னத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது-மாந்தி ஆகிய கிரகங்கள் நின்று இருப்பதும் அல்லது இந்தக் கிரகங்கள் கூட்டு சேர்ந்து இருப்பதும், 

• லக்னத்திற்கு பாதகாதிபதியின் கிரக நட்சத்திர சாரத்தில் லக்னம் நின்று இருப்பதும், 

• லக்னம் ராசி தொடக்கத்தில் அல்லது முடியும் தருவாயில் அதாவது ராசி சந்தி பெற்றால் லக்னம் பலம் குறைந்து காணப்படும். 

• லக்னம் நின்ற ராசிகளில் கிரக யுத்தம் இருப்பினும் லக்னம் பாதிப்பு அடையக்கூடும். 

மேற்கண்ட அமைப்புகளில் லக்னம் இருப்பினும் சட்டென்று தற்கொலை புரியும் எண்ணத்திற்கு வந்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்வார்கள். இவை போக 

தற்கொலைக்குத் துணை புரியும் மற்ற கிரக நிலை பற்றியும், பாவங்களையும் பார்ப்போம். 

தற்கொலைக்குத் துணை செய்யும் கிரகநிலை-லக்னாதிபதி

• லக்னம் பற்றி பார்த்தோம். இனி லக்னாதிபதி பகை நீசம் பெறுவதும், லக்னாதிபதி பகை கிரங்கங்களுடன் இருப்பதும், லக்னாதிபதி பலம் இல்லாமல் போவதும், 

• லக்னாதிபதி செவ்வாய், சனி, ராகு, கேதுவுடன் சேர்ந்து இருப்பதும் அல்லது லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருப்பதும், 

• லக்னாதிபதி 6,8,12-ல் மறைந்து இருப்பதும், 

மேற்கண்ட நிலையில் இருக்கும் லக்னாதிபதியும் தற்கொலைக்கு துணை போகிறார். 

மூன்றாம் பாவம்

இந்த மூன்றாம் பாவம் தான் மனம் என்று சொல்கிறோம். மனம், மனம் செயல்படும் விதம், மனவலிமை, மனதைரியம், மன அலைகள், மனப்போக்கு, மனம் எடுக்கும் முடிவு, மன நிலைப்பாடுகள், வித்தியாசமான மனம் இவை எல்லாம் மனம் பற்றி கூறுகிறது. இதில் ராகு, கேது, சனி, மாந்தி இருப்பதும், பகை கிரகங்கள் இருப்பதும், கூட்டு கிரகங்கள் இருப்பதும், மனம் பலவீனம் அடைந்து இருக்கும். இதன் பாவாதிபதியும் பலவீனமாக இருப்பதும், மனம் தைரியம் குறைவதால் தற்கொலைக்கு அடித்தளமாக அமைகிறது. தற்கொலைக்கு மூல முதற்காரணம் மனம்தான் முதலில் இறந்துவிடுகிறது. அதன் பின் உடல் இறக்கிறது. எனவே, மூன்றாம் பாவம் அதன் அதிபதி கெட்டுப்போய் இருந்தால், தற்கொலைக்கு மனம் தூண்டிவிடுகிறது. இனி, திசா புத்தி பற்றி பார்ப்போம். 

திசா புத்தி 
தற்கொலைக்கு முடிவு எடுக்கும் சூழ்நிலையும் அற்ப ஆயுள் முடித்துக்கொண்டு உலக வாழ்க்கையில் விடுவித்துக் கொள்ள மனம், எண்ணம் ஒப்புதல் அளிக்கும் அளவிற்கு ஜாதகத்தில் கெட்ட கிரக திசா புக்திகள் நடப்பில் இருக்க வேண்டும். அவ்வாறு கெட்ட கிரக திசா புக்திகளை எவ்வாறு அறிய முடியும் என்பதைப் பார்ப்போம். 

• திசாநாதன் லக்னத்திற்கு பாதகமானவராக இருக்க வேண்டும். பாதக திசா புக்தி காலத்திலும், 

• லக்னத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது நின்று இவர்களுடன் மாந்தி சேர்ந்த திசாபுக்தி காலத்தில் தற்கொலை செய்யும் எண்ணம் வரும். 

• மாந்தியோடு சேர்ந்த எந்தக் கிரக திசா புக்தியும் நடப்பில் இருந்தாலும் தற்கொலை செய்ய தோன்றும். 

• திசாநாதன் 6, 8 12-ல் நின்று திசா நடத்தக்கூடாது. 

• திசாநாதன் பகை, நீசம் பெற்றும் கிரக யுத்தம் பெற்றும் திசா நடப்பதும்.

• திசாநாதன் பகை கிரகங்களுடன் அல்லது 6, 8, 12-ல் பாவாதிபதிகளுடன் சேர்க்கை இருக்கக் கூடாது. 

மேற்கண்ட கிரக நிலைகள் ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகர் தனிமையில் இருப்பதை தவிர்த்து பலரது துணையோடு கலகலப்பாக இருக்க வேண்டும். இது போல் கிரக அமைப்புகள் கொண்ட திசா புக்திகள் நடப்பில் இருந்தால் ஏதோ ஒருவித மனக்காரணத்திற்காக தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலை எண்ணம் வந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com