மாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியையொட்டி, வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலையில் வியாழக்கிழமை மாலை கிரிவலம் வந்த பக்தர்கள்.
திருவண்ணாமலையில் வியாழக்கிழமை மாலை கிரிவலம் வந்த பக்தர்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியையொட்டி, வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலையில் சிவனாக வணங்கப்படும் மகா தீப மலையைச் சுற்றி 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதை உள்ளது. பௌர்ணமி நாள்களில் இந்தப் பாதையை கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த நிலையில், மாசி மாத பௌர்ணமியையொட்டி, வியாழக்கிழமை (மார்ச் 1) காலை 8.44 மணி முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) காலை 7 மணி வரை கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
குவிந்த பக்தர்கள்: அதன்படி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை முதலே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தவண்ணம் இருந்தனர். மாலை 4 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. 
இரவு 8 மணிக்கு பல லட்சம் பக்தர்கள் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் எதிரே உள்ள 16 கால் மண்டபம் முன் கற்பூரம் ஏற்றி வழிபட்டுவிட்டு, கிரிவலத்தைத் தொடங்கினர்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், திருநேர் அண்ணாமலையார் கோயில், ஆதி அருணாசலேஸ்வரர் கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள்: பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
இந்தப் பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அடிப்படை வசதிகள்: தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com