கண்ணனுக்கு ஏன் கால் கொப்பளித்தது? தெரியுமா!

அழகான யமுனா நதி. அந்த நதியின் அருகாமையில் ஸ்ரீ க்ரிஷ்ணனானவர் ஒரு குடிலை அமைத்துக் கொண்டு...
கண்ணனுக்கு ஏன் கால் கொப்பளித்தது? தெரியுமா!
Published on
Updated on
2 min read

அழகான யமுனா நதி. அந்த நதியின் அருகாமையில் ஸ்ரீ க்ரிஷ்ணனானவர் ஒரு குடிலை அமைத்துக் கொண்டு, ஸ்ரீ ருக்மணி பிராட்டியுடன் தங்கி இருந்தார்.
அரண்மனை வாழ்வு இருந்தாலும், நதி தீரமும், குளுமையான காற்றும் யாரைத்தான் சுண்டி இழுக்காது?

லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. அதுவும் ஒரு சுகானுபாவம்தானே ?

பிராட்டிக்கு தூக்கம் இமைகளைத் தழுவியது.

ஆனால் பகவான் உறங்காமல் எப்படி உறங்கத் தோன்றும்? பின் தூங்கி முன் எழுவாள் பேதை அல்லவா?

'ஸ்வாமி, தங்களுக்கு உறக்கம் வரவில்லையா?"

"இல்லை."

"காலை வேண்டுமானால் பிடித்து விடுகிறேன்."

பகவானுக்கு ஏன் உறக்கம் வரவில்லை. என்கிற யோசனையில், அவரின் கால்களை இதமாகப் பிடித்து விட்டார் பிராட்டி..

அப்பொழுதும் அவருக்கு உறக்கம் வராததை எண்ணி வருந்திய பிராட்டியார், "உங்களுக்கு உடல் நிலை சரியில்லையா? ஏன் உறக்கம் வரவில்லை?" என்று வினவினார்.

"இந்த யமுனையின் அக்கரையில், என்னுடைய பக்தை ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை. அதனால் நானும் தூங்கவில்லை." என்று பதில் கூறினார்.

"அவள் ஏன் தூங்கவில்லை?" என்று கேட்டார் பிராட்டி.

"தினமுமே பாலைச் சுண்ட காய்ச்சி, பரிமள திரவியங்கள் எல்லாம் சேர்த்து பாலை அருந்திவிட்டுத் தான் தூங்குவாள்..இன்று அவள் பால் அருந்தவில்லை. அதனால் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அவள் தூங்காததால் நானும் தூங்கவில்லை.. அவ்வளவுதான்" என்றார் பகவான்.

ருக்மணி பிராட்டியார், அவசரம் அவசரமாக எழுந்தார்.

கணவருக்கு உறக்கம் வர எது வேண்டுமானாலும் செய்யச் சித்தம் கொண்டார்.

ஒரு பசு மாட்டிலிருந்து, தானே பாலைக் கறந்தார். சுண்டக் காய்ச்சினார். பரிமள திரவியங்களைச் சேர்த்தார். படகோட்டியை எதிர்பாராமல், தானே படகினைச் செலுத்திக் கொண்டு நதியின் அக்கரைக்குச் சென்றார். 

ராதிகாவின் குடிலின் கதவைத் தட்டினார், பிராட்டி.

சாட்சாத் மகாலக்ஷ்மி தாயாரே தன்னுடைய குடில் தேடி வந்திருக்கிறார் என்றால்? ராதிகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

பிரட்டி கொடுத்த பாலை மடமட வென்று பருகினாள்.

பிராட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இனி பகவான் நிம்மதியாக உறங்குவார் என்று எண்ணி, நிம்மதி பெருமூச்சு விட்டார்.

தன்னுடைய குடிலுக்குத் திரும்பினார். 

பகவான் தலையோடு கால் போர்த்தியவண்ணம் உறங்குவதைப் போல் பாசாங்கு செய்தார்.

பதி உறங்கிவிட்டார் என்று எண்ணிய பிராட்டி, தான் உறங்கச் செல்லுமுன், பகவானின் பாதங்களைத் தொட்டு வணங்கும் பழக்கம் கொண்டிருந்ததால், மெதுவாகப் போர்வையை விலக்கி, திருவடிகளைத் தொட எத்தனித்தார்.

திருவடிகளைப் பார்த்த பிராட்டிக்கு எதுவுமே புரியவில்லை. பகவானின் பாதம் முழுவதிலும் கொப்பளங்களாக இருந்தன.

படுத்துக் கொண்டிருப்பவரின் பாதங்களில் எப்படி கொப்பளங்கள் வந்தன? பகவானிடமே கேட்க முடிவு செய்து, அவரை எழுப்பினார்.

"ஸ்வாமி காலில் எப்படி கொப்பளங்கள் வந்தன? என்று முழுவதும் நீங்கள் வெளியில் கூட எங்கும் சொல்லவில்லையே?"

"நான் எங்கும் செல்லவில்லை. ஆனால் ராதிகா பால் குடித்தாள் அல்லவா? அதனால் என்னுடைய காலில் கொப்பளங்கள் உண்டாயிருக்கிறது."

"ஸ்வாமி, ராதிகா பால் அருந்தியதற்கும்,  உங்கள் பாதங்களில் கொப்பளங்கள் வந்ததற்கும்  என்ன சம்பந்தம் புரியவில்லையே."

"நீ சுடச் சுடச் பாலைக்  கொடுத்தாய்  அல்லவா? உன்னைப் பார்த்த அதிசயத்தில், பாலை அப்படியே பருகி விட்டாள் . அதனால்தான். எனக்கு வந்திருக்கிறது." என்றார். பகவான்.

பிராட்டிக்கு மிகவும் குழம்பிப்போய்  விட்டது.

"ஸ்வாமி, ராதிகா சூடாகக் குடித்தால் அவள் நெஞ்சுப் பகுதி அல்லவா வெந்து, கொப்பளங்கள் ஆகியிருக்கும். உங்கள் திருவடி ஏன் கொப்பளித்தது?"

பகவான் சிரித்தார்.

"தேவி, அந்த ராதிகாவின் நெஞ்சினில் இருப்பது என்னுடைய பாதங்கள் அல்லவா? அவள் அருந்திய பால் என்னுடைய திருவடிகளில் தானே விழுந்தது" என்றார்.

பிராட்டியார் நடுநடுங்கிப் போனார். மகாலக்ஷ்மித் தாயாருக்கே தெரியாதது. ராதிகாவின் பக்தி.. 

எப்பொழுதுமே உத்தமமான பக்தியை வெளிக்காட்டாத்  தயங்காதவர், அந்த மாயக் கண்ணன். அந்தக் கண்ணனை  "மாமாயன்" என்று கூறுவதில் தவறில்லை.

ஸ்ரீ கிருஷ்ணனின் பாதார விந்தங்களில் சரணடைய, ஸ்ரீ ராதிகாவைச் சரணடைந்தால் போதும். கிருஷ்ணா என்று ஜபிப்பதைவிட ராதே கிருஷ்ணா என்று ஜபம் செய்தால் வலிமை கூடுதலாக இருக்கும். ராதிகாவின் பிரேம பக்திக்கு இணையான பக்தி எதுவுமே இல்லை எனலாம்..

கர்க பாகவதத்தில் கூறப் பட்டிருக்கும் இந்த சரித்திரத்தினை, வட நாட்டினர், நித்தியமுமே பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மேற்படி சரித்திரம் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் கூறப்பட்டது.

ராதிகா காயத்ரி

ஓம் வ்ருஷபானுஜாயை வித்மஹே 

கிருஷ்ண ப்ரியாயை தீமஹி 

தந்நோ ராதிகா ப்ரசோதயாத்.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com