இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாளை வழிபட மறக்காதீர்கள்!

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை இன்று. பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும்..
இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாளை வழிபட மறக்காதீர்கள்!
Published on
Updated on
1 min read

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை இன்று. பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது. புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். இவ்வாறு விரதம் இருப்பதன் மூலம் சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்பு

திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். புரட்டாசியில் வரும் எல்லாச் சனிக்கிழமைகளிலும் அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்து சிறப்பாக வழிபட வேண்டும்.

சனிக்கிழமை விரதம் இருக்கும்போது துளசி மற்றும் மலர்களைத் தூவி ஏழுமலையான் குறித்த திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாட வேண்டும். பச்சரிசி மாவை தூய உடலோடும், உள்ளத்தோடும் இருந்து சலித்து, விளக்கு செய்து அதில் நெய் விட்டுத் தீபமேற்ற வேண்டும். காலையில் ஏற்றும் தீபம், மாலை வரை எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நைவேத்யம் செய்ய வேண்டும். 

விரதம் இருப்பதால் உண்டாகும் நன்மைகள்

• சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோயிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும்.

• பெருமாள் படத்தின் முன்னர், நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

• புரட்டாசி சனிக்கிழமையில் திருமாலை வணங்கி வந்தால் நம்மைச் சுற்றி உள்ள தீமைகள் முற்றிலும் அகலும்.

• ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வதால் கிரக ரீதியிலான தோஷங்கள் விலகும்.

• புரட்டாசி சனிக்கிழமைகளில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, நாராயணா, கோபாலா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறவேண்டும். பணத்தை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக செலுத்தவேண்டும். தானமாகப் பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வேண்டும். சிலர் பெருமாள் தலங்களுக்கு நடைப்பயணமாகச் சென்று காணிக்கை செலுத்துவர். புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கட முடையானுக்கு பிரமோற்சவமும் நடைபெறுகிறது.

• புரட்டாசி 4வது சனிக்கிழமையன்று வறியவர்கள், எளியவர்கள் முதலியவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும். அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வணங்கி தானங்கள் செய்து, பெருமாளின் அருளைப் பெறுவோம்.

இன்று வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோயில்களுக்குச் சென்று பெருமாளையும் பிராட்டியையும் வழிபட்டு வளங்கள் பல பெறுவோமாக. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com