கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அகால மரணம் மற்றும் யம பயம் நீங்கணுமா? ஸ்ரீ வாஞ்சியம் ஆசன பைரவரை வணங்குங்க!

இன்று 31/10/2018 புதன் கிழமை ஆஸ்வீணம் மற்றும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்து தேய்பிறை

News image
Updated On :3 நவம்பர் 2018, 8:37 am

இன்று 31.10.2018 புதன் கிழமை ஆஸ்வீணம் மற்றும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்து தேய்பிறை அஷ்டமி ஈஸ்வராஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று காலை 11.11 மணி முதல் நாளை காலை 9.10 வரை அஷ்டமி திதி உள்ள நிலையில் பைரவ வழிபாடு செய்வது சிறப்பு என சாஸ்திரங்கள் கூறுகிறது. சீர்காழி சட்டநாதர், சென்னை கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி, தருமபுரியில் தகடூர் பைரவர் போன்ற  ஸ்தலங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

பைரவ மூர்த்தி

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும்  உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.

Story image

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். சிவபெருமானின்  திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள்புரிகிறார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும்  உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.

பைரவர் தோன்றிய வரலாறு

சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க  வைத்தார். குறிப்பாகப் பிரம்மனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார்."  பைரவனே! பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி"  என உத்தரவிட, உச்சந்தலையை அறுத்தெறிந்த பைரவர் பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்குத் தோன்றிய திருமால்," முன்னர்  பிரம்மன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அருளினார், இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிட்டீர், எனவே அவனை மன்னியுங்கள்!" என்றார். இதையடுத்து பிரம்மாவும்  மன்னிப்புக் கேட்டார்.
 

Story image

ஈசன் சினம் தணிந்து, “வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு" என அருளினார். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

அஷ்டமியும் பைரவ வழிபாடும்

திதிகளில் அஷ்டமி நாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை செய்ய உகந்ததாகப் போற்றப்படுகின்றது. அஷ்டமி திதிதியில் தான். பராசக்தியான அம்பாள் ஆயுதம் தரித்த நாளாகும். இந்த நாளில் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பாகும்.

Story image

பைரவரை  வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் அனைத்து வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது.

சனைச்சரனின் குரு பைரவர்

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.  தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம்  பெற்றுக்கொண்டார்.

Story image

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டுச் சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என  பைரவபெருமானிடம் விரும்பினார்.

ஜோதிடத்தில் காலபைரவர்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும்.  சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய்  கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலபுருஷனும் கால பைரவரும் ஒன்றே என்கிறது ஜோதிட சாஸ்திரம். சிவனின் ருத்ர ரூபமான கால  பைரவரும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர் என்பது இதனால் புலனாகிறது.

Story image

கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றைக் குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது  மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள்,  புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும். காலபைரவ மூர்த்தி காலனை  வென்றவர். மேலும், ஜோதிடத்தில் ஆயுள்காரகர் எனும் சனைஸ்வர பகவானுக்கே குருவானதால் பைரவரை வணங்குவோர்க்கு எம பயம் இருக்காது. மேலும் காலபைரவர் நாகபரணம் பூண்டு  விளங்குவதால் அவரை வணங்குவோர்களுக்கு விஷ ஜெந்துக்கள் மற்றும் நோய்களால் உபாதைகள் ஏற்படாது.

காலபுருஷ தத்துவம்

ஜோதிட சாஸ்திரப்படி மிகப்பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்தப் பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்கு காரணம்.  நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புண்ணியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்தப் பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்கப் போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

Story image

கால புருஷ தத்துவம் என்பது ஜோதிட கலையில் பொதுவான ராசி அமைப்பைப் பற்றி சொல்வது, இதன்படி மேஷம் முதல் வீடாகவும், மீனம் 12 ம் வீடாகவும் அமையும். சுய ஜாதக அமைப்பிற்குப் பலன் காணும்பொழுது, இந்த காலபுருஷ தத்துவ ராசிகளுடன் தொடர்புப்படுத்தி பலன் காண வேண்டும் அப்பொழுதுதான் பலன் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்.

காலபுருஷனும் கால பைரவரும்

சிவ ஸ்வருபமான கால பைரவரை ”மஹா கால’ என்றும், ‘காலாக்னீ ருத்ராய’  என்றும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் போற்றுகிறது. அதாவது பைரவ மூர்த்தியே மாபெரும் காலம், இறுதி நேரத்தில்  எல்லோரையும் விழுங்குபவர், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும். அவரது அருளால் மீண்டும் மறுசுழற்சியில் ஜீவன் உருவாகிறது. அதாவது கால பைரவர் குணத்தையும்  காலத்தையும் கடந்தவர். அவர் காலத்திற்கு கட்டுப்படாத தன்மையால் அவரை கால பைரவர் என வேதம் போற்றுகிறது.

Story image

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தலையில் மேஷ ராசியும், வாய் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

கால புருஷ சக்கரம்

பூமி 360 சுழற்சி பாகையில் தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால் உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற  தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களைக் கொண்டு ஜோதிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளை   அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை தரும் சனிதேவர் பணிந்தார். ஜோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும்  மேன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜாதகத்தில் செவ்வாயின் நக்ஷத்திரங்கள் புதனின் வீடுகளிலும் சனியின் வீடுகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம்  மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்னைகளை குறிக்குமிடமாகும்.  புதனின் மற்றோரு வீடான கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றை குறிக்குமிடம் ஆகும்.

நான்கு வேதங்களும் நாய் உருவில் வாகனமாகப் பைரவருக்கு அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட பைரவர் சிவபெருமானின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் சூரியன் மற்றும் தக்‌ஷிணாமூர்த்தியின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார்.

ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ  மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்  உடையவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.

பூசநக்ஷத்திரகாரர்கள் வணங்கவேண்டிய ஸ்ரீ வாஞ்சியம்

27 நட்சத்திரங்களில் எட்டாவதாக வரும் நட்சத்திரம் பூசம் ஆகும். இது கால புருஷ இராசியான மேஷத்திற்கு நான்காம் இராசியான கடக இராசியில் இடம் பெறும் நட்சத்திரமாகும். இதன் நட்சத்திராதிபதி சனைச்சரபகவான் ஆவார். இதன் அதிதேவதை பிருகஸ்பதி என்ற வியாழ பகவான் ஆகும். கால புருஷ ராசிக்கு குரு தர்ம ஸ்தானாதிபதியாகவும் சனி கர்ம ஸ்தானாதிபதியாகவும் வருவதால் குரு-சனி  இணைவைத் தர்ம கர்மாதி யோகம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நக்ஷத்திரங்களில் பூசத்தின் அதிபதி சனியாகவும் அதன் அதிதேவதை பிருஹஸ்பதி எனும் குருபகவானாகவும் இருப்பதால் பூச நக்ஷத்திரகாரர்கள் இயல்பாகவே தர்ம கர்மாதிபதி யோகம் பெற்றவர்களாக விளங்குவர்.

Story image

ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களில் எட்டாம் எண்ணைக் குறிக்கும் கிரகமாக சனி பகவான் திகழ்கிறார். பொதுவாக இந்த எட்டாம் எண் பெயரில் வந்தால் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகவே கருதப்படுகிறது. எட்டாம் எண்ணை கண்டால் கெட்டது சனி என்று பயப்படுகிறார்கள். சனீஸ்வர பகவான் கர்ம ஸ்தானாதிபதி என்றாலும் பாவாத்பாவத்தில் பத்துக்கு பத்தான ஏழாம் பாவத்தில் திக்பலம் பெறுகிறார். சனீஸ்வரபகவான் அல்ப விஷயங்களை சுருக்கி அற்புத விஷயங்களைப் பெருக்குபவர் ஆவார். எனவே எட்டாம் வீட்டின் 12ம் வீடான ஏழாம் வீட்டின் காரகங்களை  குறைத்தால் எட்டாம் வீட்டின் மூலமாக ஆயுள் கூடும். பத்தாம் வீட்டிற்கு ஏழாம் வீடான சுகஸ்தானத்தின் காரகங்களைக் குறைத்தால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். மொத்தத்தில் கேந்திர வீடுகளான 1-4-7-10ல் சனி நின்றுவிட்டால் அவர்களுக்கு திரிகோண வீடுகளான 1-5-9 சிறப்பாக அமைந்துவிடும்.

ஜாதகத்தில் எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் சனீஸ்வரரை தவிர எந்த கிரகம் நின்றாலும் அந்தக் கிரகமும் பாதிப்புக்குண்டாகி ஆயுளுக்கும் பிரச்னை ஏற்படுத்திவிடுவர். ஆனால் சனீஸ்வர பகவான் எட்டில் நின்றால் ஆயுளைக் கூட்டுவதோடு காரகோ பாவநாஸ்தி எனும் தோஷத்திருந்தும் விதிவிலக்கு பெறுகிறார். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை  நிர்ணயிக்கும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் கீழ்க்கண்ட அம்சங்களை நாம்  பார்க்கவேண்டும். 

சனைச்சர பகவான் ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதிமுக்கியமான பதவியில் இருப்பவர். சூரியபகவானின் இரண்டாவது புதல்வர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். ஈஸ்வர பட்டம்  பெற்றவர்களில் சனியும் ஒருவர். முதல் புத்திரர் யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர். சகோதரி யமுனை. சனி கர்ம வினை கிரகம். கலியுகத்தில்  சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்குப் பிடிக்காது.

ஒருமுறை எமதர்மன் தன் நிலையை எண்ணி வருந்தியபடி இருந்தார். எவ்வளவோ விதமான பதவி நிலைகள் இருந்தும் தனக்கு மட்டும் இப்படி உயிர்களைப் பறிக்கும் பாவ காரியம் செய்யும் பதவி ஏன்  வந்தது, என எண்ணி வருந்தினார். உயிர்வதை தொழிலைச் செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர்  தியாகராஜ பெருமானைக் கண்டு புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சினாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே  இத்தலம் வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார் எமதர்மன். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார்.

Story image

காசியில் இறைவனடி சேர்ந்தோருக்கு ஒரு சில மணித்துளிகளாவது பைரவவாதனை உண்டாம். ஆனால் இத்தலத்தில் பைரவர் யோகநிலையில் அருள் பாலிப்பதால், பைரவ உபாதை கிடையாது என்னும்  சிறப்புடைய தலம். ஏனெனில், பைரவர் ஒரு முறை சிவபிரானின் இஷ்ட திருத்தலமான இந்த ஸ்ரீவாஞ்சியம் வந்தடைந்து பொன்வண்டின் உருவத்தில் கடுந்தவம் இருந்து முக்கண்ணனைச் சரணடைய  இங்குள்ளவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என திருவாஞ்சிநாதர் அருளிச்செய்தார்.

இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்து விட்டு, தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருள்கிறார். இவர் நாய் வாகனமும் இங்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். இத்தல பைரவரை பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு மரண பயம் நீங்கி விதியிருப்பின் நீண்டகாலம் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதமங்கலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாஞ்சியம். குடவாசலில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருவாஞ்சியம் திருத்தலம்.

பைரவ உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு  வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் பைரவர். மனிதனின் நிம்மதியைப் பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.

 - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.