ஜோதிட ரீதியாகப் பெண் குழந்தை யாருக்கு?

ஜோதிடம் ஒரு கலை. ஜோதிடம் ஒரு கடல். அதனுள் இருப்பதையும் அதனை முழுமையாக..
ஜோதிட ரீதியாகப் பெண் குழந்தை யாருக்கு?

ஜோதிடம் ஒரு கலை. ஜோதிடம் ஒரு கடல். அதனுள் இருப்பதையும் அதனை முழுமையாக அறிவதும் இயலாத ஒன்றே. அறிந்தவற்றையும் அனைவராலும் ஒரு போல பலன் உரைப்பதும் அரிதே. 

உதாரணத்திற்கு, ஒரு அறையுள் நுழையும் நால்வரையும் அவர்கள் வெளி வந்த பிறகு, அவர்கள் அந்த அறையில் கண்ட மூன்று பொருள்களை மட்டும் கூறுங்கள் எனக் கேட்டால் அவர்களின் பதில் கண்டிப்பாக வெவ்வேறாகவே இருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அதுபோலவே, ஜோதிட விற்பன்னர்களும் அவர்கள் கற்றவற்றையும், பல ஜாதகங்களை ஆய்வு செய்ததன் விளைவாகப் பெற்ற அவர்களின் அனுபவங்களுமே ஒரு ஜாதக பலன்களாக வெளிவரச் செய்யும். 

இந்தக் கட்டுரை ஜோதிட பாடமாக இல்லாமல், சாதாரண பாமரருக்கும், ஜோதிடத்தின் மேல் ஆர்வம் அடைவதற்கும், ஜோதிடத்தில் பொதிந்துள்ள அளப்பற்கரிய தகவல்களின் ஒரு சில முத்து துளி சிதறல்களாகக் கொள்வதற்கு மட்டுமே, எனக் கொள்ள வேண்டுகிறேன்.

இன்றைய கால கட்டத்தில் நமக்குள்ள பிரச்னைகள் ஏராளம். அவற்றை எளிய முறையில் கண்டும் அதனை எதிர்கொள்ளும் விதங்கள் எவ்வாறு என அறியவும் நமது ரிஷிகளும், ஜோதிட அறிஞர்களும், முன்னோர்களும் முன்கூட்டியே தெளிவாகக் கூறியுள்ளதைப்பற்றி அறியவே இந்த சிறிய கட்டுரை. 

குழந்தை பாக்கியத்திற்கு தடை

5-ஆம் இடத்தில் ராகு-கேது இருந்தால் புத்திரதோஷம் என பொதுவாக கூறுவார்கள்.

5-ஆம் இடத்தில், நீச்சக் கிரகம் இருந்தால் புத்திர தடை ஏற்படும் அமைப்பாகக் கூறப்படுகிறது. 

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால் மட்டுமே தான் குழந்தை பாக்கியம் தடைப்படும். 

இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க வாய்ப்புண்டு. நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். 

பெண் குழந்தை யாருக்கு ?

ஜோதிட விதி :-1
5ம் பாவம் பெண் ராசிகளாக அமைவது

விளக்கம்:-
அனைத்து லக்கின ஜாதகருக்கும் , அவர்களின்  லக்கினத்துக்கு  5 ஆம் இடமாக ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆக வரும் போது .

ஜோதிட விதி :- 2
5ம் பாவத்தில் உள்ள கிரகம் பெண் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது,

விளக்கம்:-
பெண் கிரகங்கள் மற்றும் அவற்றின் நக்ஷத்திரங்கள்

சந்திரன் : ரோகிணி , அஸ்தம், திருவோணம். 

சுக்கிரன் : பரணி, பூரம், பூராடம்.

5-ஆம் பாவத்தில் உள்ள கிரகம் மேற்படி நட்சத்திரத்தில் அமர்ந்தால், பெண் குழந்தை நிச்சயம். 

ஜோதிட விதி :- 3
5 ஆம் பாவாதிபதி  2 அல்லது 8ல் இருத்தால் பெண் குழந்தை பாக்கியம் என்கின்றன ஜோதிட நூல்கள்.

ஜோதிட விதி :- 4
அனைத்து லக்கின ஜாதகருக்கும், அவர்களின்  லக்கினத்துக்கு 5ம் வீட்டில் சந்திரன்-சுக்கிரன் இருவரும் சேர்ந்து இருந்தால் முதலில் பெண் குழந்தை.

ஜோதிட விதி :- 5
5 ஆம் அதிபதி, பெண் கிரகமாகி அது, பெண் ராசியில் இருந்து, நவாம்சத்திலும் பெண் ராசியில் இருந்தால், முதலில் பெண் குழந்தை பிறக்கும். 

விளக்கம்:-
5 ஆம் அதிபதி, பெண்  கிரகமாகி, அதாவது பெண்  கிரகங்களான  சந்திரன் , சுக்கிரன்  5 ஆம் அதிபதியாகி, அது பெண்  ராசிகளான, ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்  இவற்றுள் இருந்து, நவாம்சத்திலும், பெண் ராசியில் (ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்) இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகருக்கு முதலில் பெண்  குழந்தை பிறக்கும்.

பாமரரும் ஜோதிட அறிவைப் பெறுவதற்கும், தமக்குப் பெண் குழந்தை பாக்கியம் உண்டா, என அறிவதற்கும் இவைகள் கூறப்பட்டது. மேலும் துல்லியமாக அறிவதற்கு, ஆழ்ந்த ஜோதிட அறிவும், அனுபவமும் உள்ள ஜோதிடரை அணுகுதல் சிறந்த தீர்வாகும்.
                                                                   
ஜோதிடத்தில் கூறப்பட்டவை அனைத்தும் ஒரு முன் எச்சரிக்கையே அன்றி, பயப்படத் தேவை இல்லை. அதில் கூறப்பட்டவைகளை அறிந்து ஆன்ம பலம் பெற்று, துணிந்து எதிர் நீச்சல் போடுவதற்கும்,  நம் கர்ம வினைப் பயனால் நடப்பதென்று அறிந்து நம்மை நாமே நெறிப்படுத்தலுக்குமே இவை என உணர்வது முக்கியமாகும். 

பாரம்பரிய ஜோதிட முறையின் ஆதி / முதல் கர்த்தாவான (படைப்பாளியான ) பராசரர் முனிவர் அவர்களிடம், அவரின் சீடரான மைத்ரேயர் ஒருமுறை, பாமரரும் ஜோதிடத்தை அறிந்து கொள்ள எளிய, இயன்ற வழி ஏதேனும் உள்ளதோ என வினவினார். அதற்கு, பராசரர் முனிவர், நிச்சயம் உள்ளது மற்றும் அதன் வழியில் ஒருவரின் ஜாதக பலனை எளிய வகையிலும், துல்லியமாகவும் பலன் உரைக்க இயலும் எனக் கூறினார். அதுவே அஷ்டக வர்க்க முறையாகும். எளிமையான கணக்கு வழியில் பாமரரும் அறிய முடியும் அதனை, அடுத்து வரும் கட்டுரைகளில் காணலாம். 

- ஜோதிட ரத்னா தையூர், சி. வே. லோகநாதன்    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com