சுடச்சுட

  

  வக்கிரம் பெறும் கிரகங்களும் அதன் பலன்களும்!

  By - ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்  |   Published on : 14th March 2019 12:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astrologiya

   

  1. எல்லா கிரகங்களும் ராகு, கேது தவிர்த்து நேர்வட்ட பாதையில் கடிகாரமுள் சுற்றும் வலப்பக்க திசையில் நகர்ந்து 12 ராசிகளை கடந்து வரும். நிழல் கிரகங்களான, ராகு - கேதுக்கள் மட்டும் கடிகாரமுள் சுற்றும் திசைக்கு நேர் எதிராக இடப்பக்க திசையில் நகர்ந்து 12 ராசிகளை கடந்து வரும். இதில் சூரியன் மற்றும் சந்திரன் இவைகள் வக்கிரம் பெறுவது கிடையாது.

  கிரகங்கள் அவை நகரும் / பயணப்படும் வேளையில் கண்ணுக்குத் தெரியாத சில எதிர்ப்பு சக்திகளால் அவைகள் பயணப்படாமல் அப்படியே சிறிது காலம் நிலையாக நின்று, பின்னோக்கி நகர்ந்து மேலும் நேர்பாதையில் பயணத்தைத் தொடரும். இதில் பின்னோக்கி நகர்ந்து செல்லும் செயலே வக்கிர நிலை எனப்படும்.   

  2. ஒரு கிரகம் வக்கிரமடைந்து, அஸ்தங்கம் அடையாவிட்டால் மிகவும் வலுவாகக் கருதப்படும். அதே போல் வக்கிரமடைந்த ஒரு கிரகம் உச்சமடைந்திருந்தாலோ அல்லது பகை வீட்டில் அமர்ந்தாலோ, அந்த கிரகம் வலுவாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் வக்கிர பலம் பெற்ற ஒரு கிரகம் அசாதாரண தன்மை அல்லது விபரீதமான நிலை பெற்று பலன்தர வல்லது. 

  3. வக்கிரமடையும் எல்லா கிரகங்களும் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5-ம் இடத்திற்கு வருவதிலிருந்து வக்கிரமடையும். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5, 6, 7, 8-ம் இடத்தில் உள்ள கிரகங்கள் வக்கிர நிலை அடையும். புதன் ஒரு வருடத்திற்கு 3 முறையும், சனி மற்றும் குரு ஒவ்வொரு வருடத்தில் சில மாதங்களும், செவ்வாய், சுக்கிரன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் வக்கிர கதி பெறும். ராகு, கேதுக்கள் எப்பவுமே வக்கிர கதி பெறும். 

  4. கேடு விளைவிக்கும் பாப கிரகங்கள் வக்கிர நிலை பெறும்போது கெட்ட மற்றும் எதிலும் சாதகமற்ற சூழலையே தரும். அதே சுப கிரகங்கள் வக்கிர நிலை பெறும்போது நல்ல மற்றும் எதிலும் சாதகமான சூழலையே தரும். வக்கிர நிலை பெறும் கிரகமானது அது கடந்து வந்த முன் ராசியில் என்ன நிலை கொண்டிருந்ததோ அந்த பலனையே தற்போது வக்கிர நிலை பெற்ற ராசியில் அளிக்கும். 

  5. ஒரு கிரகத்திற்கு மேல், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் வக்கிரகதி அடைந்திருந்தால் எந்த வக்கிரம் பெற்ற கிரகம் அதிக பாகை கொண்டுள்ளதோ அதுவே அதிக விளைவை, அது நல்லதையோ / கெட்டதையோ ஏற்படுத்தும். உச்சமடைந்த நிலையில் ஒரு கிரகம் வக்கிரமடைந்தால், ஜாதகருக்கு, அது தனது உதவும் சக்தியை இழக்கும். அதுவே , நீச்ச நிலையில் ஒரு கிரகம் வக்ரமடைந்தால் , ஜாதகருக்கு, அது தனது உதவும் சக்தியை பல வழிகளில் உதவிடச் செய்யும். ராசியில் இல்லாமல், ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தின் நவாம்சத்தில் நீச்ச நிலையில் வக்ரமடைந்தால் அது ஜாதகருக்கு உதவும் நிலையைத் தரும். 

  6. 1, 5, 9 ஆம் வீட்டின் அதிபதி ஆகி (அதனுடன், 6, 8,12 ஆம் வீட்டின் அதிபதியும் ஆகாமல்) வக்கிர நிலை பெறும்போது, ஜாதகருக்கு மிகவும் அந்த கிரகம் உதவி புரிவதாய் இருக்கும். பல மேதைகளும், தலைவர்களும் அவர்தம் ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற கிரகம் இருப்பதைக் காணமுடிகிறது. வக்கிரம் பெற்ற கிரகம் மற்றும் மறுபிறவி- பாகம் 2 எனும் நூலை எழுதிய மார்ட்டின் ஷுல்மான் கூறுவார், கடந்த பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களைத் தாங்கி இந்த பிறவியில் பிறந்திருப்பவர்கள் ஜனன ஜாதகத்தில், வக்கிர நிலை பெற்ற கிரகம் / கிரகங்களைக் கொண்டிருப்பர். 

  7. வக்கிர நிலை பெற்ற கிரக அமைப்பு, ஒருவரின் ஜாதகத்தில் இருப்பின் அவர் பல்நோக்கு பரிமாணத்தைப் பெற்றிருப்பார் .இப்படிப்பட்டவர் ஒன்று இந்த பிறவியில் கீழ்நிலை பெற்றோ அல்லது மேல்நிலை பெற்றோ இருந்து மற்ற பாதியை இந்த பிறவியில் அடையாமலே இருப்பார் என்பது நிதர்சனம். 

  8. வக்கிர நிலையை வெறுமனே அதனைக் கண்டது போல் எடுத்துக்கொள்ளாமல், பல்வேறு கருத்துக்களைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்பதனை மறந்துவிட கூடாது. வக்கிரம் பெற்ற கிரகங்கள் 2 அல்லது 7-ம் இடத்துடன் தொடர்புகொள்ளுமே என்றால் அது கணிசமாகத் தொல்லையை ஏற்படுத்தும். 

  9. தற்போது, வக்கிரம் பெற்ற கிரகங்கள் தரும் முடிவுகளைப் பார்ப்போம். இவை பொதுவானவையே அன்றி தாங்களாகவே, இதனையே முடிவாக எண்ணி மிகுந்த மகிழ்ச்சி பெறவோ அல்லது மிகுந்த வருத்தப்படவோ தேவையில்லை. தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள, அனுபவமிக்க ஜோதிடர்களின்  துணைகொண்டு சரியான நிலையை அறியவும். 

  10. சுக்கிரன் வக்ரமடைந்த ஜாதகருக்குரிய பலன்கள்:- பாசத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பாக, மறு பரிசீலனை செய்வது மற்றவர்களுடன், அசிங்கமாக தொடர்புப்படுத்திப் பார்ப்பது. மற்றவர்களின் பாசத்தை சந்தேகிப்பது உறவுகளிடம் மிகுந்த அன்போடு இருப்பது மற்றவர்களின் அர்ப்பணிப்பை ஏமாற்றுவது அல்லது கைவிடுவது. தமக்குத் தாமே, கடின பிரயாசை மூலம் பெறும் மகிழ்ச்சியைத் தடுத்துக்கொள்வது. 

  பெற்றோர்களுக்கான அறிவுரை:- அழகு, அனைத்துவித கலை, தினம்தோறும் அனைவரிடமும் காட்டும் அன்பு அத்தனைக்கும் காரகரான / அதிபதியான சுக்கிரன், சிறு குழந்தைகளின் ஜனன ஜாதகத்தில் வக்கிரம் பெற்றிருக்கும் போது, பெற்றோர்கள் தற்போதைய சூழலில் அனைத்து தரப்பு மனிதர்களிடமும் அன்புடனும், நேசத்துடனும், மரியாதையுடனும் பழக ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கவேண்டும். 

  11. செவ்வாய் வக்ரமடைந்த ஜாதகருக்குரிய பலன்கள்:- கோபத்தை வெளிப்படுத்தும் முன் மறுபரிசீலனை செய்வது, போட்டி சூழ்நிலைகளில் கையாள சிரமப்படுவது, அடக்குவதற்கு முனைதல் மனஅழுத்தம்.   

  பெற்றோர்களுக்கான அறிவுரை:- செவ்வாய் வக்ரமடைவு என்பது, அதிக ஆன்மீக ஆசையைத் தூண்டும், அதனால் நல்ல சத்துள்ள உணவு , அதிக தூக்கம், வெளி வட்டார உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை செய்வதால் அந்த குழந்தைகள், தமது உடல் தெய்வத்தின் கோயில் என உணரும் வகை செய்ய வேண்டும். 

  12. குரு  வக்ரமடைந்த ஜாதகருக்குரிய பலன்கள்:- நம்பகத்தன்மையை சந்தேகிப்பது தம்மை உள்ளுக்குள் உயர்வாக எண்ணுவது ஏராளமான மனோபாவத்துடன் இருப்பது மத சம்பந்தமான கேள்விகளை அகத்தே கொண்டிருப்பது 

  பெற்றோர்களுக்கான அறிவுரை:- அதிக கண்டிப்பு, உள் மனதில் நிம்மதியற்ற தன்மையை அளிப்பதோடு, அவர்கள் வாய் திறந்து எதனையும் பேச தயங்குவார்கள். எனவே குழந்தைகளைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதும், பல செயல்களில் ஈடுபடுத்துவது மட்டுமே அவர்கள் எது முக்கியத்துவம் என்பதனை அறிய முயலுவார்கள். 

  13. சனி வக்ரமடைந்த ஜாதகருக்குரிய பலன்கள்:- தாழ்வு மனப்பான்மை உணர்வது, எதிலும், போதாமையை உணர்வது, பயத்தை மறைப்பது. 

  பெற்றோர்களுக்கான அறிவுரை:- தனி மனித ஒழுக்கம் , கட்டுப்பாடு என்பது, தனி மனித விளையாட்டுகளான நீச்சல், டென்னிஸ், மலை ஏற்றம் போன்றதான விளையாட்டுகளில் பெற்றோர், ஈடுபடுத்தும் போது மிகவும் உதவி புரிவதாக இருக்கும். சனி கிரகம் மட்டுமே தனிமனித ஒழுக்கத்துக்கு காரகர் ஆவார்.
                 
  இக்கட்டுரையில், கூறப்பட்ட அனைத்துமே, ஜோதிடத்தை அறியவும் மற்றும் சிறிது புரிதலுக்குமே அன்றி இதனை அப்படியே பலனாக ஏற்று மகிழ்ச்சி உறவோ, வருத்தப்படவோ அல்லாமல் சிறந்த ஜோதிட தகவலாக மட்டுமே கருதி, தங்களுக்கு அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களை நாடி ஜோதிட பலன்களைக் கண்டு, சீரடி பாபாவின் ஆசியுடன் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். 

  - ஜோதிட ரத்னா" தையூர். சி. வே. லோகநாதன்     

  சந்தேகங்களுக்கு: 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai