வறுமை போக்கும் பிக்ஷாடன கோலம்: யாசக யோகம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்
வறுமை போக்கும் பிக்ஷாடன கோலம்: யாசக யோகம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். அதிலும் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆரம்பித்துவிட்டால் மயிலாப்பூர் வாசிகளின் மகிழ்ச்சியைக் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் திருமயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று (19/3/2019) செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனிப்பெருவிழா நாள் 9 உற்சவமாக கபாலீஸ்வரர் பிக்ஷாடனகோலத்தில் திருவீதி உலா வர இருக்கிறார். வாழ்வில் பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் கூட இந்த கோலத்தில் தரிசித்தால் வாழ்வில் வறுமை நீங்கிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

பிக்ஷாடனர் கோலம்

சிவாலயங்களில் நடைபெறும் பிரம்மோத்சவ (திருவிழா) காலங்களில் ஒருநாள் மட்டும் உடலில் ஆபரணங்களும் அலங்காரமும் இல்லாமல் கையில் கபாலம் ஏந்தி பிட்சாடன வடிவில் உலா வருவார். அந்தச் சமயத்தில் அனைவரும், குறிப்பாக அனைத்து வியாபாரிகளும், அந்த சிவனின் கையிலுள்ள கபாலத்தில் காணிக்கையாக தனம், பணம் போடுவார்கள். ஆனால், நம்மிடமுள்ள அகந்தை, ஆணவம் பொறாமை போன்ற தீய குணங்களையும் ஆசை, பாசம் முதலானவற்றையும் ஈசன் நம்மிடம் யாசிக்கிறார். இவை இருக்கும் வரை ஈசனாலும் நமக்கு ஞானத்தை உபதேசிக்க முடியாது. ஆகவே, பக்தனான நமக்கு அருள் செய்வதற்காக நம்மிடம் (நமது இருப்பிடம்) வந்து யாசிக்கும் ஈசனிடம் நம்மிடமுள்ள தீய குணங்களைப் பிக்ஷையாகப் போட்டுவிட(விட்டு) வேண்டும். இதன் அடையாளமாகவே பணமும் பொருளும் உலா வரும் பிக்ஷாடன மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 

பிக்ஷாடனர் யார்?

தக்ஷிணாமூர்த்தி, ஏகபாத மூர்த்தி, கல்யாண சுந்தரர், பைரவர், நடராஜர், வீரபத்திரர் உட்பட சிவபிரான் வெளிப்பட்ட வடிவங்களுக்குள் ஆண்டி கோலத்துடன் கையில் கபாலம் ஏந்தி (பார்வதியிடம்) பிட்சை எடுக்கும் பிக்ஷாடனரும் ஒருவர். ஒருசமயம் சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மதேவர், அகம் பாவத்துடன் கயிலாசத்தில் சிவனைப் போலவே வலம் வர, அதைக் கண்டு பார்வதி கலங்க, பிரம்மாவின் ஆணவத்தை அடக்க, சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி விடுகிறார். அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. அத்துடன் பிரம்மாவின் பாதி கபாலமும் (மண்டை ஓடும்) சிவனின் கையில் ஒட்டிக் கொள்கிறது. அந்த பிரம்ம கபாலம் முழுவதும் ஏதாவது பொருட்களால் நிறைந்தால்தான் சிவனின் கையை விட்டு நீங்கும்.

அதுவரை சிவன் பிட்சை எடுத்தாக வேண்டும். ஆகவே, அந்த சமயத்தில் பிட்சாண்டாராக சிவன், பார்வதி தேவியிடம் கபாலத்தை நீட்டுகிறார். அன்னை பார்வதியும் சிவனுக்கு பிட்சையிட கபாலம் நிறைந்தது. சிவனின் கையிலிருந்தும் விலகியது. இதை நினைவுபடுத்தும் விதமாகவே இன்றும் திருச்சிக்கு அருகிலுள்ள உத்தமர் கோயில் என்னும் பிட்சாண்டார் கோயிலிலும், வாரணாசி என்னும் காசியிலும் மற்றும் பல இடங்களிலும் சிவன் பிக்ஷாடன மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

ஜோதிடத்தில் யாசக யோகம்

ஜோதிடத்தில் சூரியனையும் சந்திரனையும் ராஜ கிரகங்கள் என சிறப்பித்துப் போற்றப்படுகிறது. மேலும் சூரியனை ஆதம காரகன் மற்றும் பித்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திரனை மனோ காரகன் என்றும் மாத்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் அனைத்து நல்ல பலன்களும் ஜாதகர் அனுபவிக்க முடியும்.

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். சந்திரனை "சந்திரமா மனஸோ ஜாத" வேதம் போற்றுகிறது. இவரே உடலுக்கு காரகன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சிகொடுப்பவர் ‘சர்வம் சந்திர கலாபிதம்‘என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி 'நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?' என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்மராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்ட சனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7-ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பௌர்ணமி.

அமாவாசை யோகம், பௌர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திரயோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களைத் தருபவர் சந்திரன். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன். சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும்.

குரு சந்திர யோகம்

சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிகரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல், பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சந்திரன் குரு மற்றும் சனியுடன் அசுப சேர்க்கை பெற்று ஏற்படும் யோகம் யாசக யோகம் எனப்படும்.

யாசக யோகம்

லக்னத்தில் சந்திரன் இருக்க, சனி கேந்திரத்தில் இருக்க குரு 12-ல் இருக்க யாசக யோகம் உண்டாகும்.

பலன்

இந்த அமைப்பு உடையவர்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவார்கள். 6, 8, 12ல் லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள். யாசக யோகம் என்பது துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மிக உன்னத யோகமாகும். ஆதிசங்கரர் உலக நன்மைக்காக பிச்சை எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இல்லற வாசிகளுக்கு இந்த யோகம் சிறப்பல்ல. யாரும் விரும்ப மாட்டார்கள்.

இன்றைய கோச்சாரத்தில் குருவின் வீடான மீனத்தில் சூரியன் குருவின் பார்வையோடு நின்று சூரியனின் வீடான சிம்மத்தில் சந்திரனும் நிற்கும் நிலையில் உலக நன்மைக்காகவும் தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கவும் குபேரனுக்கே செல்வமளிக்கும் சிவபெருமான் பிக்ஷாடனர் எனும் கோலம் கொண்டது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பிக்ஷாடன கோலத்தில் இன்று இரவு காட்சிதர இருக்கும் கபாலீஸ்வரரை தரிசித்தால் சந்திரனால் ஏற்படும் அசுப யோகங்களும் தாரித்ரியமும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நிதர்சனம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com