ஜாதகருக்கு திடீர் தடுமாற்றம் பாதகமா! சாதகமா!!

ஜாதகத்தில் யோகர், உச்சம், நீச்சம், பகை பெற்ற கிரகங்கள் என்று வரைமுறைப்படுத்தி
ஜாதகருக்கு திடீர் தடுமாற்றம் பாதகமா! சாதகமா!!

ஜாதகத்தில் யோகர், உச்சம், நீச்சம், பகை பெற்ற கிரகங்கள் என்று வரைமுறைப்படுத்தி அவர்களின் பாவத்திற்கு ஏற்ப குறை நிறைகளை மட்டும் பார்க்கும்பொழுது திருப்தி பெறாது. அதில் ஒரு முக்கிய திருப்புமுனை பாதக ஸ்தான அதிபதிகளைக் கட்டாயம் பார்க்கவேண்டும். சிலருக்கு ஜாதக கட்டத்தில் குரு நீச்சம் பெற்றுவிட்டால் என்னடா இது முக்கிய சுபர் என்று கூறப்படும் குரு வலுஇல்லாமல் இருக்கிறாரே என்று வருத்தப்படுவது உண்டு. அதில் சூட்சமமாக நம்மைப் படைத்தவன் அதில் ஒரு நல்லதையும் வைத்திருப்பர். அந்த குருவனானவர் பாதகாதிபதியாக வேலை செய்பவராக இருந்தால் நல்லது அதாவது "கெட்டவன் கெட்டுவிட்டால் நல்லது" என்ற விதிக்கேற்ப பலனைக் கொடுக்கும்.

ஜோதிட விதிப்படி அனைத்து கிரகங்களும் வலுப்பெறக்கூடாது என்பது சூட்சமம். முக்கியமாக பாதகத்தை ஏற்படுத்தும் கிரகங்கள் வலுப்பெறாமல் இருப்பது சாலச்சிறந்தது. அதாவது கணிதவியல் முறைப்படி minus(–) x minus(–) = (+) பிளஸ் என்ற விதி இதற்குப் பொருந்தும். ஜென்ம ஜாதாத்தக்தில் சூட்சமப்படி வில்லன்கள் உண்டு அவற்றில் பொதுவான பன்னிரண்டு லக்கினக்காரர்களுக்கும் ஒவ்வொரு பாதக வில்லன் உண்டு அவர்கள் யார் என்று பார்ப்போம். அவரே பாதகாதிபதி அவர் நம் பிறக்கும்பொழுது நம் தலையில் எழுதப்பட்டவர்கள். ஓடிக்கொண்டே இருக்கும் வாகனம் திடீர் பாதகத்தைத் தருவது இந்த பாதகாதிபதிகளின் வேலைகள்.

பிரச்னைக்குரிய காரணிகள் யார்? 

ஜாதகத்தில் உள்ள லக்கினங்களின் இயக்கம் என்று கூறும்பொழுது மூன்று வகை வேக ஓட்டம் கொண்டது அவை..

சரம் லக்கினக்காரர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் நிற்காமல் ஓடும் ஆறாக மற்றும் ஓடையாகத் திகழ்வார்கள். இந்த சர தன்மை கொண்டவர்கள் மேஷம், கடகம், துலாம், மகரம் லக்கினக்காரர்கள். ஸ்திரம் லக்கினக்காரர்கள் ஒரே இடத்தில் நின்று நிலையாக இருக்கும் குளம் மற்றும் குட்டை போன்றவர்கள். இந்த ஸ்திர தன்மை கொண்டவர்கள் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் லக்கினக்காரர்கள்.

உபயம் லக்கினக்காரர்கள் ஒரே இடத்திலிருந்தும் நில்லாமல், அசைந்தும் அசையாமலும் இரண்டு தன்மையாக இருப்பவர்கள். மொத்தமாக சரம் மற்றும் ஸ்திரம் கலந்த கலவை என்று சொல்லலாம் இந்த உபய தன்மை கொண்டவர்கள் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்கினக்காரர்கள். நான் பார்த்த நிறைய ஜாதகங்களில் உபய லக்கினக்காரர்கள் மண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை. உபய லக்னத்திற்கு 7-ம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் அந்த ஸ்தானத்திற்கு ஏற்ப பலன் அளிக்கப்படும்.

மேலே கூறிய மூன்று தன்மை கொண்ட குண நலன்கள், எண்ணங்கள், வேலை இருக்கும் இடம் என்று மாறுபாடுகள் பிரிக்கப்படும். இந்த அடிப்படையில் தான் பாதகாதிபதிகளும் இருப்பார்கள். ஜாதகத்தில் சர லக்கினகாரர்களுக்கு 11-க்குரிய கிரகம் பாதகாதிபதியாகவும், ஸ்திர லக்னகாரர்களுக்கு 9-க்குடையவர் பாதகாதிபதியாகவும்,  உபய லக்னகாரர்களுக்கு 7-க்குடையவரும் பாதகாதிபதியாகவும் இருந்து, பாதகாதிபதி தசாவோ அல்லது அதன் புத்தி காலங்களில் பாதகத்தைக் கட்டாயம் அனுபவிப்பர். அது ஜாதகருக்கு தாங்கமுடியாத வேதனையை சிலருக்கு மரணத்திற்கு ஈடான துன்பத்தைத் தரும்.

லக்கினத்திற்கு ஏற்ப யார் அந்த பாதகாதிபதிகள் என்று பார்ப்போம்: 

மேஷம், ரிஷபம்     :    சனி

மிதுனம், கன்னி     :    குரு

கடகம், கும்பம்      :    சுக்கிரன்

சிம்மம், மகரம்     :    செவ்வாய்

துலாம்              :    சூரியன்

விருச்சிகம்     :    சந்திரன்

தனுசு, மீனம்         :    புதன்
            
இங்கும் ஒரு சூட்சமம் உண்டு எடுத்துக்காட்டாக மேஷத்திற்கு சனி தான் கர்மாதிபதியாகவும் லாபதிபதியாகவும் இருந்து திடமான ஓட்டத்தில் நடத்திக்கொண்டு இருப்பார். அவருக்கு அதிகமான லாபத்தையும் திருப்தியான வாழ்க்கையும் தந்து கொண்டு இருக்கும்பொழுது திடீர் என்று அவரை மேலிருந்து தள்ளியும் விடுபவரும் சனியாக இருப்பார். ஏனென்றல் அங்கு சனிக்கேஸ்வரன் கர்ம பதிவுக்கு ஏற்ப பாதகாதிபதி வேலைகளை செய்வார். அவரே பாதகாதிபதியாக வருவதால் சனி தசா புத்தியில் அவருக்கு அதிக பாதிப்பு வேலையில் அவமானமோ, கெட்ட பெயரோ அல்லது வேலையினால் லாபம் பெறமுடியாமல், தீராத நோயாகவோ, மரணத்திற்கு நிகரான செயலோ ஏற்படுத்துவார்.

சிம்மத்திற்கு பூரண யோகத்தைத் தரக்கூடிய ஒன்பதுக்கு உடைய செவ்வாய் அதன் பாதக நிலையும் செய்யக்கூடிய வல்லமை கொண்டது. இங்கு யோகர் பாவியாக மாறும் காலமும் வரும். பாதகாதிபதியோடு சேரும் கிரகம் மற்றும் பாதக ஸ்தானத்தில் ஒரு கிரகம் இருக்கின்றது என்றால், அக்கிரகத்தின் காரகத்துவ விஷயத்தில் மிகவும்  உஷாராக இருப்பது உத்தமம். ஒரு பெண் வைத்திருப்பவர் 4, 5 பாதக ஸ்தான தொடர்பு பெற்றால் அவர்கள் அந்த பெண்ணின் மீது ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் மீது கவனமாக இருக்கவேண்டும். அந்த பெண்ணின் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப அந்த பாதகம் அமையப்பெறும். அதேபோல் ஒரு ஜாதகருக்கு 5ம் அதிபதி பாதக ஸ்தானத்திலிருந்தால், அது ஏழு பன்னிரண்டு தொடர்பு பெற்றால் காதல் திருமணம் கசக்கும். 

பாதகாதிபதி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த பாவப் பலன் பாதிக்கப்படுகிறது என்று இருந்தாலும் அதன் அளவுக்கு ஏற்ப மாறுபடும். எந்த ஒரு ஜாதகத்திலும், பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது. அதாவது பாதகாதிபதி கிரகம் வலுவான இடங்களில் அமர்ந்து, ஸ்தானபலம் பெறுவது நல்லதல்ல. அப்படி வலுவானால் முதலில் அனைத்து நல்லவைகளையும் நடத்தி, முடிவில் பெரும் பாதகத்தை அவர் செய்வார். 

எப்பொழுது பாதகத்திலிருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கலாம். யோகம் என்று கூறப்படும் கேந்திர திரிகோணங்களில் உள்ள பாதகாதிபதிகள் வக்கிரம் பெரும்பொழுதும் அதன் வலுக் குறையப்படும். பாதகாதிபதிகள் பகை, நீச்சம் பெற்றோ பகை பெற்றோ, சூரியனுக்கு மிக அருகில் உள்ள பாகையில் அமையப் பெற்றாலும், திதி சூன்ய ராசியில் அடிபட்டு இருந்தாலும் பாதகாதிபதி பாதகப் பலனைச் செய்வதில்லை மற்றும் சிலருக்கு குறைந்த பாதகத்தை தருகிறது.

அதேபோல் பாதகாதிபதிகள் 6,8,12-க்கு மறைவு பெற்றால் அவர்களின் கெடுதல் தன்மையை கர்மாவின் அடிப்படையில் குறைக்கப்படும்.  உதாரணத்திற்கு ஒரு கொடிகட்டி பரந்த ஒரு சினிமா நடிகர் அவரின் பாதகாதிபதி தசாவில் அந்தந்த பாவத்திற்கு ஏற்ப மான, அவமானங்களில் அடிபட்டு தன்னை துறையிலிருந்து தள்ளிவைக்கப்படும். சிலசமயம் அதன் விகிதாச்சாரம் மாறுபடும். அதுவே அவர் 6,8,12-க்கு மறைவு பெற்றால் பாதகத்திற்கு மாறாக லக்கின வலுவிற்கு ஏற்ப சினிமா துறையில் உயர்வு பெறுவார்கள். 

ஜாதகம் அஷ்ட வர்க்கத்தில் பாதகதிகள் பரல் குறையப் பெற்றால் பாதகதிகள் தாக்கம் குறைக்கப்படும். எதுவாக இருந்தாலும் எம்பெருமான் செயல் என்று நம் வாழ்வினை அவன் பாதம் கொடுத்துவிடுவோம். பன்னிரண்டு லக்கினங்களில் சரம் - ஸ்திரம் - உபயம் மூன்று இயக்கம் ஜாதகருக்கு எவரெல்லாம் உயர்வுபடுத்தும் என்று பின்பு வரும் கட்டுரையில் பார்ப்போம்.

குருவே சரணம் !

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com