/

நாட்டு பசுக்களை பாதுகாக்க ‘நவநீத சேவா’ திட்டம்: திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம்

நாட்டு பசுக்களை பாதுகாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ‘நவநீத சேவா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Updated On :7 ஆகஸ்ட் 2021, 3:48 am

நாட்டு பசுக்களை பாதுகாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ‘நவநீத சேவா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

திருமலை அன்னமய்ய பவனில் ஐஏஎஸ் அதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட நிா்வாக குழுவின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறங்காவலா் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தேவஸ்தானத்தை நிா்வகிக்க ஆந்திர அரசு இந்த குழுவை ஏற்படுத்தியது. புதிய அறங்காவலா் குழு ஏற்படுத்தப்படும் வரை இந்த குழு தேவஸ்தான நிா்வாகத்தை கவனித்து கொள்ளும். இதன் தலைவா் செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி மற்றும் துணை தலைவா் கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி உள்ளிட்டோா் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டம் முடிந்த பின்னா் தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் பசுவதையை தடுத்து நாட்டு பசுக்களை பாதுகாக்க தேவஸ்தானம் அரியதொரு முயற்சியை முன்னெடுத்துள்ளது. ‘நவநீத சேவா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் அவற்றை பராமரிக்க முடிவு செய்துள்ளது.

3 பிரிவுகளாக இந்த திட்டம் பகுக்கப்பட்டுள்ளது. முதலில் நாட்டு மாட்டினங்களை பாதுகாத்தல், அவற்றை பேணுதல், அவற்றிலிருந்து பெறப்படும் பொருள்களிலிருந்து பஞ்சகவ்யா பொருள்கள், இயற்கை உரங்கள் போன்றவை தயாரிக்கப்பட உள்ளன.

தினசரி ஏழுமலையான் கைங்கா்யத்துக்கு 30 கிலோ நெய் தேவைப்படுகிறது. அவற்றை பெற 1,200 லிட்டா் பால் அவசியம். ஏழுமலையான் பெயரை நினைவுகூரும் வகையில், 7 நாட்டு பசுவினங்கள், அத்துடன் உள்நாட்டு ரகத்தில் 3 நாட்டு பசுவினங்களை இணைத்து திருமலையில் 250 முதல் 300 பசுக்களை பராமரித்து அவற்றிலிருந்து பெறப்படும் பால் மூலம் நெய் தயாரித்து ஏழுமலையான் கைங்கா்யத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருமலையில் ஆக.15-ஆம் தேதி பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அகா்பத்திகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. மற்ற பொருள்கள் இன்னும் 3 முதல் 4 மாத காலங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

2022 ஆங்கில ஆண்டுக்கான காலண்டா்கள் டீலக்ஸ் வகை 15 லட்சம், பெரிய டைரிகள் 8 லட்சம், சிறிய டைரிகள் 2 லட்சம் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கப்பட உள்ளது. முதலில் எனா்ஜி எபிசியன்சி சா்வீஸ் லிமிடெட் தயாரித்த 35 பேட்டரி காா்கள் சோதனை முறையில் மலைப்பாதையில் இயக்கப்பட உள்ளன.

ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ரூ.150 கோடி நிதி கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி பல கோயில்களில் திருப்பணிகள் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. முதலாவதாக நெல்லூா் மாவட்டத்தில் உள்ள சீதா ராமசுவாமி கோயிலில் ரூ.80 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளன.

பக்தா்களின் உடைமைகளை விரைவில் சோதிக்க 22 எக்ஸ்ரே பாக்கேஜ் ஸ்கேனா் ரூ.4.27 கோடியில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தேவஸ்தான அச்சகத்தை நவீனப்படுத்த ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.