குருப் பெயர்ச்சி பலன்கள் 2022: கன்னி

கன்னி ராசிக்கு 2022-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
குருப் பெயர்ச்சி பலன்கள் 2022: கன்னி
Published on
Updated on
3 min read

கன்னி ராசிக்கு 2022-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கன்னி ராசி அன்பர்களே நீங்கள் அம்மான்கிரகம் என்று அழைக்கப்படும் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். 
13-04-2022 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை லாப - ராசி - தைரிய வீரிய  ஸ்தானங்களின் மீது விழுகிறது.

இந்த குரு பெயர்ச்சியில் பிறருக்கு நல்வழிகாட்டும் நல்ல செயல்களை செய்வீர்கள். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள் வீடு மனை வாகனம் ஆகியவற்றில் ஏற்படும் பராமரிப்பு செலவுகளை மனமுவந்து செய்வீர்கள். புத்திர வகை அனுகூலம் உண்டு. குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் அனுகூல செயல்பாட்டால் வாழ்வில் நினைத்த லட்சியங்களை நினைத்தபடி செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உடல் நலத்தில் நன்கு கவனம் செலுத்தி வைத்திய முறைகளை தகுந்தவாறு மேற்கொள்வதால் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் நீக்கி சேமிப்பினை மேற்கொள்வீர்கள். 

இந்த ஆண்டு நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும்.  யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த  காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி  ஏற்படாமல் தடுக்கப்படும்.   அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். சந்தோஷமான நிலை காணப்படும். 

பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழு பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். 

கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்

இந்த ஆண்டு குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். 

அஸ்தம்

இந்த ஆண்டு புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

சித்திரை 1, 2, பாதம்

இந்த ஆண்டு தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். 

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி  வரவும்.

சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: தெற்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் திருப்பாவை சொல்லி பெருமாளை வணங்கி வரவும்.

*********

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com