Enable Javscript for better performance
ராசி கட்டத்தில் உள்ள சின்னங்கள் ஒருவரின் குணத்தை நிர்ணயிக்குமா?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  ராசி கட்டத்தில் உள்ள சின்னங்கள் ஒருவரின் குணத்தை நிர்ணயிக்குமா?

  By ஜோதிடர் பார்வதி தேவி  |   Published On : 05th November 2022 04:04 PM  |   Last Updated : 05th November 2022 06:15 PM  |  அ+அ அ-  |  

  astrology

   

  ஜாதக கட்டத்தை பார்த்தவுடன் முதலில் நாம் ஒருவரின் பலம்/பலவீனம் அவர்களின் ராசி மற்றும் லக்கினம் கொண்டு முடிவு எடுக்கப்படும். காலபுருஷ அடிப்படையில் 12 ராசி மற்றும் நட்சத்திர கூட்டங்கள், அவை அனைத்தும் பூமியிலிருந்து பார்க்கும்போது குறிப்பிட்ட வடிவமாகக் காட்சி தருகின்றன.

  அவற்றையே ராசி கட்டத்தின் சின்னங்களாக சொல்லப்படுகிறது. அது தவிர நம் உடலின் தலை முதல் பாதம் வரை ராசி கட்டத்தில் உள்ளடங்கும். பஞ்சபூத தத்துவங்களோடு அமைந்த அவற்றோடு உள்ளடங்கிய ஒவ்வொரு ராசிகளின் சின்னங்கள் ஒருவரின் பூர்வீகம், உருவம், மாற்ற முடியாத குணம் மற்றும் செயல்களோடு ஒத்துப்போகும்.

  ஒரு ஜாதகரின் உண்மைத் தன்மைகளை 70% லக்கின அடிப்படையில் வெளிக்காட்டும். ஜோதிட நூல்கள் (ஜாதக அலங்காரம்) மற்றும் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்ததைக் குணநலன்களைக் கீழே சுருக்கமாக பொது பலன்களை பார்ப்போம்.  இவற்றில் கிரக சேர்க்கை இருந்தால் பலன்கள் மாறுபடும்.

  மேஷம்

  காலபுருஷ அடிப்படையில் முதல் லக்கினம் மேஷம், சின்னம் செந்நிற ஆடு. இந்த லக்கினகாரர்கள் உடலின் முதல் பகுதி தலை என்பதால் இவர்கள் பலமான ஆட்டின் மண்டை கொண்டவர்கள், ஏர் நெற்றி, நீண்ட கழுத்துடையவர், வலுத்த பற்கள், இளைத்த சூட்டு உடம்புக்காரன், மத்திம உயரம்,  சிலபேருக்கு சிவந்த கண்கள், புஜசாலியாகவும், உடலில் கொஞ்சம் உரோமம்/தாடி இருக்கும்.  மேஷ லக்கினகாரர்கள் உறுதியான சிந்தனை, சாமர்த்தியசாலி, பணக்காரன், பரந்து விரிந்த அறநூல்களை ஓதி உணர்வான், கோபக்காரன், நன்னெறி பேச்சு, பிறரை தனக்குக் கீழ் வைத்திருப்பான்.

  வேட்டையில் வல்லவன், வயதானாலும் முகத்தில் பிரகாசம், எதிர்த்து கேள்வி கேட்கும் தன்மை, ஒற்றுமை, துடுக்குதனம், மனதில் நினைப்பதைப் பேசுபவர், சுறுசுறுப்பாகவும், கூட்டாக இருக்க விரும்புவார்கள், புகழ் மீது கொஞ்சம் ஆசை, சிந்திக்கும் திறன், தைரியசாலி, அரசு சேவையில் ஆர்வம், தர்ம மிக்கவர், மூர்க்ககுணம், சொத்துக்கள் சேர்க்கை, பிடிவாதம், மன வலிமை, செய்யும் வேலையை முழுமையாக முடிப்பவர்.

  ஏமாற்றம், கொஞ்சம் கர்வம்/பொறாமை, சூடாக உண்ண ஆசை, ஒற்றைத் தலைவலி, வழுக்கை, மூலநோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் தரும் நோய்கள் என்று வர வாய்ப்புகள் உண்டு. இவர்கள் முன்யோசனை இல்லாத வேகம் கலந்த ஓட்டம் உடையவர்களாக இருப்பார்கள், இந்த செயலே சிலநேரம் பிரச்னையில் முடியும். இவர்களுக்கு நல்லெண்ணெய் குளியல், தீர்த்த குளியல்,  தியானம் அவசியம் தேவை.

  ரிஷபம்

  ரிஷபம் ராசி உடல் பாகத்தில் முகத்தைக் குறிக்கும். சின்னம்- காளை. ரிஷப லக்கினகாரர்கள் பார்ப்பதற்கு கொஞ்சம் நடுத்தர உயரம்,  குண்டானவர், மிருதுவான காதுமடல் கொண்டவர், தோல்கள் கடினத்தன்மை, கம்பீர/கௌரவ நடையும், விரிவான மூக்கும், பற்கள் வரிசையாகவும், நெற்றி அகன்றும், கண்ணழகு என்று அடுக்கி கொண்டே போகலாம். பொதுவாக இடப லக்கினகாரர்கள் சிவபூஜையில் சிந்தை செலுத்துபவன், உண்மை பேசுபவன், பல்வேறு உணவைக் குறைவாக உண்பவன், பிறர்க்கீழே வேலை செய்பவர், கணித வல்லுநர், உயர்ந்த ஆடை ஆபரணம் அணிபவன், அலங்காரப்பிரியன், புத்திசாலி, விளையாட்டுத்தனம் மிக்கவர். 

  ஒரு சிலர் பிறர் உடைமை மீது பேராசை, தன் பிள்ளை பேச்சில் கேட்பதில் ஆசையுள்ளவன், சிறுவயதில் அக்னி பயம், பேச்சில் தேனாகவும், வசீகர தோற்றம், இசையில் ஆர்வம், தன் நலத்திற்காக பேச்சில் கொஞ்சம் பொய், மற்றவர் உதவியில் உயர்வார், சுமைதாங்கி, குடும்பத்திற்காக பணத்தை ஈட்டுபவர். முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தாமல் பின்பு பதிலடி கொடுப்பதில் வல்லவர்.

  வெவ்வேறு உணவுகளை உண்ணுவத்தில் ஆர்வம், ஞாபகசக்தி, சகிப்புத் தன்மை, விவசாயத்தில் ஆர்வம், பிடிவாதம், எதிராளி பேசுவதைக் கவனமாக கேட்பார்கள், மனசலனம், தாய் பாசமிக்கவர், பெண்களுக்கு ஆண் நண்பர்கள் அதிகமுண்டு.  அவ்வப்பொழுது இருமல் கபம் சார்ந்த நோய், முகத்தில் ஏற்படும் வியாதி மற்றும் சிறுநீரக பிரச்னை, இவர்களுக்கு வர வாய்ப்பு உள்ளது. தர்மம் இவர்களை தோஷத்திலிருந்து காக்கும். முக்கியமாக பறவை மற்றும் மிருகங்களுக்கு உணவு கொடுத்தால் நன்று.

  மிதுனம்

  மிதுன ராசி, உடலின் கழுத்து தோள்பட்டையை  குறிக்கும், சின்னம் - இரட்டையர் வீணையுடன் கூடிய பெண் மற்றும் கதையுடன் கூடிய ஆண் ஆவார். இவர்கள் ஆண் பெண் கலந்த இரட்டை குணம், இரட்டை பேச்சு, கருநீல உடல், பார்க்க சாதுவாக, உயரமான, ஒல்லியான, மீன் போன்ற கண்களை உடைய  அழகிய உருவம் கொண்டவர்கள். 

  இந்த லக்கினகாரர்கள் கீர்த்திமான், கூச்ச சுபாவமுள்ளவன், சூது வாது கொண்டவன், ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பான், மாற்றிப் பேசுவான், நோன்பு அனுசரிப்பான், இனிய பேச்சாளி, தன் காரியத்திலேயே கண்ணாயிருப்பான், பித்த  வியாதியுடையவன், கணக்கில் அறிவாளியாகவும், திறமைசாலி, அழகான இளமையானவர், முயற்சி, ரகசியம் காக்க முடியாதவன்.

  வீடு மற்றும் வாகனம் மீது ஆசை, வரவுக்கு ஏற்ப செலவு, புகழ், அம்மா பிள்ளை, பல தொழில் செய்பவர், சுறுசுறுப்பும், எடுத்த காரியத்தை முடிப்பவர்களாகவும், கற்பனை மிக்கவர், ஒரு சிலருக்கு குடும்ப உறவு பிரச்னையே, ஆசான்,  மற்றும் நுண்கலை வல்லுநர்கள். இவர்கள் வாழ்க்கையில் தாய் அன்பு அல்லது மனைவி துணை அவசியம் தேவை. தன்னை தானே சந்தோஷப்படுத்திக்கொள்ள எதாவது ஒரு கலைகளை கற்க வேண்டும். குரு ஆசீர்வாதம் தேவை.

  கடகம் 

  கடகம் ராசி உடலின் இதயப் பகுதியைக் கொண்டது,  சின்னம்- நண்டு. இந்த லக்கினகாரர்கள் கம்பீரமான நடைகொண்ட, சிவப்பு நிறமுடையவர், அதிக பாசக்காரர்கள் (நண்டு தன் எல்லா குட்டிகளையும் அரவணைப்பது போல்). இவர்கள் மெல்ல தன்னை நுழைத்துக் கொண்டு, முழுவதுமாக ஆக்கிரமிக்கும் கெட்டிக்காரர்கள் (நண்டானுக்கு இடம் கொடேல்).  இவர்கள் வளர வளர இடம்பெயர்ந்து கொண்டே, தன் திறமைக்கு ஏற்ப வெவ்வேறு புதுமையான வேலைகளை கற்று மாறிக்கொண்டு இருப்பார்கள் (நண்டு கொழுத்தால் வலையில் தங்காது). 

  இவர்கள் சமர்த்தியசாலி, தானியங்களால் செல்வமுண்டு, ஆசான் மீது அபிமானம் உள்ளவன், தொடக்கத்தில் வறுமை, வசீகர அழகு,  அலைபாயும் மனது, பயத்தை வெளியில் காட்டமாட்டார்கள், தன்னை முழுமைப்படுத்திக்கொள்ள புத்தியை பயன்படுத்துபவர்கள். 

  ஒருசில நேரம் எதிரே இருப்பது யார் என்று மறந்து பேசுவர், பேசுவதில் படாபட், அதிகாரமிக்கவர், சரியான வழிகாட்டி, பேச்சிலேயே ஆளை எடைபோடுவான், சுறுசுறுப்பு, தனித்துவம் மிக்கவர், பக்தி, ஜீவராசிகளிடம் அன்புமிக்கவன், கடல் கடந்து சம்பாதிப்பதில் ஆர்வம், பெரியோர் நட்பு உண்டு மற்றும் அவ்வப்போது தங்களை புதுப்பித்துக் கொள்வார்கள். 

  இவர்களுக்கு பேச்சில் செயலில் நிதானம் தேவை மற்றும் மூத்தோரின் அறிவுரையைக் கேட்பது நன்று.

  சிம்மம்

  சிம்ம ராசி உடலின் மேல் வயிற்றை குறிக்கும், சின்னம்- சிங்கம்.  இவர்கள் பேசுவது கனீர் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும், காடு மலை சுற்றுவது, தனிமை விரும்பி. ஒரு நாட்டுக்கு ராஜாவாக வாழ வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்துகொண்டே இருக்கும். இந்த லக்கினகாரர்கள் இறைவழிபாடு ஆற்றிடுவான், அறச் சிந்தனையாளன், உறுதியான அறிவுடையவன், அடிக்கடி பசியெடுக்கும், செய்யும் தொழிலில் ஆர்வம், அவ்வப்போது நோய் வரும் பின்பு குணமாகிவிடும். 

  இவர்கள் நெருப்பு போல கோபம் பிடிவாதமுடையவர், தர்மவான், கண்டிப்பானவர்கள், முழுமையாக முடிக்கும் வேகம், எதிரில் நிற்பவர்கள் இவர்கள் பேச்சைக் கேட்பார்கள், இசையில் ஆர்வம், அரசியல், அரசு சம்பந்தப்பட்ட துறை மீது ஒரு மோகம் உண்டு, பெருந்தன்மை குணம், புகழ்/கௌரவமான பதவிகள், கடவுள் நம்பிக்கை, அறிவாற்றல், பேச்சாற்றல், நேரம் தவறாதவர்கள், பொருளாதார உயர்வில் அதிக நாட்டமிக்கவர், தர்மவான், பயப்படாதவர்கள், ஆற்றல் மிக்கவர், அலைச்சல், சிலருக்கு சொந்த தொழில், வயிறு /கண் பிரச்னை, கண்டிப்பானவர். அவ்வப்போது கிரிவலம் செல்வது மற்றும் தீர்த்த குளியல் செய்வது நன்று.

  கன்னி

  கன்னி அடி வயிற்றைக் குறிக்கும், சின்னம் : ஒரு கன்னி பெண்ணின்  கையில் விளக்கும் மற்றொரு கையில் நெற்கதிர்கள் கொண்ட ஏந்தி இருப்பார்கள். இந்த ஜாதகர்கள் நிறைய பேர் விவசாயியாகவும் மற்றும் ஆசிரியராக இருப்பார்கள். கன்னி லக்கினகாரர்களுக்கு புதிதாக கற்பதிலும்; படிப்பதிலும்  மிகுந்த ஆர்வமுடையவர்கள், கணிதத்தில் புலமை, ஒழுக்கமும், பொறுமை தன்மையும், அறச் செயல்கள் செய்வார்கள். பல்வேறு வகையில் தருமம் செய்பவர்.

  வாழ்நாளின் பிற்பகுதி மிகுந்த செல்வம் சம்பாதிப்பார்கள். ஆச்சாரம் மிக்கவர், அறிவு  நுட்பம், கடன் சுமை, தேன் போல பேசுபவர்,  கலை வல்லுநர்கள், தன்னை சுற்றி சுத்தமாக வைத்திருப்பார்கள், நிலையானவர், ரகசிய மிக்கவர், நிலம் அல்லது பூர்வீக சொத்துகள் பிரச்னை, எதிர்கொள்வார்கள், பேச்சால் கவரக்கூடியவர்கள். 

  உணவு பிரியர், நகைச்சுவை மிக்கவர், கலைத்துறை மற்றும் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம், பயம் இவர்களை துரத்தும்,  இரண்டுக்கு  மேற்பட்ட தொழில் செய்வார்கள், ENT /தோல் பிரச்சனை. இவர்கள் தொழிலில் யோசித்துச் செய்ய வேண்டும், ஊட்டமிக்க உணவு உட்கொள்ள வேண்டும். 

  துலாம்

  துலா ராசி உடலின் வயிற்றுப் பகுதியைக்  குறிக்கும், சின்னம்- நீதிக்குரிய சமமான தராசு. இந்த லக்கினகாரர்கள் நீதி, நேர்மையுடன் வெற்றியை நோக்கி செல்வார்கள். வியாபார நோக்கம் மிக்கவர்கள், எதையும் தாங்கும் இரும்பு மனிதன், பாக்கியம் பல பெற்றிருப்பான், பணக்காரன், தன் குலப் பெருமையைக் காப்பவன், தாரா யோகம்,  குடும்பஸ்தன், அறநெறி தவறாதவன், அன்பான உறவினர்களை பெற்றிருப்பார். 

  அரசர்களின் அபிமானத்தைப் பெற்றவன், சுகவாசி, வாசனை திரவியம் மீது மோகம், வசீகர தோற்றம், புத்திசாலி, உழைப்பால் பொன்னும் பொருளும் கிட்டும், நீதிமான், மரியாதையைக் கொடுப்பவர், இனிமையான குரல், களத்திரம் மீது அன்பு, மற்றவர்களை சந்தோஷப்படுத்தி வாழ்பவர்கள், குழந்தைகள் மேலுயர உதவுவார்கள், கேட்காமல் உதவும் குணம், சந்தோசம் குறைவு, விட்டுக்கொடுக்கும் பண்பு, மன்னிக்கமாட்டார்கள். 

  அமைதியானவர்கள், உயர்வான நல்ல பொருள்களை தானம் செய்வார், முயற்சியால் முன்னுக்கு வருபவர், வேலை மாற்றம், வைத்திய செலவு அவ்வப்பொழுது ஏற்படும், ஆன்மீக பயணம், குடும்ப உறுப்பினர்களிடம் இடைவெளி, வெற்றியாளர்கள், எதிர்காலத்தை முன்பே அறியும் சக்தி, வாதம், சர்க்கரை நோய் மற்றும்  கருப்பை,  சுக்கிலம் குறைபாடு சிலருக்கு உண்டு, அரசாங்கம் மற்றும் தந்தைவழி வருமானம் அனுபவிப்பது கடினம். இவர்கள் சிக்கல் மிக்க பஞ்சாயத்துக்கு போகக்கூடாது முக்கியமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது. 
   
  விருச்சிகம் 

  விருச்சிகம் உடலின் மறைவு பகுதியை குறிக்கும், சின்னம்-தேள். இவர்கள் மாநிறம், உயரமான திடமானவர், கம்பீரமான தோற்றம், தேள் போன்று சட்டென்று கொட்டிவிடும் குணம், உறுதியானவர், பார்ப்பதற்கு அமைதியானவர்கள். இந்த லக்கினகாரர்கள் பெற்றவரிடம் மற்றும் கடவுளிடம் அன்பு கலந்த பக்தி, மனைவியிடம் மாளாத பாசம், மதுர வார்த்தை பேசுபவர். 

  எடுத்த செயலை லாவகமாக செய்து முடிப்பவர், நியாய அநியாயங்களைத் தட்டி கேட்பவர், பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விஷமமிக்கவர்,  போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார், பிடிவாத குணம், அறிவாளி, விடாமுயற்சி, பசியினை பொறுத்துக்கொள்ள முடியாதவர், அன்பானவர், சுருக்கமாக நேர்த்தியாக பேசுபவர், விட்டுக்கொடுக்கும் தன்மை, வாக்கு சீராக இருக்கும், 

  வாழ்க்கையின் பிற்பகுதியில் தாராளமான பணவரவு மற்றும் சேமிப்பு, தர்மவான், ஆடம்பரங்களை விரும்பாதவர்கள், மனிதநேயம், சொந்த முயற்சி, தோல்விகளைக் கண்டு பயப்படமாட்டார்கள், உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர்கள், சமூக சேவை, ஆன்மீக பயணத்தில் ஈடுபாடு, கலையில்  ஆர்வமுண்டு, உயர் பதவியில் இருந்தாலும் சீராகப் பார்க்கும் பண்பாளன், கள்ளம் கபடம் இல்லாதவர், நேருக்கு நேர் பேசுபவர், சத்தான உணவை விரும்புவார்கள், பொதுவாகவே முடி உதிர்தல், தைராய்டு, மூட்டு பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் மற்றவர்கள் தன்னை ஏமாற்றுவது தெரியாது, அதனால் எதிராளியிடம்  உஷாராக இருக்கவேண்டும்.

  தனுசு

  தனுசு உடலுறுப்பின் தொடைப் பகுதி, சின்னம்: உடம்பின் கீழ்ப்பாகம் குதிரையைப் போல் இருக்கும் கையில் வில் பிடித்த மனிதன் போன்ற தோற்றம். இவர்கள் குறி பார்த்து அடித்து வெற்றி பெரும் வரை ஓயமாட்டார்கள், வலிமை மிக்கவர், பொன்னிரமானவர்கள், சகோதரர்களுக்கு அஞ்சி நடப்பவர், கொடை குணம், கீர்த்திமான், விருப்பத்திற்குரிய இன்ப நுகர்வுகளைப் பெற்றிருப்பார்கள். 

  எதிரிகளின் நாடி பிடித்து அறிவதில் வல்லவர், பெருங்கல்விமான், இளம் பருவத்தில் உழைத்துச் செல்வதைச் சேர்பவன், மனக்கவலைகளுக்கு ஆளாபவர். ஆயுதம் பயிற்சி ஆர்வம், வேகம், விவேகம், பயப்படாமல் செயலை செய்வது, குறிக்கோளை நோக்கிச் செல்வது சில சமயம் குடும்ப உறவில் விரிசல், போராட்ட குணம்,  தன்னலம் மிக்கவர், வீண் சண்டைக்குப் போகமாட்டார், வந்த சண்டையை விடமாட்டார்கள். 

  கோபம் மூக்கில் தெரியும், லாபம் நஷ்டம் இரண்டையும் பார்த்துவிடுவார்கள், கண்ணில் சிறு குறைபாடு ஏற்படும். வயது செல்ல செல்ல ஆன்மீக மோகம் உண்டு. இவர்கள் குறிக்கோளையும் குடும்பத்தையும் ஒரே தராசில் நிற்க வைக்க வேண்டும்.

  மகரம்

  மகர ராசி, உடலின் கால் மூட்டு பாகத்தைக் குறிக்கும்.  சின்னம்-காலும் உடம்பும் சுறா மீனை ஒத்து முகம், கலை மானை ஒத்திருக்கும். இந்த லக்கினகாரர்கள் நீளமான உருண்டு திரண்ட விழிகளையும்,  செந்நிற மேனியும், மறைமுக அங்கங்களில் மச்சம், சிலர் மாசு படிந்த வெண்மை கொண்ட நிறம் கொண்டவர், வாசபூக்களின் மீது அதிக விருப்பமுடையவன், உறுதியான சிந்தனை, மானுட நேயம் மிக்கவன், ஆண்கள் சௌக்கியமான தேக ஆரோக்கியம் பெற்றிருப்பார்கள். 

  பிடிவாதம்,  இல்லாளுக்குப் பிரியமானவன், வேட்டையாடுப்பவன், நினைப்பது ஒன்று செய்வது வேறாக இருக்கும், பாசமிக்கவர், மனத்தடுமாற்றம், செலவாளி, சேமிக்க தெரியாதவர், சுகம் குறைவு, குடும்பமே வாழ்க்கையே என்று இருப்பார், கலகலவென இருப்பார்கள், மனம் விட்டு பேசுவதில் ஆர்வமிக்கவர், நிலையான கடுமையான உடல்  உழைப்பு,  தைரியமிக்கவர், கடன், ஏமாளி,  பணத்தை சரியாகச் செலவு செய்யமாட்டார்கள். 

  பெண்ணாக இருந்தால் ஒரு சிலருக்கு துணைவரால் சந்தோஷம் குறைவு. கள்ளம் கபட குணம் இவர்களுக்கு எதிரி. இவர்கள் கண்டிப்பான மனிதராகவும் மற்றும் செயலில் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

  கும்பம்

  கும்பம் உடலுறுப்பின் கணுக்காலை குறிக்கும். ஒருவர் தோளில் ஒரு மூடிய குடத்தை வைத்திருக்கும் சின்னம். ஆனால் அந்த குடத்தில் நல்ல பொருளா கெட்ட பொருளா அல்லது ஒன்றும் இல்லா காலி குடமா என்று தெரியாது, அதுபோல இந்த ராசிகாரர்கள் மனதில் என்ன நினைக்கிறார், என்ன செய்ய போகிறார் என்று தெரியாவண்ணம் இருக்கும். 

  இவர்கள் ஏர் நெற்றியுடன், மத்திம உயரம், கருப்பு கலந்த மாநிறம் கொண்டவர்கள், உண்மை பேசுபவர்கள், பிறரைப் பற்றி பெருமை பேசுவார், பித்த உடம்பு, படிப்பு சுமார், பிறர் செய்த உதவி சிலசமயம் மறந்துவிடுவார், சௌக்கியவான்,  வீண் செலவு செய்யமாட்டார், கெட்ட பெயர் வாங்கிக் கொள்வார். 

  நினைப்பதை நடத்தி காட்டுபவர், முக்கியமானதிற்கு உதவுவார், தாயோடு சுமாரான இணக்கம், மனம் விட்டுப் பேச மாட்டார்கள், பாதம் மற்றும் காலில் அவ்வப்பொழுது பிரச்னை ஏற்பட வாய்ப்பு.  ஆன்மீக சன்னியாச வாழ்க்கை இவர்கள் செல்ல வாய்ப்பு அதிகம். தன் சந்தோஷத்தில் முதலில் அக்கறை காட்ட வேண்டும்.

  மீனம் 

  காலச் சக்கரத்தின் கடைசி ராசி மீனம், உடலின் பாதத்தைக் குறிக்கும். சின்னம் - ஒன்றின் வாலை மற்றொன்று பற்றியிருப்பது போன்று மாசு படிந்த சிவப்பு நிறம் கொண்ட இரு மீன்கள். இந்த லக்கினகாரர்கள் நடுத்தர உயரம், குளிர்ந்த உடல் மற்றும் அழகிய கண்களுடன் கூடிய சுந்தர வடிவு கொண்டவர், அனைவருடன் நட்பு கொண்டவர், ஆன்மீக அறிவு, இரட்டை பேச்சு, பூர்வீக சொத்து மற்றும் பணம் மிக்கவர்கள்.

  செயல்வீரன், செயற்கை அலங்காரம் பிடிக்காதவர், வாசனை பூ பிரியர், செவியில் குறைபாடு ஏற்படும், மற்றவர் பொருளில் கொஞ்சம் மனதில் ஆசை ஏற்படும், சடங்கு சம்பிரதாயத்தில் ஆர்வம், பல்வேறு உணவு உண்ணுவதில் ஆர்வம், குழப்பவாதி, வித்தியாச மனிதர், திடீர் கோபம் எழும், மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள், வளைந்து கொடுக்கும் தன்மை, கொடை குணம், குடும்ப உறவை அரவணைத்துச் செல்வார்கள், நம்பிக்கை, நாணயம், உறுதியற்ற எண்ணம்.  ஒரு செயல் செய்யும் முன்பு, நம்பிக்கை குறிய ஒருவரிடம் ஆலோசனை அவசியம் தேவை.

  மேலே கூறப்பட்டது அனைத்தும் ஜாதக அலங்காரம் மற்றும் பல்வேறு ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட பொதுவான சிறு தொகுப்பு. ஜாதகர் குணங்கள் மற்றும் செயல் அங்குள்ள சுப / அசுப கிரகங்களின் சேர்க்கை பார்வை கொண்டு பலன் மாறுபடும். குணங்கள் ஆண் பெண்ணிற்கு மாறுபாடு இருக்கும். எல்லா லக்கினத்திலும் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்று சூட்சமமாக உள்ளடங்கி உள்ளது. கெட்ட குணங்களை ஒரு சில தீர்வு மூலம் சரி செய்து கொள்ளலாம். 

   

  Whatsapp message: 8939115647

   

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp