ராகு - கேது பெயர்ச்சி 2025: பொதுப்பலன்கள்!

2025-ஆம் ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சிக்கான பொதுப்பலன்கள்..
ராகு-கேது பெயர்ச்சி
ராகு-கேது பெயர்ச்சி
Published on
Updated on
2 min read

2025-ஆம் ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சிக்கான பொதுப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி, நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருடம் - உத்தராயனம் வஸந்த ரிது சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.2025) அன்றைய தினம் கிருஷ்ண சதுர்த்தசியும் சனிக்கிழமையும் ரேவதி நக்ஷத்ரமும் விஷ்கம்ப நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 25:48க்கு (மாலை மணி 04.20க்கு) கன்னியா லக்னத்தில் ஸ்ரீராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், ஸ்ரீகேது பகவான் கன்னியா ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் மாறுகிறார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருடம் மே 18-ஆம் தேதியும் ராகு-கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகு - கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

அறிவியல் பூர்வமாக நமது DNAதான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு-கேது என்னும் கிரகங்கள் DNA போலதான். ராகுவை வைத்து தகப்பானார் வழிகளையும் - கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்துகொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழிகாரகன் என்றும் கேதுவை தாய் வழிகாரகன் என்றும் சொல்கின்றனர். ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம் - களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் போன்றவற்றைச் சொல்ல முடியும். கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

பொதுப் பலன்கள்

பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்னைகள் தலைதூக்கலாம். குரு செவ்வாய் நக்ஷத்ரத்தில் மாற்றம் பெறுகிறார். உத்திர நக்ஷத்ரத்தில் கேதுவும் - பூரட்டாதி நக்ஷத்ரத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது குருவினுடைய நக்ஷத்ரம் - சனியினுடைய ராசியிலேயே சஞ்சரிக்கிறார். கேது சூரியன் ராசியில் குரு அம்சத்தில் இருக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்குப் பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதைச் சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் சனி வீட்டில் இருக்கிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும்.

பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதேவேளையில் குருவின் பார்வையால் ராகு பலம் பெறுகிறார். ஆன்மிகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தமான பிரச்னைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவைச் சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும். அதே வேளையில் கேதுவிற்கு கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மிகம் - கோவில் தொடர்பான பிரச்னைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும்.

ராகு கேது பொது பரிகாரம்

ராகுவும், கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாக தேவதையை வணங்குவது நல்லது. ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் - கேதுவிற்கு விநாயகர் - ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மை தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com