ராகு - கேது தோஷம் நீக்கும் ஸ்ரீ காளஹஸ்தி... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?
ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளஹஸ்தி தென்னாட்டின் திருக்கைலாயம் என்றும், காசி என்றும் அழைக்கப்படுகிறது.
புகழ்பெற்ற பஞ்சபூத தலங்களில் வாயு தலமாகப் போற்றப்படும் ஸ்ரீகாளஹஸ்தியில் ஞானபிரசுனாம்பிகை சமேதராக காளஹஸ்திநாதர் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் விஜயநகரப் பேரரசின் மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயரால் 1516-ம் ஆண்டு கட்டப்பட்டது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் ஒரு போட்டி வந்தது தம்மில் யார் பெரியவன் என்று. ஆதிசேஷன் வாயு தேவனிடம், "வாயு தேவனே, நான் கைலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்" என்றான். போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கைலாய மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.
வாயு தேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக் காட்ட, கயிலையிலிருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்துகொண்டு புறப்பட்டுத் தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்று புராணங்கள் கூறுகிறது.
மேலும், கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்றும் உள்ளது. அதற்கு 'மணி கர்ணிகா கட்டம்' என்று பெயர். காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல, இங்குதான் பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலது காதில் ஓதி அருளினார் என்ற கதையும் உண்டு.
அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்குக் கொண்டு வந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலது காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள். எனவே இக்கோயில் தென்னாட்டின் திருக்கைலாயம் என்றும் காசி என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
கோயில் அமைப்பு
கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், 60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலி பீடமும், நந்தியும் உள்ளன.
காளஹஸ்தி பெயர் விளக்கம்
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலின் பெயர் புகழ்பெற்ற புராண இதிகாசத்திலிருந்து பெறப்பட்டதாகும். சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காலா), யானை (ஹத்தி) ஆகியவை மோட்சம் பெறுவதற்காக இந்த ஊரில் உள்ள சிவபெருமானை வழிபட்டு வந்ததாகப் புராணம் கூறுகிறது. ஸ்ரீ(சீ) - காளம் - ஹத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறுபெற்ற சிறப்புடைய தலம் காளஹஸ்தி.
கிருத யுகத்தில் சிவபெருமானை வழிபடுவதற்காகக் கோயில் சன்னதியின் சுவரில் ஒரு சிலந்தி வலையைப் பின்னுகிறது. இவ்வாறு வலையைப் பின்னி சிவபெருமானை வெளிப்புற சேதத்திலிருந்து பாதுகாத்து வந்தது. இவ்வாறு செய்கையில் அதனைச் சோதிக்க எண்ணி சிவபெருமான் விளக்கைப் பயன்படுத்தி அந்த சிலந்தி வலையை எரியுமாறு செய்தார். அதனைக் கண்ட சிலந்தி விளக்கை விழுங்குவதாக எண்ணி அதில் எரிந்துபோனது. சிவபெருமான் அந்த சிலந்திக்கு முக்தி அருளினார்.
திரேதா யுகத்தில் பாம்பு தினமும் சிவன் சன்னதிக்கு வந்து தனது ரத்தினங்களால் பூஜை செய்து வந்தது.
அடுத்து வந்த துவாபர யுகத்தில் யானை ஒன்று தினமும் நீரும், வில்வ இலையும் கொண்டு சிவனை வழிபட்டது. அவ்வாறு வழிபடுகையில் சிவன் மீது இருந்த இரத்தினங்களை அது தள்ளிவிடுவது வழக்கமாக இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு யானையின் தும்பிக்கையினுள் புகுந்துகொண்டது. யானை தனது தும்பிக்கையை சிவ பெருமானின் மீது அடிக்க யானை, பாம்பு இரண்டும் இறந்து போனது. சிவபெருமான் அந்த பாம்பிற்கும் யானைக்கும் முக்தி அளித்தார்.
தல சிறப்பு
இத்திருத்தலத்தில் காளத்திநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வாயு (காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக் கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி அளிக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியன போன்றுள்ள யானையின் இரு தந்தங்களையும், மேற்புறத்தில் - உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252-வது தேவாரத் தலம் ஆகும்.
இது ராகு, கேது தலம் என்பதால் கோயிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே - அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே இங்குப் பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியாணத்தில் கேது உருவம் காணப்படுகிறது.
தல பெருமை
கண்ணப்பர் வாய் மூலமாக சொர்ணமுகி ஆற்றுநீர் கொண்டு வந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்துத் தருகிறார்கள். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருள்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.
பிரார்த்தனை
ராகு, கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்னைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன்
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருவிழா
மாசித்திருநாள், திருக்கார்த்திகை தீபோற்சவம், வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி 10-நாள்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அன்றைய நாள்களில் திருத்தேர் பவனி, திருக்கல்யாணம், சிவராத்திரி இரவு நந்தி சேவை, தெப்போற்சவம் உள்ளிட்டவை தரிசிக்கப் பக்தர்கள் கூடுவர். சிவராத்திரியில் கிரிவலம் வரும் விழா ஆண்டுதோறும் சிவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது சிறப்பாக நடத்தப்படுகிறது.
பாதாள விநாயகர் சன்னதி
காளஹஸ்திக்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமல் போகவே, சொர்ணமுகி என்றழைக்கப்படும் பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது. அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. இன்றும் இக்கோயிலில் பாதாள விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகரைப் பக்தர்கள் 20 அடி ஆழத்திற்குச் சென்று தரிசித்து வருகின்றனர்.
கண்ணப்ப நாயனார் கதை
இக்கோயிலில் திண்ணனார் சிலையும் காண இயலும். 'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே சொர்ணமுகி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) சொர்ணமுகி ஆற்றுநீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
அர்ஜுனன் சிவபெருமானின் அருளைப் பெறுவதற்காக திண்ணனாகப் பிறந்தார். ஒருநாள் திண்ணன் காளஹஸ்தி கோயிலின் வழியே வந்தார். அவருக்குப் பூஜை செய்யும் முறையோ நியமமோ தெரியாது. இந்நிலையில் அவர் தான், தினமும் வேட்டையாடும் மாமிசத்தை இறைவனுக்குப் படைத்து வந்தார். ஒரு கையில் வேட்டைப் பொருளும் மறு கையில் மாமிசமும் இருந்ததால் தனது வாயில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வந்து பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டார்.
அந்தணர் ஒருவரால் இந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. அவர் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து கோயிலுக்கு வந்து பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு பூஜை செய்யும்போது ஒரு நாள் லிங்கத்திற்கு அருகில் மாமிசம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை ஏதோ விலங்குதான் செய்திருக்கும் என்று எண்ணி கோயிலைச் சுத்தம் செய்து தன் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றார். தினமும் இதே நிலை தொடர கோயிலில் இருந்த மாமிசத்தையும், லிங்கத்தின் மீது இருந்த எச்சிலையும் கண்டு தாங்க முடியாமல் அந்தணர் அருவருப்படைந்தார்.
இதை எந்தவொரு விலங்காலும் செய்திருக்க முடியாது. இதைச் செய்தது ஒரு மனிதனாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தார். ஒவ்வொரு முறை அவர் வரும் போதும், லிங்கம் அதே "அசுத்தமான" நிலையில் இருப்பதைக் கண்டு வெகுண்டார். ஒருநாள் கண்களில் கண்ணீர் மல்க சிவனிடம் வந்து, இப்படிப்பட்ட அசிங்கம் உனக்கு நிகழ்வதை நீ எப்படி அனுமதிக்கலாம்?" என்று கேட்டார். அப்போது சிவன் இது அசிங்கம் அல்ல. இது எனக்கு ஒரு பக்தன் அளிக்கும் அர்ப்பணிப்பு. நான் அவன் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் அர்ப்பணிக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன். அவன் பக்தியின் ஆழத்தை நீ பார்க்க விரும்பினால், அருகில் எங்காவது ஒளிந்துகொண்டு கவனித்துப்பார். அவன் சீக்கிரமே இங்கு வருவான்."என்றார்.
அந்தணர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார். அப்போது திண்ணன் மாமிசத்துடனும் வாயில் தண்ணீருடனும் வந்தான். எப்போதும் போல் சிவனுக்குப் பூஜை செய்தான். ஆனால் இறைவன் தன் அர்ப்பணிப்பை ஏற்காததைக் கண்டு குழம்பிப்போனான். தான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துக்கொண்டே லிங்கத்தை உற்றுக் கவனித்தபோது, லிங்கத்தின் வலது கண்ணிலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டான். அதைக் குணமாக்கப் பச்சிலைகளை வைத்துப் பார்த்தான், குணமாகவில்லை, ரத்தம் இன்னும் அதிகமாகத்தான் வந்தது. இறுதியில் தன்னுடைய கண்ணை அர்ப்பணிக்க முடிவு செய்தான்.
தன் கத்திகளில் ஒன்றை எடுத்து, தன் கண்ணைப் பெயர்த்தெடுத்து லிங்கத்தின் ரத்தம் வடியும் கண்ணில் பொருத்தினான். ரத்தம் வடிவது நின்றதைக் கண்டு திண்ணன் நிம்மதியடைந்தான். ஆனால் இப்போது லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கவனித்தான். தன் இன்னொரு கண்ணை எடுத்திடக் கத்தியைக் கண்ணில் வைத்தான். ஆனால் இரண்டு கண்களும் இல்லாமல் எங்குப் பொருத்துவது என்று தெரியாமல் போகுமென்பதை உணர்ந்தான். அதனால் லிங்கத்தின் ரத்தம் வடியும் கண் மீது ஒரு காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்தான். திண்ணனுடைய பரிபூரண பக்தியைக் கண்டு அவன் முன்னால் சிவபெருமான் தோன்றினார். அப்போது திண்ணன் பார்வை திரும்பப் பெற்று சாஷ்டாங்கமாக சிவனின் காலடியில் விழுந்தான். சிவனுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்த சிவபக்தர், நாயனார் ஆகியதால், அன்று முதல் அவர் கண்ணப்ப நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருக்காளத்தி ( ராகு - கேது) பரிகாரத் தலம் பற்றித் தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்?
'இனி யான் ஆளாவது எப்படியோ
என் காளத்தி அப்பனுக்கே'
கருணையே உருவான கயிலைப் பதி, பரமேஸ்வரன், பஞ்சபூதத் தலங்கள் எனச் சிறப்புற்ற திருக்காளத்தி, திருஆரூர், திருவானைக் கோயில் (திருச்சி), திருவண்ணாமலை, சிதம்பரம் என்ற ஐந்து திருத்தலங்களிலும் உமையொரு பாகனாய். பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்புரிகிறான்.
அப்பனைக் கண்டு காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி, உடலும். உள்ளமும் நெக்குருகி, தேவாரப் பாடல்களால் ஆடிப்பாடிப் பரவசமடைந்தனர் நாயன்மார்கள். அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த திருத்தலமே, வாயுலிங்கமாக ஐயன் சேவை சாதிக்கும் திருக்காளத்தி.
இரு சாயாக் கிரகங்களான ராகுவும், கேதுவும் தமது ஆதிபத்யம் ஏற்படும் காலத்தில் பல தீய பலன்களை விளைவிக்கிறார்கள். அத்தகைய ராகு-கேது தோஷங்களிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு இறைவன் ராகுவையும் - கேதுவையும் தன்னிடமே அடக்கிக் கொண்டிருக்கிறான். திருக்காளத்தித் திருத்தலத்தில் மூலக் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தரிசிக்கும்போது இதைக் காணலாம்.
இவ்விரு நிழற்கிரகங்களிலும், ராகுவிற்குத் தனித்தலம் குடந்தையை அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ளதால் திருக்காளத்தியைக் கேது பரிகாரத் தலமாக ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.
பரமனுக்கு அபிஷேகம் செய்வித்து, தோஷம் உள்ள ஜாதக நகலை அவனடியில் வைத்து பூஜித்து திரும்பப் பெற தோஷம் அகலும்.
பலாஸ புஷ்பஸங்காஸம் தாரகா க்ரஹமஸ்தகம் ரௌத்ரம்
ரௌராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.
- ஸ்ரீவியாசபகவான் - மகாபாரதம்
இந்த கேது ஸ்தோத்திரத்தைத் திருக்காளத்தி சன்னதியில் 1008 முறை பாராயணம் செய்து இறைவனை வணங்கவும். (மீள்பிரசுரம்)
ஆலயத்தின் சிறப்பு
ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அழகிய திராவிட கட்டடக்கலையைப் பெருமைப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இந்த பிரமாண்டமான கோயில் பார்வையாளர்கள் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. சிலர் இது ஒரு ஒற்றைக்கல் அமைப்பு என்று நம்புகிறார்கள், அதாவது இது ஒரு பெரிய கல்லால் ஆனது.
சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின்போது ஸ்ரீகாளஹஸ்தி கோயிலைத் தவிர, மற்ற அனைத்து கோயில்களும் மூடப்படும். ராகு-கேது பூஜை இங்குச் செய்யப்படும் ஒரு குறிப்பிடத்தக்கப் பூஜையாகும், மேலும் ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அதற்குப் புகழ் பெற்றது. இந்த பூஜையைச் செய்தால், ராகு மற்றும் கேதுவின் ஜோதிட பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் பரிகாரம் செய்வதன் மூலம் நிவர்த்தி காண இயலும்.
இந்து புராணத்தின்படி, பிரம்மா எல்லா யுகங்களிலும் இந்த இடத்தில் காளஹதீஸ்வரரை வழிபட்டார் என்று அரிய முடிகிறது. மகாபாரதத்தின்போது அர்ஜுனன் இங்கு அமர்ந்திருக்கும் கடவுளை வழிபட்டதாக நம்பப்படுகிறது. நக்கீரர் மற்றும் நால்வர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரின் படைப்புகளும் திருமுறைப் படைப்புகளையும் பற்றி இந்தக் கோயிலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கோயில் தேவாரத்தில் போற்றப்பட்டுப் பாடல்பெற்ற ஸ்தலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சைவ நியதியில் குறிப்பிடப்பட்டுள்ள இருநூற்று எழுபத்தைந்து கோயில்களில் இதுவும் ஒன்று.
காளஹஸ்தியில் வீசும் காற்றிலும் தெய்வீக மற்றும் துடிப்பான ஆற்றல் மிகுதியாக உள்ளது. வசீகரிக்கும் கட்டடக்கலை மற்றும் அழகுடன் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி கோயில் எல்லாவற்றிலிருந்தும் தனித்து நிற்கிறது. இந்த கோயிலின் கட்டடக்கலை குறிப்பிடத்தக்கது, இந்த கோவிலில் சிக்கலான செதுக்கப்பட்ட உட்புறங்களுடன் மிகவும் அலங்கரிக்கப்பட்ட கோபுரங்கள் உள்ளன. இந்த கோயில் தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலையை படிக்கும் மற்றும் ஆராயும் மக்களுக்கு ஒரு பொக்கிஷம். ஸ்ரீ காளஹஸ்தி கோயிலைப் பற்றி நாம் தெரிந்துகொண்டால் பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது விளங்கும். பக்தனுக்குப் பக்தி ஒன்றே தகுதி. பக்தியுடன் ஒருவன் செய்யும் எந்தவொரு பூஜையும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை விளக்கும் ஸ்தலமாக ஸ்ரீ காலஹஸ்தி அமைந்துள்ளது.
கோயில் திறக்கும் நேரம்
காலை 5:00 முதல் நண்பகல் 12:00 மணி, மாலை 5:00 முதல் இரவு 9:00 வரை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாள்களில் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது?
பேருந்து - சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் பேருந்துகள் காளஹஸ்திக்கு இயக்கப்படுகின்றன. ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 3 மாநிலத்திலும் இருந்து அரசுப் பேருந்துகள் காளஹஸ்தி வரை இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் - ஹைதராபாத், விஜயவாடா மற்றும் கொல்கத்தாவிலிருந்து வரும் ரயில்கள் காளஹஸ்தியில் நின்று செல்லும். சென்னை-மும்பை இடையே இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் காளஹஸ்தி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் சந்திப்பு வழியாக நின்று செல்லும்.
விமானம் - திருப்பதி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தனியார் வாகனங்கள் மூலம் 25 கி.மீ. பயணம் செய்து காளஹஸ்தியை அடையலாம். ஹைதராபாத், தில்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

