

கோயில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில் வழிபாடு சிறப்புமிக்க சக்திக் கோயில்கள், சைவ - வைணவக் கோயில்கள் பல அமைந்துள்ளன.
வைணவக் கோயில்களில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றக் கோயில்களில் பாடகம் - பாண்டவத்தூதப் பெருமாள் கோயில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசமாகவும் ஆழ்வார்களில் பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை ஆழ்வார்களால் போற்றி மங்களாசாசனம் செய்யப்பட்டதாக விளங்குகிறது.
கண்ணபிரான் பஞ்ச பாண்டவர்களுக்கு தூதுவராகச் சென்றபோது, துரியோதனன் சூழ்ச்சியால் கண்ணனை நிலவறையில் வீழ்த்த நினைத்தார். அதனை அறிந்த கண்ணபிரான், "பெரிய மாமேனி அண்டமூடுவ பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்' என்ற திருமங்கை ஆழ்வார் அருளியபடி விசுவரூப வடிவம் எடுத்து காட்சி தந்தார் கண்ணன். துரியோதனுடைய தந்தை திருதராட்டிரனுக்கு கண்பார்வை அளித்தும் தன்னுடைய விசுவரூப தரிசனத்தையும் காண்பித்தார். அமர்ந்த நிலையில் அபய - வரத கரங்களுடன் காணப்படும் அவ்வடிவமே இக்கோயிலில் போற்றி வணங்கப்படுகிறது. இத்திருமேணியை ‘தூதஹரி" எனவும் அழைக்கின்றனர்.
பெருமாளின் மிகப் பெரிய வடிவத்தை இந்தக் கோயிலில் கண்டு வணங்கலாம். இறைவன் எழுந்தருளி அருள்புரியும் கருவறையின் விமானப்பகுதி சாலாஹார விமானமாக அமைத்துள்ளது. இதனை "பத்ர விமானம்', "வேதகோடி விமானம்' எனவும் அழைக்கின்றனர். இந்தக் கோயிலில் ருக்மணி பிராட்டிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் தனித்தனியே சன்னதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தில் அமைந்துள்ள மத்ஸ்ய தீர்த்தத்தில் தவம் செய்த ஜனமே ஜயனுக்கும் ஹாரித மாமுனிக்கும் பாண்டவதூதப் பெருமாள் காட்சி அளித்ததாக தலவரலாறு கூறுகிறது.
தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் பல்லவர் காலத்திலேயே கட்டப்பட்டாலும், சோழமன்னர் குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி (கி.பி. 1070 - 1120) செய்யப்பட்டதையும், இக்கோயிலுக்கு நந்தவனம் அமைத்துக்கொள்ள நிலம் தானமாக அளிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.
சந்திர பகவானின் தேவியர்கள் ரோகிணி - கார்த்திகை ஆகியோர் ஆவார். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இந்தத் தலத்தில் தீப - தூபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கப்பெறுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.