பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படியாக அதற்கு எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுப்பார்கள்?

ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொழுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள்  நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது.
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படியாக அதற்கு எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுப்பார்கள்?

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள்!

ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொழுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள்  நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது. அரசின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த பல அரசியல் கட்சிகள் சுய விளம்பரம் மற்றும் சுய லாபத்திற்காக செய்யும் சில ஆபத்தான அபத்த காரியங்களே இவை.

ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும்.  வளர்ந்த பின், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத்தந்து, காய், கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே வெட்டிச் சாய்ப்பதற்கு சமமாகும்.

சரி, இவற்றை செய்பவர்களுக்கு தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 சொல்லும் நடவடிக்கைகளைப் பற்றி பார்ப்போம்

தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992

Tamilnadu Property (prevention of Damage &Loss) Act,1992

சட்ட எண்: 59/1992

பொருள் வரையறைகள்- (பிரிவு 2)

“அரசு” என்றால் மாநில அரசு என்று பொருள்படும்.

  1. “கேடு” (Mischief) என்பது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 425 ஆம் பிரிவின் உள்ள அதே பொருளைக் கொண்டதாக இருக்கும்;
  2. “அரசியல் கட்சி” என்றால், 1968-ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் அளிப்பு) ஆணையின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி என்று பொருள்படும்;
  3. “சொத்து” என்றால், கீழ்க்குறித்துள்ளவற்றில் ஏதொன்றுக்கும் சொந்தமான அல்லது அதன் உடைமையிலுள்ள அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள அசையும் அல்லது அசையாச் சொத்து அல்லது இயந்திரம் எதுவும் என்றும் பொருள்படும்.
  1. மத்திய அரசு; அல்லது
  2. மாநில அரசு; அல்லது
  3. உள்ளூர் அதிகார அமைப்பு ஏதொன்றும்; அல்லது
  4. தமிழ்நாடு மாநில மின்சார வாரியம்; அல்லது
  5. இந்த மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஏதொன்றும்; அல்லது
  6. 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்திக் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டுள்ள, ஒரு நிலவள வங்கி உள்ளடங்களாக, கூட்டுறவுச் சங்கம் ஏதொன்றும்; அல்லது
  7. நாடளுமன்றத்தாலோ அல்லது இந்த மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையாலோ நிறைவேற்றப்பட்ட சட்டம் ஏதொன்றின்படியேனும் அமைத்துருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனம் ஏதொன்றும்; அல்லது,
  8. மத்திய அரசு அல்லது மாநில அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஏதொன்றும்; அல்லது
  9. ஏதேனும் நிலையம், வணிக அமைப்பு அல்லது தொழில் நிறுவனம்; அல்லது
  10. ஏதாவது நிறுவனம்

விளக்கம்: இந்தக் கூற்றின் படி “நிறுவனம்” என்பது ஏதேனும் கூட்டமைப்பு எனப் பொருள்படும் மற்றும் இதில் பொறுப்பாட்சி, நிறுவனம், சங்கம் அல்லது தனி ஆட்களைக் கொண்ட கழகம் உள்ளடங்கும்.

சொத்தைப் பொறுத்த அளவில் கேடு செய்வதற்கான தண்டனை (பிரிவு 3)

Punishment for committing mischief in respect of Property

  1. சொத்து எதனையும் பொறுத்த அளவில், செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்து, அதன் மூலம் அத்தகைய சொத்திற்கு நூறு ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையளவிற்குச் சேதம் அல்லது இழப்பை விளைவிக்கின்ற அல்லது,
  2. எந்த நோக்கத்திற்காகவேனும் பொதுமக்களுக்கோ அல்லது நபர் எவருக்குமோ தண்ணீர் வழங்கும் அளவைக் குறைத்தலையோ, அல்லது பொது வடிகால் ஏதேனும் வழிந்தோடுதலையோ அல்லது அதற்குத் தடங்கலையோ விளைவிக்கின்ற அல்லது பெரும்பாலும் விளைவிக்கக்கூடும் என்று தாம் அறிகின்ற செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்கின்ற அல்லது
  3. பொதுச்சாலை, பாலம் அல்லது இயற்கையான அல்லது செயற்கையான நீர்வழிப்போக்கு வரவுக்குரிய கால்வாய் எதனையும் பயணஞ் செய்வதற்கோ அல்லது பாதுகாப்பு குன்றியதாக ஆக்குகின்ற செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்கின்ற எவரொருவரும் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது, போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனும் இருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு ஓராண்டிற்கும் குறைவானதொரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

தீ அல்லது வெடிபொருள் மூலமாகப் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்கின்ற கேடு: (பிரிவு 4,)

Mischief causing damage to Property by Fire or Explosive Substance

சொத்து எதற்கேனும் நூறு ரூபாய் அல்லது அதற்கு மேம்பட்ட தொகையின் அளவிற்குச் சேதம் விளைவிக்கும் உட்கருத்துக்கொண்டோ, அல்லது தன்செயலின் மூலம் தான் சேதத்தைப் பெரும்பாலும் அதற்கு விளைவிக்கக்கூடும் என்பதை அறிந்தோ, தீ அல்லது வெடிப்பொருள் எதனின் மூலமாகவேனும் கேடு செய்கின்ற எவரொருவரும் இரண்டாண்டுகளுக்குக் குறைவானதாக இருக்கக்கூடாத, ஆனால் பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு காலளவிற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.   

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனுமிருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு, இரண்டாண்டுக்கும் குறைவானதொரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

மோட்டர் வாகனங்களில் பயணஞ் செய்கின்றவர்கள் மீது கற்கள், செங்கற்கள் முதலானவற்றை எறிவதற்கான தண்டனை:- (பிரிவு 5)

Punishment for throwing stones, Bricks, etc., upon persons travelling in motor vehicles

மோட்டர் வாகனங்களில் எதிலேனும் பயணஞ்செய்கின்ற நபர்கள் மீது கற்களையோ, செங்கற்களையோ, சோடா பாட்டில்களையோ அல்லது பிற பொருள் எதையேனும் எறிகின்ற செயலைச் செய்கின்ற அல்லது அதைத் தூண்டிவிடுகின்ற அல்லது ஏவிவிடுகின்ற அல்லது அதற்கு மற்றபடி உடைந்தையாயிருக்கின்ற எவரொருவரும், ஆறு திங்களுக்குக் குறையானதாக இருக்கக்கூடாத, ஆனால் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனுமிருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவானதொரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

விளக்கம்: இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக “இயக்கூர்தி” (மோட்டார் வாகனம்) என்பது 1988-ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (28)- ஆம் கூறிலுள்ள அதே பொருளைக் கொண்டதாக இருக்கும்.

ஜாமீன் குறித்துத் தனியான வகைமுறை ( பிரிவு 6.)

Special Provision regarding Bail

 இந்தச் சட்டத்தின்படி, தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயலொன்றைச் செய்துள்ளத்தாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள அல்லது தண்டனைத்தீர்ப்பு, வழங்கப்பட்டுள்ள நபரெவரும், அவர் காவலில் இருப்பாராயின், விடுவிக்கப்படுவதற்கான விண்ணப்பத்தை எதிப்பதற்கான வாய்ப்பொன்று குற்றவழக்குத் தொடரும் அரசு தரப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றாலன்றி (மற்றவர் அளிக்கும்) பிணையத்தின் (ஜாமீன்) பேரிலோ, அல்லது சொந்தப் பிணைமுறிவின் பேரிலோ விடுவிக்கப்படுதல் ஆகாது.

இழப்பீடு செலுத்துவதற்கான ஆணை (பிரிவு 7)

(Order to pay Compensation)

  1. இந்தச் சட்டத்தின் படியான குற்றச் செயலொன்றுக்காகப் பணத்தடையை விதிக்குங்கால், நீதிமன்றமானது, தீர்ப்புரை வழங்குகையில், வசூலிக்கப்பட்ட பணத்தண்டனைத்தொகை முழுவதும் அல்லது அதன் பகுதி எதுவும்; -
  1. குற்றவழக்குத் தொடர்ந்த நடவடிக்கையில் முறையாக ஏற்பட்ட செலவுகளைக் கொடுத்துத் தீர்ப்பதற்கு;
  2. அக்குற்றச்செயலால் விளைவிக்கப்பட்ட இழப்பு அல்லது ஊறு எதற்குமாக, நபரெவருக்கேனும் இழப்பீடு செலுத்துவதற்கு;
  3. பொதுச்சாலை, பாலம் அல்லது இயற்கையான அல்லது செயற்கையான நீர்வழிப் போக்குவரவுக்குரிய கால்வாய் ஏதொன்றும் உள்ளடங்கலாக, அப்பொதுச் சொத்திற்குப் பதிலாக வேறொன்றை அமைத்துத் தருவதற்கு அல்லது நேர்விற்கேற்ப, முன்பிருந்த நிலைக்கு அதை மீட்டளிப்பதற்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று ஆணையிடலாம்.
  1. மேல்முறையீட்டிற்குட்பட்ட வழக்கொன்றில் பணத் தண்டனையனது விதிக்கப்படுமாயின், அம்மேல்முறையீட்டினை முன்னிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட கால அளவு முடிவடைவதற்கு முன்னரோ, அல்லது மேல்முறையீடானது முன்னிடப்பட்டிருந்தால், அம்மேல்முறையீட்டில் தீர்ப்பளிப்பதற்கு முன்னரோ, அவ்வாறு பணஞ்செலுத்துதல் கூடாது.
  2. இந்தப் பிரிவின்படியான ஆணையொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றமோ, அல்லது தனது சீராய்வு அதிகாரங்களைச் செலுத்தும் போது உயர்நீதிமன்றமோ கூடப்பிறப்பிக்கலாம்.
  3. அதே பொருள் குறித்த பிந்தைய உரிமையியல் வழக்கெதிலேனும் இழப்பீட்டினை வழங்கு காலத்தில், நீதிமன்றமானது, இந்தப் பிரிவின்படி இழப்பீடாகச் செலுத்தப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட தொகை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
  4. வேறுவிதமாக வகை செய்யப்பட்டவாறல்லாமல், பணத்தண்டனையானது ஒரு பகுதியாக அமைந்திராத தண்டனையொன்றை நீதிமன்றமொன்று விதிக்கின்றபோது, அந்நீதிமன்றமானது, தீர்ப்புரை வழங்குகையில், எந்தச் செயலுக்காகக் குற்றஞ்சுமத்தப்பட்ட நபருக்கு அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ, அந்தச் செயலின் காரணமாக இழப்பு அல்லது ஊறு எதையேனும் உற்றிருக்கின்ற நபருக்கு இழப்பீடு என்கின்ற வகையில், அந்த ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடிய தொகையை செலுத்துமாறு குற்றஞ்சுமத்தப்பட்ட நபருக்கு ஆணையிடலாம்.

குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்கான அதிகாரம்: - (பிரிவு 8)

Power to try Offences

பெருநகர் தலைமைக் குற்றவியல் நடுவரொருவரின் நீதிமன்றத்திற்கு அல்லது அமர்வு நீதிமன்றத்திற்குக் கீழமைந்த நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றச்செயல் ஏதொன்றையும் விசாரணை செய்தல் ஆகாது.

குறித்த சில நேர்வுகளில் இழப்பீட்டைச் செலுத்துவதற்கான கடப்பாடு(பிரிவு 9.)

(Liability to pay Compensation in Certain Cases)

இந்தச் சட்டத்தின் என்ன அடங்கியிருந்தபோதிலும், அரசியல் கட்சியொன்றினாலோ, வகுப்பு, மொழி அல்லது இனக் குழுவொன்றினாலோ ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம், ஒருங்கு கூடுகை, சட்டம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் எதனின் அல்லது பிற நடவடிக்கை எதனின் பேரிலும் இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்கதான குற்றச்செயலொன்று செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்தக் குற்றச் செயலானது அத்தகைய அரசியல் கட்சியாலோ, அல்லது வகுப்பு, மொழி அல்லது இனக்குழுவினாலோ செய்யப்பட்டிருப்பதாகவுங்கூட அனுமானிக்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அத்தகைய அரசியல் கட்சியோ அல்லது வகுப்பு மொழி அல்லது இனக்குழுவோ, சொத்து எதற்கும் விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்கான இழப்பீட்டை இந்தச் சட்டத்திற்கும் மற்றும் அதன்படி செய்யப்படும் விதிகளின் வகைமுறைகளுக்கும் இணங்கச் செலுத்துவதற்குக் கடப்பாடுடையதாக இருத்தல் வேண்டும்.

இழப்பீட்டுக் கோரிக்கை (பிரிவு 10.)

Claim For Compensation

  1. சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுல் கோரிக்கை எதுவும்,
  1. அவ்வாறான சேதம் (அ) நட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஏதேனும் நபர் ஒருவரால்; அல்லது
  2. பிரிவு 2-ன் கூறு (4) உட்கூறு (a) முதல் (i) வரையில் குறிப்பிடப்பெற்ற அதிகார ஆயத்தினால் அதிகாரமளிக்கப்பெற்ற ஏதேனும் அலுவலரால் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.
  1. சொத்திற்கு விளைவிக்கப்படும் சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுக் கோரிக்கைக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப் படக்கூடிய படிவத்தில் இருக்க வேண்டுமென்பதடன், வகுத்துரைக்கப்படக்கூடிய விவரங்களைக் கொண்டிருத்தலும் வேண்டும்.

பிரிவு 11 இழப்பீட்டை முடிவு செய்வதற்கான அதிகார அமைப்பு:

Authority to Decide Compensation

  1. சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுக் கோரிக்கை ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகார அமைப்பினிடம் செய்துகொள்ளப்படுதல் வேண்டும் என்பதுடன், அதன்பேரில் அதன் முடிவே இறுதியானதாகும்; மேலும், நீதிமன்றம் எதிலும் அதற்கு ஆட்சேபம் எழுப்பப்படுதலுமாகாது.
  2. பொதுச் சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்கான இழப்பீட்டின் அளவைகுறித்து முடிவுக்கு வருவதில் (1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பானது.
  1. அச்சொத்தின் மதிப்பு:
  2. அப்பொதுச் சொத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் அளவு, மற்றும்
  3. வகுத்துரைக்கப்படகூடிய பிற விசயங்கள்

ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

  1. (1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பு, இழப்பீட்டிற்கான கோரிக்கையை முடிவுசெய்வதில், வகுத்துரைக்கப் படக்கூடிய நடைமுறையைப் பின்பற்றுதல் வேண்டும்.
  2. (1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பானது,
  1. உறுதிமொழியின் பேரில் சாட்சியம் எடுக்கின்ற;
  2. சாட்சிகள் முன்னிலையாவதை வலியுறுத்துகின்ற;
  3. ஆவணங்களையும்  முக்கிய சான்றுப் பொருள்களையும் வெளிக்கொணர்கின்ற மற்றும் அவற்றை தாக்கல் செய்கின்ற நோக்கத்திற்காகவும்; மற்றும்
  4. வகுத்துரைக்கப்படக்கூடிய பிறநோக்கங்களுக்காகவும்,
  1. - ஆம் ஆண்டு உரிமை வழக்கு விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்தின்படி உரிமைவழக்கு நீதிமன்றமொன்றிற்குள்ள அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கும்.

இழப்பீடானது நிலவரி நிலுவையைப் போன்றே வசூலிக்கப்படுதல் (பிரிவு 12)

Recovery of Compensation as Arrear of Land Revenue

11-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி வகுதுரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பு, சொத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் அல்லது இழப்பு எதற்குமான இழப்பீட்டுத்தொகை நிர்ணயிக்கப்பட்டதன் பேரிலும் 10-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் படி நபரின் விண்ணப்பத்தின் பேரில் அல்லது வகுத்துரைக்கப்பட்டுள்ள அலுவலரின் விண்ணப்பத்தின் பேரிலும் அத்தொகைக்கான சான்றிதழொன்றை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கலாம்; மாவட்ட ஆட்சியரும், நிலவரி நிலுவையொன்றைப் போன்ற அதே முறையில், அதனை வசூலிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மேல்முறையீடு (பிரிவு 12 A)

Appeal

  1. பிரிவு 11-ன் உட்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பெற்ற அதிகார ஆயத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவினால் பாதிப்புற்ற ஏதேனும் நபர், வகுத்துரைக்கப்பட்ட அவ்வாறான கால அளவிற்குள், இதன் பொருட்டு அரசினால் குறிப்பிடப்பெற்ற அவ்வாறான அதிகாரிக்கு, குறிப்பிடப்பெற்ற அவ்வாறான வகையில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
  2. மேல்முறையீட்டினை முடிவு செய்திட, உட்பிரிவு (1)-ன் கீழ் குறிப்பிடப்பெற்ற அதிகாரி, வகுத்துரைக்கப்படவாறான நடைமுறைவினைப் பின்பற்றிடுவார் மற்றும் அவ்வாறான மேல்முறையீட்டில் அவ்வாறான அதிகாரியின் முடிவே இறுதியானதாகும் மற்றும் அம்முடிவிற்கு யாதொரு நீதிமன்றத்திலும் வினா எழுப்பிட இயலாது.

விதிகளைச் செய்வதற்கான அதிகாரம் (பிரிவு 13.)

Power to make Rules

  1. அரசு இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
  2. மேற்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு ஊறின்றி, அத்தகைய விதிகள்:
  1. இழப்பீட்டிற்கான விண்ணப்பமொன்று எந்த அலுவலரால் செய்துகொள்ளப்படவேண்டும் என்பதற்கும்.
  2. இழப்பீட்டிற்கான விண்ணப்பத்தைப் பொறுத்த அளவில், இழப்பீட்டிற்கான விண்ணப்பத்தின் படிவம், அதில் என்ன விவரங்கள் அடங்கியிருக்கலாம் என்பது, மற்றும் அதற்காகச் செலுத்தப்படவேடிய கட்டணங்கள் எவையேனுமிருப்பின் அக்கட்டணங்கள் ஆகியவற்றிற்கும்
  3. இழப்பீட்டுக் கோரிக்கையானது எந்த அதிகார அமைப்பிடம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்கும்,
  4. 11-ஆம் பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பினால் இழப்பீட்டின் அளவைக் குறித்து முடிவுக்கு வருவதில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விசயங்கள் எவை என்பதற்கும்;
  5. 11 –ஆம் பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பினால், இழப்பீட்டுக் கோரிக்கையை முடியு செய்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என்பதற்கும்; மற்றும்,
  6. வகுத்துரைக்கப்படவேண்டியதற்கான அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயம் எதற்கும்.

வகுத்துரைக்கப்படவேண்டியதற்கான அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயம் எதற்கும் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும் அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதனை அடுத்துவருகின்ற கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர், அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல் எதையும் செய்யச் சட்டமன்றப் பேரவை உடன்படுமானாலோ அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படவோ அல்லது பிறப்பிக்கப்படவோ கூடாது என்று சட்டமன்றப் பேரவை உடன்படுமானாலோ அந்த விதி அல்லது அறிவிக்கையானது அதன் பின்னர் அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல் வேண்டும்; அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் போதல் வேண்டும்; எனினும் அவ்வாறு மாற்றியமைத்து அல்லது செயல் வடிவம் பெறாது போனது எதுவும், அந்த விதியின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ, முன்னதாகச் செயல்பட்ட செயல் எதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.

பிரிவு. 14 காப்பு

இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் ஏதொன்றிற்கும் கூடுதலாக அமைந்தவையாக இருக்கவேண்டுமேயன்றி அதைக் குன்றச் செய்வனவாக இருத்தலாகா; மற்றும் இந்தச் சட்டம் ஒருபுறமிருக்க, நபரெவருக்கேனும் எதிராகப் புலனாய்வு என்கிற வகையிலோ, அல்லது மற்றப்படியோ தொடுக்கபடக்கூடிய நடவடிக்கை எதிலிருந்தும் அந்நபருக்கு இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும் விலக்களித்தல் ஆகாது.

பிரிவு 15. நீக்கம்

1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச்சொத்து (அழிப்பு மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டமானது, இதன் மூலம் நீக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com