தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007

ஆயிரக்கணக்கான வீரர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை கண்ட இராஜாதித்தன் தன் படைவீரர்களைக் கொண்டு காவிரி நீரைச் சேமிக்க அமைத்தது தான் வீராணம் ஏரி
தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007

ஏரிகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007

பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தில், தனது எதிரிகளை எதிர்நோக்குவதற்காக, தனது புதல்வன் இராஜாதித்தனை, படை வீரர்களுடன் திருமுனைப்பாடி என்ற இடத்தில் ஆண்டுகள் பல தங்கியிருந்து முகாமிடச் செய்தான்.

ஆயிரக்கணக்கான வீரர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை கண்ட இராஜாதித்தன் தன் படைவீரர்களைக் கொண்டு காவிரி நீரைச் சேமிக்க அமைத்தது தான் வீராணம் ஏரி. இந்த ஏரியின் நீளம் 18 கிலோ மீட்டர், அகலம் 4 கிலோ மீட்டர். 1011 ஆம் ஆண்டு கட்டத் துவங்கி 1037-ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அரசர்கள் காலத்தில் கூட நீர்நிலைகளை மேம்படுத்தும் எண்ணம் அவர்களுக்குள் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் இன்று நீர்நிலைகளை மேம்படுத்தா விட்டாலும் அழிக்காமல் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது.

இவ்வாறு, நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல்  சென்னை மாகாணத்துக்குள் இருந்த இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அது பாதிக்கும் குறைவாகிவிட்டது. வெறும் 20,000 நீர்நிலைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 
 
தற்போது,  தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40 இலட்சம் ஹெக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. அரசின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் இன்றைக்கு 18,789 பொதுப்பணித் துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் இருக்கின்றன. 

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய்விட்டன. அதன் விளைவே இன்று தமிழகம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

சொல்லப்போனால், மழையின் தீவிரத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினாலேயே, சென்னையைச் சுற்றி, நூற்றுக்கணக்கான ஏரிகளை அமைத்திருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக கருதப்பட்டது. 

தமிழகத்தில் இயற்கையின் அருட்கொடையான நதிகளையும், நீராதாரங்களையும் நாம் சரியாகப் பராமரிக்கவில்லை என்பதைத் தாமதமாக உணர்ந்திருக்கிறோம். மேலே சொன்ன பட்டியலில், பல நதிகள் தற்போது வரைபடங்களில் மட்டுமே இருக்கின்றன. நீர்நிலைகளின் நிலை அதைக் காட்டிலும் மோசம். நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் 1.10 கோடி ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலத்தின் பரப்பும் சுருங்கிக்கொண்டே வருகிறது.

இவை அனைத்திலும் அரசுக்கும், மக்களுக்கும், ரியல் எஸ்டேட்காரர்களுக்கும் பங்கு உண்டு. 

தமிழகத்தில் பரவலாக இளைஞர்கள் குழுக்கள் நீர்நிலைகளையும், மறைந்துவிட்ட ஆறுகளையும் தேடத் தொடங்கியிருப்பது நம்பிக்கை தருகிறது

இதில் இன்னொரு நிர்வாகச் சிக்கல் என்னவென்றால், ஏரிகளைப் பொறுத்த வரை ஏரி நிர்வாகம் பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறையிடம் இருக்கும், அதன் வரைபட விவரம் நில அளவையிடமும், நிர்வாகம் வருவாய்த்துறையிடமும், அதிலுள்ள வண்டல் மண் கனிம வளத்துறையிடமும், பாதுகாப்பு காவல்துறையிடமும் அதிகாரப்பகிர்வு உள்ளது. 

அதிக வறட்சி, வெள்ளம் இரண்டிலிருந்தும் நம்மை நாம் காத்துக்கொள்ள ஏரிகளின் பாதுகாப்பு மிகமிக அவசியம்…

அதன் படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் பின்வரும் சட்டமானது, 2007 ஆம் ஆண்டு மே திங்கள் 22ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ள ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காகவும், இத்தகைய ஏரிகளைப் பாதுகாப்பதற்கும் அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்குமான நடவடிக்கைகளுக்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்.
    
இந்தியக் குடியரசின் ஐம்பத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-

தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (Tamilnadu protection of Tanks and Eviction of Encroachment Act,2007)
(சட்ட எண் - 8/2007)

பிரிவு 1. குறுந்தலைப்பு, பரவெல்லை மற்றும் தொடக்கம்:-

(1) இந்தச் சட்டம் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, அரசானது, அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய  அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பிரிவு 2. பொருள் வரையறைகள்.- 

இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி...

(a) ‘ஆயக்கட்டுப் பரப்பு’ என்றால், எந்த ஒரு பாசன அமைப்பின் மூலமும் அதன் ஆளுகையின்கீழ் பாசனம் பொருள்படும்.
(b) ‘வயல் வாய்க்கால்’ என்றால், பாசனத்திற்காக நீரைப் பெறவும், அதை பகிர்ந்தளிப்பதற்காகவும், தற்போது இருக்கின்ற வாய்க்கால் அல்லது இனி கட்டப்பட இருக்கின்றதுமான ஒரு வாய்க்கால் என்று  பொருள்படும்.
c) வயல் வடிகால் என்றால், நிலத்திலிருந்து உதவாத கழிவு நீர் அல்லது உபரி நீரை வெளியேற்றும் நீர் செல்வழி என்று பொருள்படும்
(d) ‘முன்கரைப் பரப்பு’ என்றால் ஏரிக்கரையின் நீர்வரத்துப் புக்கப் பகுதியில் (Tank bund)உள்ள முழுநீர்மட்ட அளவிற்கு மேலுள்ள நீர் பிடிப்புப் பகுதியை ஒட்டிய நிலப்பகுதி என்று பொருள்படும்.
(e) ‘ஏரியின் முழு நீர்மட்டம்’ என்றால், உபரிநீரை, வெளியேற்றும் கட்டமைப்பின் நீர் வழிந்தோடும் மட்டத்தின்வரை தேக்கி வைக்கப்படும் நீரின் மட்டம் என்று பொருள்படும்.
(f) ‘அரசு’ என்றால் மாநில அரசு என்று பொருள்படும்.
(g)  ‘நிலம் ‘ என்றால், நிலத்திலிருந்து கிடைக்கப்பெறும் நலப் பயன்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொருள்களையோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட எவற்றுடனும் நிரந்தரமாகப் பொருத்தப்பட்ட எதுவும் என்று பொருள்படும்.
(h) ‘வகுத்துரைக்கப்பட்ட‘என்றால், விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்.
(i) ‘வழக்கு வாய்க்கால் ‘ என்றால், நீர் ஆதாரமொன்றிலிருந்து நீரினைப் பெற்று, கீழ்மட்டத்தில் உள்ள ஏரிக்கு வழங்கும் ஒரு வாய்க்கால் என்ற பொருள்படும்.
(j) ‘உபரி நீர் செல்வழி‘என்றால், நீர் ஆதாரமொன்றிலிருந்து நீரினைப் பெற்று, கீழ்மட்டத்தில் உள்ள அடுத்த ஏரிக்கோ அல்லது ஆற்றுக்கோ எடுத்துச்; செல்லும் வாய்க்கால் என்ற பொருள்படும்.
(k) ‘உபரிநீர் கட்டமைப்பு‘ என்றால்,  ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை, ஏரியின் பாதுகாப்பின் பொருட்டு, கீழ்மட்டத்தில் உள்ள ஆறு அல்லது ஏரிக்கு வெளியேற்றும் ஒரு ஏற்பாடு என்று பொருள்படும்.
(l) ‘ஏரி‘ என்றால், நீரினைப ;பயன்படுத்துவதற்குத் தேக்கி வைப்பதற்காக ஏற்படுத்துப்பட்ட ஒரு கட்டமைப்பு மற்றும் வழங்கு வாய்க்கால் மற்றும் அதனைச் சார்ந்த கட்டுமானங்கள், ஏரி மதகு, உபரிநீர் செல்வழி மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகளை உள்ளடக்கியதாகும்.  இது தவிர பொதுப்பணித்துறையின் கட்டுப்பாடு மற்றம் மேலாண்மையில் உள்ள வடிகால்கள மற்றும் ஏரியின் புறம்போக்கு நிலங்கள் என்று பொருள்படும்.
(m)     ‘ஏரிக்கரை‘ என்றால் ஒரு சிறிய நிலையான மண்ற அணை பொருள்படும்.
(n) ‘ஏரி மதகு‘ என்றால், ஏரியிலிருந்து பாசனத்திற்காக நீரினை வழங்குவதற்கான போக்கு வழி என்ற பொருள்படும்.
(o) ‘நீர்பிடிப்பு பரப்பு‘ என்றால், ஏரியின் முழு நீர்மட்ட அளவில், பரவியுள்ள நீரின் பரப்பு என்ற பொருள்படும்.

பிரிவு 3. ஏரிகளை அளப்பதற்கு பணிப்பாணையிடுவதற்கான அதிகாரம்.- (Power to direct survey of tanks)

அரசானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஏரிகள் தொடர்பான பரப்பிடங்களைப் பொறுத்த வரையிலான எல்லைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக வருவாய் துறையில் கிடைக்கக்கூடிய பதிவுருக்களின்படி நில அளவை செய்வதற்குப் பணிப்பாணை பிறப்பிக்கலாம் மற்றும் எல்லைகளை அடையாளம் காணும் நோக்கத்திற்காக வாய்க்கால், அனைத்து நாற்புற எல்லைகள், அடையாளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகின்ற விளக்கப்படங்களும் தயார் செய்யப்படுதல் வேண்டும்.

பிரிவு 4. நில அளவை அலுவலர்களை நியமித்தல்.- 

(1)    அரசோ அல்லது அரசால் அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர்கள் எவருமோ ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய வட்டார எல்லைகளுக்குள்ளாக இருக்கும் ஏரிகளை நில அளவை செய்வதற்காக வட்டாட்சி நில அளவையர் நிலைக்குக் குறையாத அலுவலர் எவரையும் நில அளவை அலுவலராக ஆணை வாயிலாக நியமிக்கலாம்.

(2)    நில அளவையர் வகுத்துரைக்கக்கூடிய அத்தகைய முறையில் ஏரிகளை நில அளவை செய்வதை நிறைவேற்றுதல் வேண்டும்.

(3)    ஏரிகளைக் கட்டுப்பாடு செய்யும் பொதுப்பணித் துறையின் அத்தகைய அலுவலர்கள் நில அளவை அலுவலருக்கு உதவி புரிதல் வேண்டும்.

பிரிவு 5. நுழைவதற்கான அதிகாரம்.- 

நில அளவை அலுவலர் மற்றும் நில அளவை அலுவலருக்கு உதவி செய்யும் அலுவலர்கள் ஏரிகளை நில அளவை செய்வதற்காக நிலம் எதிலும் நுழைவதற்கும் மற்றும் தேவைப்படக்கூடிய அனைத்துச் செயல்களையும் செய்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பர்.

பிரிவு 6. நில அளவை அலுவலரின் அறிக்கை.- 

(1)    நில அளவை அலுவலர், ஏரிகளை அளக்கும் பணி முடிந்தபின்பு அவைகளின் எல்லைகளை அடையாளம் காணும் நோக்கத்திற்காக ஏரிகளின் எல்லைகளையும் தேவைப்படும் பிற தகவல்களையும் குறிக்கிற விளக்கப்படம் ஒன்றையும், பதிவுறு ஒன்றையும்  தயார் செய்தல் வேண்டும்.

(2)    (1)ஆம் உட்பிரிவின்படி தயாரிக்கப்பட்ட விளக்கப்படம் மற்றும் பதிவுருவானது அரசால் குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய ஏரிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிற பொதுப்பணித்துறை அலுவலரொருவரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

(3)    (2) ஆம் உட்பிரிவில் கட்டப்பட்ட  அலுவலரானவர், விளக்கப்படும் மற்றும் பதிவுருவானது ஒப்படைக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஏரியின் எல்லைகளைக் குறிப்பிட்டு வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய முறையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிடுதல் வேண்டும்.

பிரிவு 7. ஆக்கிரமிப்பை அகற்றுதல்.- 

(1)    6 ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட அலுவலர், நபர் எவரும் ஏரியின் எல்லைகளுக்குள்ளாக நிலம் எதையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் எனவும் மற்றும் ஆக்கிரமிப்பாளர் அகற்றப்பட வேண்டும் எனவும் கருதுவாரானால்,  அந்த அலுவலரானவர் வகுத்துரைக்கப்பட்ட முறையில் அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள தேதிக்கு முன்னர் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு தொடர்புடைய நபரை கோரி அறிவிப்பு ஒன்றினை பிறப்பித்தல் வேண்டும்.

(2)    (1) ஆம் உட்பிரிவின்படி அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவிற்குள்ளாக ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பை அகற்றாதவிடத்தும் மற்றும் ஏரியின் எல்லைகளுக்குள்ளாக அமைந்த நிலத்தை விட்டுச் செல்லாமலும் இருக்கிறவிடத்தும், 6 ஆம் பிரிவின் (2) அம் உட்பிரிவில் கட்டப்பட்ட அலுவலர், தேவைப்படக்கூடிய அத்தகைய காவலரின் உதவியைப்பெற்ற ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியில் எல்லைகளுக்குள்ளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் உடைமையை எடுத்துக் கொள்ளுதல்  வேண்டும்.  இந்த நோக்கத்திற்காக எந்த காவல் அலுவலரின் உதவியானது தேவைப்படுகிறதோ அவர் அந்த அலுவலருக்குத் தேவையான உதவியைச் செய்தல் வேண்டும்.
(3)    ஏரியின் எல்லைகளுக்குள்ளாக நிலத்தின் மீது விளைந்த பயிர் அல்லது எழுப்பப்பட்ட பிற கட்டமைப்பு எதுவும் தண்ட இழப்புக்கு உள்ளாதல் வேண்டும் மற்றும் (1)ஆம் உட்பிரிவின்படியாக அறிவிப்புக்குப் பின்பு ஆக்கிரமிப்பாளரால் கட்டப்பட்ட கட்டடம் அல்லது எழுப்பப்பட்ட பிற கட்டுமானம்  எதுவும் அல்லது அதில் சேகரித்து வைக்கப்பட்ட எதையும் ஆக்கிரமிப்பாளர் அகற்றாது இருப்பின் அவையும் தண்ட இழப்பிற்கு உள்ளாதல் வேண்டும்.

பிரிவு 8. குற்றங்களும் தண்டங்களும்.-

(a)    சட்டப்படியான அதிகாரமின்றி தண்ணீர் சூழப்பட்ட நிலத்திலும் ஏரியின் நீர்க்கரை பரப்பிடங்களில் நுழைகிற

(b)    சட்டப்படியான அதிகாரமின்றி பயிர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிற

(c)    சட்டப்படியான அதிகாரமின்றி மரங்களையும் விளைவித்திருக்கிற கட்டப்பட்ட கட்டமைப்புகளைச் சேதப்படுத்துகிற

(d)    ஏரிக்கரையை, ஏரி மதகுகளை, உபரி நீர் கட்டமைப்புகளை பிறவாறு கட்டப்பட்ட கட்டமைப்புகளைச் சேதப்படுத்துகிற

(e)    இந்தச் சட்டத்தின்படி அலுவலர்கள் தங்களுடைய பணியினைச் செய்வதைத் தடுக்கிற

(f)    ஏரிகளை நிரப்புவதற்கு நீர் வழங்கும் வாய்க்காலின் நீரோட்டத்தை தடுக்கிற வகையில் இடையீடு செய்து  அருகிலுள்ள வாய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்கிற

(g)    ஆயக்கட்டு பரப்பிடத்தை நிரப்புவதற்கு ஏரி மதகிலிருந்து மாற்றி வாய்க்கால்களுக்கான நீரோட்டத்தை தடுக்கிற

(h)    வயல் வாய்க்கால்களில் அமைந்துள்ள பகிர்ந்தளிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்புகளைச் சேதப்படுத்துகிற

(i)    வயல் வாய்க்கால் அமைப்புகளில் உள்ள நீரோட்டத்தைச் சேதப்படுத்தித் தடுக்கிற

(த)    பயிர் செய்வதற்காக இயந்திர மற்றும் மின்சார சாதனங்கள் மூலமாக ஏரியிலிருந்து நீரை இழுத்து எடுக்கிற

எவரொருவரும் மூன்று மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்கான சிறைத் தண்டனையுடனோ அல்லது ஐயாயிரம் ரூபாய் வரையிலான பணத்தண்டத்துடனோ அல்லது இரண்டும் விதித்தோ தண்டிக்கப்படுதல் வேண்டும்.

பிரிவு 9. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.- 

இந்தச் சட்டத்தினையொட்டியோ, அல்லது அதன்கீழ்ச் செய்யப்பட்ட விதி அல்லது ஆணையொன்றின்படியோ நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்கருதும் ஏதொன்றிற்காகவும்; நபர் எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எவையும் தொடரப்படுதல் ஆகாது.

பிரிவு 10. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-

இந்தச் சட்டத்தின் வகை முறைகளைச் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு தமிழ்நாடு அரசிதழின் அறிவிக்கையின் மூலமாக அந்த இடப்பாடுகளை நீக்குவதற்குத் தேவையானதன்று அல்லது உகந்ததென்று தனக்குத் தோன்றக் கூடியவாறு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு ஒவ்வாதவையாயிராத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.

வரம்புரை: ஆனால் அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டுக் கால அளவு முடிவடைந்த பின்னர்செய்யப்படுதலாகாது.

பிரிவு 11. பிற சட்டங்களின் செயற்பாடு பாதிக்கப்படுதல் ஆகாது எனல்.- 

இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதற்கும் கூடுதலாக இருத்தல்வேண்டுமேயன்றி அதனைக் குறைவுபடுத்துதல் கூடாது.

பிரிவு12. புறம்போக்கு நிலங்களை அயலடைவு செய்தல்.-
சேமிப்புக் கொள்ளளவு, நீரின் தன்மை இவற்றுடனான குறுக்கீடு ஏதுமின்றி, பொதுப்பணித் துறையின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள ஏரிப்புறம்போக்கு நிலத்தின் பகுதி எதனையும் அரசு, பொது நலனில் அயலடைவு செய்யலாம்.

பிரிவு 13. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- 

(1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையுமோ அல்லது அவற்றுள் ஏதொன்றையுமோ நிறைவேற்றுவற்கான விதிகளைச் செய்யலாம்.

(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்  மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது ஆணை அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்பட வேண்டும்.  அவ்வாறு வைக்கப்பட்ட அல்லது அந்தக் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்பு சட்டமன்றம் பேரவையானது அத்தகைய விதி, ஆணை அல்லது அறிவிக்கையில் மாற்றம் எதையும் செய்யுமானால் அல்லது சட்டமன்றப் பேரவையானது அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை செய்யப்படுதல் கூடாது அல்லது பிறப்பிக்கக் கூடாது என்ற சட்டமன்றப்  பேரவை முடிவு செய்யுமானால், அதற்குப்பின் அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அவ்வாறு மாற்றப்பட்ட வடிவில்தான் நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்வுக்கேற்ப அது செல்திறன் அற்றதாதல் வேண்டும்.  ஆயினும் அத்தகைய மாற்றமோ அல்லது செல்திறன் அற்றதாதல் வேண்டும்.  ஆயினும் அத்தகைய மாற்றமோ அல்லது செல்திறன் அற்றுப்போவதோ, அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்ட்ட ஏதொன்றின் செல்லும் தன்மைக்கும் பாதகம் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com