ஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1

இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒவ்வோர் உரிமமும் எந்த ஆண்டுக்கு அது வழங்கப்பட்டதோ அந்த ஆண்டின் கடைசி நாளன்று காலாவதியாதல் வேண்டும்; ஆனால் ஆண்டுக்காண்டு புதுப்பிக்கப்படலாம். 
ஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பழைய பொருள் வியாபாரிகளையும் (Scrap Merchants) இரண்டாங்கை பொருள் கையாளுநர்களையும் (Dealers in second-hand property) தானியங்கி மோட்டார்வாகன பட்டறைகள் (Automobile workshops) ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடைகள் (Tinker Shops) ஆகியவற்றின் உரிமையாளர்களையும், பொது நலனுக்காக முறைப்படுத்திக் கட்டுப்பாடு செய்வதற்காகவும் அத்தகைய பழைய பொருள் வியாபாரிகளுக்கும், இரண்டாங்கை பொருள் கையாளுநர்களையும், பயன்படுத்தப்பட்ட சொத்தை வைத்து வணிகம் செய்பவர்களுக்கும் தானியங்கி மோட்டார்வாகன  பட்டறைகள், ஓட்டை உடைசல் சீர்ப்படுத்தும் கடைகள் ஆகியவற்றின் உடைமையாளர்களுக்கும் உரிமம் வழங்குவதற்கும் மற்றும் அவை தொடர்பான பொருள்களுக்காகவுமான ஒரு சட்டம்.
The Tamil Nadu Scrap Merchants and Dealers in Second-Hand Property and Owners of Automobile Workshops and Tinker Shops (Regulation, Control and Licensing) Act, 1985

பொருள் வரையரைகள்- (பிரிவு: 2)

(a) “இரண்டாங்கை, பொருள் கையாளுநர்” (Dealer in second-hand property)
என்பது பயன்படுத்தப்பட்ட சொத்து எதனையும் வாங்குகின்ற அல்லது விற்கின்ற வியாபாரத்தைச் செய்துவருகின்ற எவரும் என்று பொருள்படுவதோடு, பயன்படுத்தப்பட்ட சொத்து எதனையும் வணிகர், எவரொருவர் சார்பாகவோ, தாமாகவோ தம்முடைய வேலையாட்களின் மூலமாகவோ வாங்குகின்ற அல்லது விற்கின்ற முகவர் ஒருவரையும் உள்ளடக்கும்.
(b) “அரசு” என்பது மாநில அரசு என்று பொருள்படும்.
(c) “உடைமையாளர்” என்பது, தானியங்கி மோட்டார்வாகன  பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்ப்படுத்தும் கடையொன்றின் தொடர்பாக, அந்த தானியங்கி மோட்டார் வாகன  பட்டறையின் அல்லது நேர்விற்கேற்ப ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையின் அலுவல்களின் மீது அறுதியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள நபர் அல்லது அதிகார அமைப்பு என்றும் மேற்சொன்ன அலுவல்கள், மேலாளர், மேலாண்மை இயக்குநர், மேலாண்மை முகவர், கண்காணிப்பாளர் என்றோ அல்லது பிற ஏதொரு பெயர் மூலமாகவோ அழைக்கப்படும் பிற எவரிடமேனும் ஒப்படைக்கப்பட்டுள்ளவிடத்து, அந்த பிற நபர் என்றும் பொருள்படும்.
(d) “வியாபார இடம்” என்பது பழைய பொருள் வியாபாரி ஒருவர் அல்லது பயன்படுத்தப்பட்ட சொத்தினை அல்லது வணிகம் செய்யும் ஒருவர் அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறை ஒன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்ப்படுத்தும் கடை ஒன்றின் உடைமையாளர் ஒருவர் தொடர்பாக,

(1) முகவர் ஒருவரின் மூலமாக (எப்பெயரில் அழைக்கப்படுவதாயினும்) வியாபாரத்தை அவர் நடத்தி வருகின்ற நேர்வில், அத்தகைய முகவரின் வியாபார இடத்தை;
(2) தம்முடைய வியாபாரம் தொடர்பாக சொத்தினையோ, சரக்குகளையோ, மூலப்பொருட்களையோ, அவர் சேமித்து வைக்கிற பண்டகசாலை யொன்றை அல்லது சேமிப்புக் கிடங்கொன்றை அல்லது பிற இடத்தை மற்றும்,
(3) தமது கணக்குப் புத்தகங்களை அவர் வைத்து வருகின்ற இடமொன்றை உள்ளடக்கும். 
(e) “பழையபொருள் வியாபாரி” (Scrap merchants) என்பது பழைய பொருட்கள் எவற்றையும் வாங்குகின்ற அல்லது விற்கின்ற வியாபாரத்தைச் செய்து வருகின்ற எவரும் என்று பொருள்படும்.
(f) “ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடை” (Tinker shop) என்பது சிறு பொறிகள் (Gadgets) இயந்திரங்களை, கார்கள், வீட்டுப் பாத்திரங்கள் அல்லது அவை போன்றவை பழுதுபார்க்கப்படுகின்ற, சரி செய்யப்படுகின்ற, மாற்றியமைக்கப் படுகின்ற அல்லது வேறுவகையில் சீர்படுத்துகின்ற ஓரிடம் என்று பொருள்படும். 

பழைய பொருள் வியாபாரிகள், இரண்டாங்கை பொருள் கையாளுநர்கள், தானியங்கி மோட்டார்வாகன பட்டறைகளின் மற்றும் ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடைகளின் உடைமையாளர்கள் ஆகியோர் ஆண்டுதோறும் உரிமங்கள் பெற வேண்டுமென்பது: (பிரிவு 3.)

(1)பழைய பொருள் வியாபாரி அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் அல்லது தானியங்கி மோட்டார்வாகன  பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உரிமையாளர் எவரும், இச்சட்டத்தின் கீழ் இதன் பொருட்டு உரிமம் ஒன்றை அவர் பெற்றிருந்தாலன்றி இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலோ அல்லது அதற்குப் பின்போ, இந்த மாநிலத்திலுள்ள பகுதி எதிலும் அத்தகைய பழைய பொருள் வியாபாரியாகவோ, இரண்டாங்கை, பொருள் கையாளுநர், அந்த வியாபாரத்தை அல்லது அத்தகைய தானியங்கி மோட்டார்வாகன  பட்டறையோ, ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையையோ நடத்துகின்ற வியாபாரத்தைச் செய்து வருதலோ, தொடர்ந்து செய்துவருதலோ, தொடர்ந்து செய்து வருதலோ ஆகாது. 
விளக்கம்: பழைய பொருள் வியாபாரி ஒருவர் அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் ஒருவர் அல்லது தானியங்கி மோட்டார்வாகன  பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர், ஒரே நகரத்திலோ அல்லது கிராமத்திலோ அல்லது வெவ்வேறு நகரங்களில் மற்றும் கிராமங்களிலோ ஒன்றுக்கு மேற்பட்ட கடையோ, வியாபார இடத்தையோ பெற்றிருக்குமிடத்து, அவர் அத்தகைய ஒவ்வொரு கடையைப் பொறுத்தும் அல்லது வியாபார இடத்தைப் பொறுத்தும், தனித்தனியாக உரிமம் ஒன்றைப் பெறுதல் வேண்டும்.

(2) இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒவ்வோர் உரிமமும் எந்த ஆண்டுக்கு அது வழங்கப்பட்டதோ அந்த ஆண்டின் கடைசி நாளன்று காலாவதியாதல் வேண்டும்; ஆனால் ஆண்டுக்காண்டு புதுப்பிக்கப்படலாம். 

உரிமங்களை வழங்குதலும் வழங்க மறுத்தலும்: (பிரிவு 4.)

(1) 3 ஆம் பிரிவின் படியான உரிமம் ஒன்றுக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகார அமைப்பிடம் (இதன் பின்பு இதில் உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பு எனக் குறிப்பிடப்படுவதுண்டு) எழுத்துருவில் செய்து கொள்ளப்படுதல் வேண்டும். 
(2) இந்தப் பிரிவின் கீழ் உரிமம் ஒன்றை வழங்குவதற்கான விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதில், உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பானது பின்வரும் விவரங்களை, அதாவது: 

(a) பொதுவாக மக்களின் நலனை;
(b) விண்ணப்பதாரர் இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXV/1860) XVII- ஆம் அத்தியாயத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் எதற்காகவேனும் தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளாரா என்பதை; 
(c) வியாபார இடத்தைப் பொறுத்து 5-ஆம் பிரிவின்படி அனுமதியானது பெறப்பட்டுள்ளதா என்பதை;
(d) வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். 

(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் உரிமம் எதுவும் வழங்க மறுக்கப்படுவதற்கு முன்னர், விண்ணப்பதாரருக்கு, சாதாரணமாக 15 நாட்களுக்கு மேற்படாதிருக்கின்ற நியாயமானதொரு காலத்திற்குள் அவருடைய முதலீடுகளைச் செய்துகொள்வதற்கு வாய்ப்பொன்றினைக் கொடுத்தல் வேண்டும்; மற்றும் இதன் பொருட்டு அவரால் செய்து கொள்ளப்பட்ட முறையீடு எதுவும் அனுமதியான ஆணைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் உரியவாறு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும். 

(4) இந்தப் பிரிவின் கீழ் உரிமம் ஒன்றை வழங்குவதிலோ வழங்க மறுப்பதிலோ, உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பு வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகார அமைப்பினையோ, அலுவலரையோ கலந்தாய்வு செய்யலாம். 

(5) இந்தப்பிரிவின் கீழ் உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பின் ஆணையொன்றினால் குறையுற்றுள்ள எவரும், வகுத்துரைக்கப்படக் கூடிய காலத்திற்குள்ளாகவும்(prescribed time), வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும் இதன் பொருட்டு அரசு குறித்துரைக்கக்கூடிய அதிகார அமைப்பிடம் மேல் முறையீடு செய்து கொள்ளலாம்; மற்றும் அத்தகைய அதிகார, அமைப்பு தான் பொருத்தமென நினைக்கக்கூடிய ஆணையை இந்த நேர்வில் பிறப்பிக்கலாம். 

(6) உரிமம் ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணத்தைச் செலுத்துவதன் பேரிலும் வழங்கப்படுதல் வேண்டும். 

பிரிவு: 5. பழைய பொருள் வியாபார இடம் எதையும் நிறுவுவதற்காகவோ, இரண்டாங்கை, பொருள் கையாளுவதற்காகவோ, தானியங்கி மோட்டார்வாகன  பட்டறை ஒன்றை அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடை ஒன்றை நிறுவுவதற்காகவோ விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும் என்பது: - 

(1) பழைய பொருள் வியாபாரிக்கான வியாபார இடம் எதையும் நிறுவக் கருதுகின்ற, அல்லது இரண்டாக்கை, பொருளை அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறை எதையேனும் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடை எதையேனும் வைத்து வணிகம் செய்வதற்கு கருதுகின்ற ஒவ்வொருவரும் அத்தகைய இடத்தை நிறுவுவதற்கு முன்னர், கருதியுள்ள வேலையை மேற்கொள்வதற்கான அனுமதிக்கான உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பிடம் எழுத்துருவில் விண்ணப்பம் ஒன்றை செய்து கொள்ளுதல் வேண்டும். 

(2) அவ்விண்ணப்பமானது

(a)    வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்(Prescribed manner) தயாரிக்கப்பட்ட வியாபார இடத்தின் அல்லது தானியங்கி மோட்டார்வாகன  பட்டறையின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையின் அமைப்புப் படம் ஒன்றுடன்,
(b)    வகுத்துரைக்கப்படகூடிய பிற விவரங்களுடன் இணைத்தனுப்பப்படுதல் வேண்டும்,

(3)    உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பு அவ்விண்ணப்பத்தைப் பெறுவதற்குப் பின்னர் கூடிய விரைவில்,

(a)    தான் விதிப்பதற்கு பொருத்தமென நினைக்கிற நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பித்துக் கொள்ளப்பட்ட அனுமதியை வழங்க வேண்டும்; அல்லது
(b)    அத்தகைய நிறுவனம்

(i)    அந்த வட்டத்திலுள்ள மக்கள் தொகை நெருக்கத்தின் காரணமாக ஆட்சேபனைக்குரியது என்று; அல்லது,
(ii)    அந்த வட்டாரத்தில் குடியிருப்பவர்களுக்கு தொல்லையை அநேகமாக விளைவிக்கக்கூடும் என்று; அல்லது,
(iii)    அத்த வட்டாரத்தில் குடியிருப்பவர்களுக்கு போக்குவரத்து அல்லது உடல்நல இன்னல்களை அநேகமாக விளைவிக்கக் கூடும் என்று; அல்லது
(iv)    வண்டிகளை நிறுத்தி வைப்பதற்காக சாதாரணமாக தேவைப்படக்கூடிய போதிய இடவசதியைக் கொண்டிருக்கவில்லை என்று தாம் கருதுமானால், அனுமதி வழங்க மறுத்தல் வேண்டும்.

(4) (3) ஆம் உட்பிரிவின் (b)-கூறின் கீழ் எதுவும் மறுக்கப்படுவதற்கு முன்னர், சாதாரணமாக பதினைந்து நாட்களுக்கு மேற்படாத நியாயமானதொரு காலத்திற்குள், தம்முடைய முறையீட்டைச் செய்து கொள்வதற்கு வாய்ப்பொன்றை அவ்விண்ணப்பதாரருக்கு கொடுத்தல் வேண்டும் மற்றும் இதன் பொருட்டு அவரால் செய்யப்படும் முறையீடு எதையும், அறுதியான ஆணைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் உரியவாறு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். 

(5) இந்த பிரிவின் கீழ் அனுமதியை வழங்குவதற்கு அல்லது வழங்க மறுப்பதற்கு முன்னர், உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பானது பழைய பொருளையோ அல்லது இரண்டாங்கை பொருளையோ தானியங்கி மோட்டார்வாகன  பட்டறையோ அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையையோ வைத்துச் செய்யப்படும் வணிகம் எங்கு நிறுவப்படவுள்ளதோ அந்த இடத்தில் பொருத்தமுடைமை குறித்து நல்வாழ்வு (சுகாதார) அலுவலரையும், போக்குவரத்து காவல் துறையையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதோடு, அவர்களுடைய கருத்துக்களையும் உரியவாறு கவனத்திற் கொள்ளுதலும் வேண்டும்.  

(6) உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பினால் விண்ணப்பம் பெறப்பட்டதற்குப் பின்னர் அறுபது நாட்களுக்குள் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அனுமதிக்காகச் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றின் மீதான ஆணைகள் விண்ணப்பதாரரால் பெறப்படவில்லை என்றால், தானியங்கி மோட்டார்வாகன பட்டறை அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடை நிறுவன அமைப்பிற்குப் பொருந்தத்தக்கதான, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதனின் வகைமுறைகளுக்கும் உட்பட்டு அனுமதியானது வழங்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும். 

(7) இந்தப் பிரிவின் கீழ் அனுமதியொன்றை வழங்க மறுக்கின்ற, இந்த பிரிவின் படியான உரிமம் வழங்க அதிகார அமைப்பின், ஆணையொன்றினால் குறையுற்றுள்ள எவரும் வகுத்துரைக்கப்படக்கூடிய காலத்திற்குள்ளாக, இதன் பொருட்டு அரசு குறித்துரைக்கக்கூடிய அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்பதோடு அத்தகைய அதிகார அமைப்பும் இந்த நேர்வில், தான் பொருத்தமென நினைக்கக்கூடிய ஆணையைப் பிறப்பிக்கலாம். 

(8) ஒவ்வோர் அனுமதியும் வகுத்துரைக்கப்படக்கூடிய படிவத்திலும் வரையறைகளுக்குட்பட்டும் இருநூறு ரூபாய்க்கு மேற்படாமல் வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணத்தைச் செலுத்துவதன் பேரிலும் வழங்கப்படுதல் வேண்டும். 

இருந்து வருகின்ற ஒரு சில வியாபார இடங்களைப் பொறுத்த வகைமுறை: (பிரிவு 6.) 

(1) பழைய பொருள் வியாபாரிகள் அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநராக அல்லது தானியங்கி மோட்டார்வாகன  பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உடைமையாளராக இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு அடுத்து, முன்னர் அலுவல் இடம் எதிலேனும் வியாபாரத்தைச் செய்து வந்துள்ள அத்தகைய பழைய பொருள் வியாபாரி அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் அல்லது தானியங்கி மோட்டார்வாகன  பட்டறை ஒன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உடைமையாளர் ஒவ்வொருவரும் இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும் மற்றும் (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டும், அத்தகைய வியாபார இடத்தில் அத்தகைய வியாபாரத்தைத் தொடர்ந்து செய்துவரலாம். 

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி வியாபாரம் எதையும் செய்துவர உரிமைத் தகுதியுடைய எவரும். அத்தகைய வியாபாரத்தைச் செய்து வருவதற்காக 4-ம் பிரிவின் கீழும், அந்த அலுவல் இடத்தைப் பொறுத்து 5-ஆம் பிரிவின் கீழும் உரிமமொன்றை அவர் பெற்றிருந்தாலன்றி, இந்த சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து ஆறுமாதக் கால அளவு முடிவடைந்த பின்னர், அத்தகைய வியாபாரத்தைத் தொடர்ந்து செய்து வருதலாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com