இனிமேல் மழைக் காலம் வாசகர் கவிதை பகுதி 3

தைப்பனி உச்சந்தலையை பதம் பார்க்க
இனிமேல் மழைக் காலம் வாசகர் கவிதை பகுதி 3

இனிமேல் மழைக்காலம்

தைப்பனி உச்சந்தலையை பதம் பார்க்க,
மாசிப்பனி விரிக்கும் வலையில் மேனி சுருங்க,
பங்குனி வெயில் வெள்ளோட்டம் பார்க்க,
சித்திரை வெயிலுடன் கத்திரிவெயில் கவனம் ஈர்க்க,
சலங்கையிட்ட மழையின் நடனம் அரங்கேற,
நீர்நிலை மண்டலம் குதூகலத்துடன் தயாராக,
தென்மேற்கு பருவமழை தன் முகம் காட்ட,
நாஞ்சில் சிறப்பாம் வான்மழைச்சாரல்
பூமழையாய் ஆனியை ஆட்கொள்ள,
சாரலுடன் ஆடிக் காற்று வெண்சாமரமானதே !
ஆவணியில் நிதானித்து , புரட்டாசியில் புரட்சி காண
ஐப்பசி கார்த்திகையில் இனிமேல் மழைக்காலமேயென
வடமேற்கு பருவமழை தன்னாட்சியை பிடித்ததே !
சூறைக்காற்றுடன் பருவமழை கொண்டாட,
தொண்டையில் கீச்கீச்சுடன் மார்கழி பனி
குளிர்க்கால கூட்டத்தைத் தொடங்கியதே !

- தனலட்சுமி பரமசிவம்

**

மழைக்காலமே நீ - ஒவ்வொரு
வருடமும் மணமாக காத்திருக்கும்
புதுப்பெண்ணாய் வரவேற்கப்படுகிறாய்...

வந்தபிறகாே  - கொடுத்த மதிப்பும் 
எடுத்த ஆரத்தியும் - உப்புக்கடலுக்கென
மாறி தடம்புரண்டுவிடுகிறது......!!!

அத்திவரதரின் அருள்மழையும் கிட்டிவிட்டது - ஆனால்
அந்திவானத்தின் மேகமழைதான் - இன்னும்
நிலுவையில் கிடக்கும் வழக்காய் நீள்கிறது...!!!

இருப்பதற்கு மட்டுமல்ல - இங்கே
இறந்துவிட்டால் இறுதிச்சடங்கிற்கு கூட
நீர்கிடைப்பது அரிதாகிவிட்டது...!!!

மழையை நம்பியே ஆயிரம் கனவுகள் - ஆனால்
மழை வருவதே கனவாயிருக்கிறது -
இருந்தாலும் நம்பிக்கை பிறக்கிறது
இனிமேல் மழைக்காலம் தானென்று.....!!!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

வறண்டிருந்த இளமை நாட்களில்
உன் பார்வை பட்டதே
இனிமேல் மழைக்காலம் தான்

நிறைந்தமனப் புன்னகை
என் மேல் பட்டதே
இனி மேல் மழைக் காலம் தான்

உன் பிறந்த நாளிலும்
என் பிறந்த நாளிலும்
நம் காதல் பிறந்த நாளிலும்
மரக்கன்றுகள் நடுவோம்
மழை பெறுவோம்

கண்ணீர் விட்டல்ல
தண்ணீர் விட்டே வளர்ப்போம்
காதல் பயிரை மட்டுமல்ல
காதலால் நட்ட மரக்கன்றுகளையும்.

வாழ்வின் எல்லாத் தருணங்களிலும்
இணைந்தே இருப்போம்
நினைந்தே இருப்போம்
நெஞ்சுக்குள் மழைவேண்டி

வழியெங்கும் காணும் ஓரங்களில்
வகைவகையாய்த் தூவுவோம்
விதைப்பந்துகளை
வளரும் போது வளரட்டும்

மரங்களடர்ந்த சோலைகளை
உருவாக்குவோம்
மற்றவர் பட்டா போட்டுக் கொள்ளவல்ல...,
மழைபெறும் மனதிற்காக

அட....யாரும் எதுவும் என்ன சொல்ல
மழை பெறுவது நம் கடமை
மழையில் நனைவது நம் உரிமை
மழையால் வாழும் விவசாயம்

பூமியெங்கும் குளிரட்டும்
ஏனெனில் இங்கே
இதயங்கள் குளிர்ந்தன காதலால்
இனிமேல் மழைக் காலம் தான்.

- கவிமாமணி இளவல் ஹரிஹரன், மதுரை

**

இனிமேல் மழைக்காலம் 

இரவெனில் பகலுண்டு இனிதெனில் கசப்புண்டு
  இதையறி இனிய மனமே ! -நல்ல 
வரவெனில் செலவுண்டு வழியெனில் தடையுண்டு
  வகையறி வாச மலரே !

வெயிலுக்கு நிழலுண்டு விளைவுக்கு விலையுண்டு
  வினையெனில் வெற்றி உண்டு !- நின்
துயிலுக்குப் பின்னாலே துணிவுண்டு துணையுண்டு
  துயரெல்லாம் தூள்தூள் ஆமே !

நீரின்றி நிலையில்லை நிலந்தன்னில் விளைவில்லை
  நீடித்த நிலைநீங் குமே !- மழை
நீரினால் நிலமெங்கும் நிலையான வளமோங்கும்
நிறைவொன்றே நிலமா ளுமே !

இனிமேலே மழைக்காலம் இனிதான விழாக்கோலம்
  எங்கெங்கும் இனிதா ளுமே !- நல்ல 
கனி,காய்,பூ எல்லாமும் கணக்கின்றி விளைந்தெங்கும்
  களிப்பான உணவா குமே !

மழைநீரை வீணாக்கி மண்மலடு ஆக்காமல் 
  மழைநீரைத் தேக்க வேண்டும் ! - அதை
விழைகின்ற நேரத்தில் விருப்பம்போல் பயனாக்க
  வேண்டுவகை செய்ய வேண்டும் !

மழைவெள்ளம் போலவே மகிழ்ச்சியே வெள்ளமாய்
  மனந்தனில் பாய வேண்டும் !- இந்த 
மழைக்காலம் மலர்காலம் மகிழ்க்கோலம் ஆகியே
  மாட்சியே காண வேண்டும் !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி,ஆர்க்காடு.

**

நாக்கும் வறண்டு போனதே! - ஆறடி
நல்லுடல் தீய்ந்து போனதே! 
போக்குக் காட்டி வெயிலும்- எம்மை
பொசுக்கி வாட்டி எடுக்குதே! 

தண்ணீர்  வேட்கை  தீர்த்திட -  எந்தத்
தனியொரு வழியும் தெரியலே! 
கண்ணீர்  உடலும்  வடிக்க  - குடிக்க
கனியின் சாறும் போதலே! 

துணியும்  அணிய முடியலே  - வெளியில்
துணிந்து   செல்ல முடியலே!  
பிணியும் நிறைய பெருகுதே - எந்தப்
பணியும் செய்ய முடியலே! 

வியர்வையில்  குளிக்கும் நிலையும் - மாறி
மழையில் குளிக்கும்  நாளை
வியந்து  நோக்கி  இனிமேல்- காத்திட
மழையின் காலமே  வா! வா! 

மெய்யைப்  பழுத்தப்  பழமாய் - எம்மை
விழுந்திட  வைத்த  வெயிலே
நெய்யாய்  உருகினோம்  போதும்! -இனிமேல்
நனைந்து   மகிழும்  மழைக்காலம்! 

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

**

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் 
பொறக்குது ...இனிமேல் மழைக் காலம்
இனிமேல் மழைக் காலமே !அத்திப் 
பூத்தாற்போல் பெய்யும் வான் மழை 
போல்  வீட்டு வாசலில் நின்று குரல் 
கொடுக்கும்  குடுகுடுப்பைக் காரன் !
அசரீரி மாதிரி குரல் கொடுக்கும் அந்த 
மனிதரின் கையில் இருக்கும் குடுகுடுப்பை 
என் கண்ணுக்கு வானிலை நிலைய 
"ரேடார்" ஆகாவே  தெரியுது அய்யா ! 
மழைக்காலம் அது ஒரு கனாக் காலம் 
என்று எண்ணிக்கொண்டிருந்த  எனக்கு 
குடுகுடுப்பையின் குரல் இடி மின்னல் 
மழையின் முன்னோட்டமாகவே  தெரியுது 
அய்யா ! 
இனிமேல் மழைக் காலம் என்றால் அதை 
விட வேறு எந்த காலம் நல்ல காலம் ? !

- K .நடராஜன் 

**

நீரின்றி அமையாது உலகு என்ற
-----நிறையுண்மை அறிந்திருந்தோம் காத்தோம் இல்லை
வேரின்றி மரந்தன்னைக் காத்தல் போன்றாம்
-----வேண்டியநீர் இல்லாமல் வாழ்தல் இங்கே !
மாரியெனப் பெயும்நீரைத் தேக்கி டாமல்
-----மறுபடியும் கடலினிலே கலக்க விட்டால்
ஊரினிலே புல்பூண்டும் முளைத்தி டாது
-----உள்ளநிலம் பாலையாக மாறிப் போகும் !
ஏரிகுளம் அத்தனையும் பட்டா போட்டே
-----ஏப்பமிட்டார் தன்னலத்துக் கயவ ரெல்லாம்
ஊரிலுள்ள விளைநிலத்தை மனைக ளாக்கி
-----உணவுதரும் ஊற்றுதனை அடைத்து விட்டார் !
தேரினைப்போல் அசைந்துவந்த நதியின் நீரில்
-----தேவையற்ற கழிவுநீரைக் கலக்க விட்டார்
உரித்தத்தோல் ஆடுகளாய் மணலெ டுத்தே
-----ஊறிவந்த ஆறுகளை மலடு செய்தார் !
நல்லதொரு திட்டந்தான் வகுத்து நீரை
-----நாமின்று சேமிக்க வில்லை யென்றால்
நெல்லுமிங்கே விளையாது குடிப்ப தற்கு
-----நெய்குடத்து அளவுநீரும் கிடைத்தி டாது
பொல்லாத உலகப்போர் மீண்டும் வந்தே
-----பொருதழிவர் நீருக்காய் பகைமை யாகி
எல்லோரும் ஒன்றிணைவோம் மழையின் நீரை
-----ஏற்றவகை சேமிப்போம் வீணாக் காமல் !

மரம்வளர்ப்போம் மலைகளொடு குளங்கள் ஏரி
-----மலையருவி ஆற்றோடு நதிகள் காப்போம்
வரமான மழைநீரை வாய்க்கால் வெட்டி
-----வடிவமைத்த நீர்நிலையில் தேக்கி வைப்போம்
உரமாக நதிகளினை இணையச் செய்து
-----உபரிவறட்சிப் பகுதிகளைச் சமமாய் செய்வோம்
கரமிணைவோம் பெய்கின்ற மழையின் நீரைக்
-----காத்துலகை வளமுடனே திகழச் செய்வோம் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

ஈசன் அருளிய மழைத்துளியால்
ஈசல்கள் பறந்து  திரிய
தவளைகள் ராகம் பாட
தட்டான்கள் சுற்றிப் பறக்க
விதைத்தே மறந்து போன
விதை எல்லாம் விழித்தெழ
வீசும் காற்றும் குளிர்ந்திட
பசும் புற்கள் பளிச்சிட 
இனிமேல் மழைக்காலம் என
இயற்கை இப்படி இயம்பிட......
கார் மேகங்கள் பொழிந்திட
ஏரிகுளங்களைத் தூர் வாருவோம் !
தண்ணீரின்றி தவித்த மக்கள்
தாகம் தணிநதே மகிழ்நதிட
இனி யாவது உயிர்த்துளியாம்
இனிய மழைத் துளிகளை
சேமிப்போம் ! சேமிப்போம் !
வருங்கால சந்ததியை வாழவைப்போம் !

- ஜெயா வெங்கட், கோவை

**

தோட்டப்பாதையில் முட்களும் கற்களும்
கால்களுடன் போர் புரியும் –
இருந்தும் வெற்றிப்பூக்களைப்பறிக்க
கை நீளாமலில்லை---
ஜாதகங்கள் சாதகமாய் இல்லை-,
இருந்தும் சாதனைப்பார்வைகள்
மங்குவதில்லை –
தோல்விகள் தோய்ந்த வாழ்கை தான்,
இருந்தும் முயற்சிகளுக்கு
முட்டுக்கட்டை போடுவதில்லை –
“உருவமில்லாததை பிடித்துக்கொள் –உயர்வாய்”
என்றார் சிலர் –
உழைப்பிற்கும் உருவம் இல்லை என்றேன் –
ஆம் -- மழைத்துளிகள் விழுவதற்கு அஞ்சுவதில்லை
விழுவதற்கு அஞ்சாமல்
எழுந்து சாதிக்க நினைக்கும்
எனக்குள் என்றுமே மழைக்காலம் தான்

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**
                           
இனிமேல் மழைக் காலம்
இனிமேல் மழைக்காலம்
இனிதான நீர்க்காலம்!
நீர்வேண்டி நின்றதெல்லாம்
நிழலாகும் பொற்காலம்!

பாம்பு பறவைகளும்
பலவண்ண பூச்சிகளும்
உற்சாகச் சிறகடிக்கும்
உயர்வான மாரிக்காலம்!

பூமியெங்கும் பசுமையாய்
புனலுடனே இனிமையாய்
எல்லோரும் மனங்குளிர
இயல்பான மழைபொழியும்!

செப்பனிட்ட குளங்களில்
சீராக நீர்பெருகி
உழைத்தோரின் உள்ளங்களில்
உற்சாகம் ஏற்படுத்தும்!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**


இனிமேல் மழைக்காலம் வந்தால் நாம்
இனிதே மழைநீரை சேமித்து வைப்போம்!

வானிலிருந்து வழிந்திடும் அமுதம் மழை
வரவேற்போம் வந்ததும் வீணாகாது சேமிப்போம்!

பணத்தை சேமித்து வைப்பது போலவே
பயன்தரும் மழையை சேமித்து வைப்போம்!

கடலில் கலக்க விடாமல் தடுத்திடுவோம்
குளம் ஏரியாவையும் தூர் வாரிடுவோம்!

வரும்போது ஊர் வழியே சென்று விட்டு
அறுக்கும்போது அரிவாளோடு வருவதை நிறுத்து 

மழை பொழியும் போது சேமித்திடுவோம்!
மழைநீர் உயிர்நீர் என்பதை உணர்ந்திடுவோம்!

மழைக்காலத்தில் குடை பிடிப்பதை விடுத்து
மழையில் நனைந்து மகிழ்ந்திடுவோம் எல்லோரும்!

மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்பது 
மூட நம்பிக்கை நனைந்து மகிழ்ந்து வாழ்ந்திடுவோம்!

- கவிஞர் இரா .இரவி

**

சுட்டது ஞாயிறு வட்டமாய் வானிலே - உடன் 
சட்டெனப் பூமியே காய்ந்துதான் போகுதே - கடன் 
பட்டவன் போல்மனம் நொந்ததும் போதுமே - பாட்டு
மெட்டெனப் பட்டென மேகங்கள் வந்ததே - முல்லை 
மொட்டென நீர்த்துளி மாரியாய் மாறியே - குளம்
குட்டைகள் ஏரிகள் ஆறெல்லாம் தங்கியே - துயர்
விட்டன இன்றுடன் என்றென்றும் இன்பமே - இங்கே
தட்டுது  கொட்டுது இனிமேல் மழைக்காலமே காண்!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

இனிமேல் மழைக்காலம் தான்!
ஒவ்வொரு ஆண்டும் 
புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகைக்காக
காத்துக் கிடக்கிறோம்.
வானம் பார்த்து, வானம் பார்த்து
வயல் பார்த்து, வயல் பார்த்து!

இனிமேல் மழைக்காலம் தான்!
இந்த முறையாவது பட்ட கடன்
தீர்த்திட, வயிறாரப் பசியாற,
வயலெங்கும் வளம் காண
வந்திடுவாய் வான் மழையே!

இனிமேல் மழைக்காலம் தான்!
பொய்த்தது போதும் பல ஆண்டு
வாய்த்திடுவாயா? வரும் ஆண்டாவது?
வறண்ட வயல்களில் ஈரம் கசிய,
திரண்ட மேகங்கள் தரை தொட்டிட
வருந்தி அழைக்கிறோம் வந்திடு மாரியே!

இனிமேல் மழைக்காலம் தான்!
நிலத்தடி நீரோ பாதாளம் போனது
குளத்தங்கரையோ புழக்கடையானது
பசுமை மரங்கள் பட்டே போனது
காத்திட தாயே மனமிரங்கிடு!

- மகாலிங்கம் இரெத்தினவேலு, அவனியாபுரம், மதுரை

**

மழை நேரத்தில் (சென்னை  பெருவெள்ளம்)
சிலை போல் 
இருந்துவிட்டு,
வெயில் காலத்தில் இலை தெளிக்கக்கூட
சொட்டுநீர் இல்லாமல் தவிக்கும் தமிழினமே

இயற்கை இலவசமாய் கொடுக்கும் கொடையை 
வீணடித்துவிட்டு,
செயற்கை மழையை வரவைக்கிறேனென்று,
சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது மூடர் கூடம்

செவித்திறனற்றவர் காதில் 
ஊதிய சங்கு கூட,
ஒரு நாள் அவருக்கு கேட்கக்கூடும்;
மூடர்கூடம் திருந்துவது எப்போது???

- ம.சபரிநாத்,சேலம்

**

முக்காலத்து ள்ளொரு காலம் 
அக்கால மினி யெக்காள மிடும் 
விழாவா மழைத்துளி வந்து விழவா 
உழவா விரைந்து எழுந்து உழவா

நேற்று அழுதோம் இன்று சிரிப்போம் 
"இனிமேல் மழைகாலம்" நீயோ களம் 
செதுக்கினாய் தானியம் குவிக்க ஒரு 
குளம் வெட்டினாயா நீரை சேமிக்க 

இன்று சிரிப்போம் நாளை அழவோ 
குறைக்கூறாமல் உதவக்கோறாமல்  
நீருக்கு குறைவில்லையென காமிக்க 
இம்முறை நீரை சேமித்து காட்டுவோம் 

தாயில்லாது அநாதையாய் வாழலாம் 
வாயில்லாது ஊமையாய் வாழலாமொரு
நோயில்லாது நாம் வாழும் போதிலும்  
மழை நீரில்லாது வாழ்திட லாகுமோ
            
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com