சித்திரம் பேசுதடி!
எண்ணத்தில் இயற்கையெழில் வடிவானதால்
வண்ணத்தின் வழியாய் வரைந்ததால்
வண்ணம்கொள் பேரழகு மனம்நிறையும்
எழில்காட்சியாய் வடிக்கப் பெற்றதால்
பண்ணும் பல கோலங்கொள் காட்சிகளாய்ப்
பரவசம்தரும் பார்ப்போர் உள்ளத்தில்
மண்ணும் விண்ணும் உள்ளவரை சாட்சிகளாய்ப்
பறைசாற்றும் காட்சிகளாய் உலகத்தில்!
மரங்கள் மற்றுள்ள உயிர்கள் அழிக்கப்பெற்றால்
மறுபடி தோற்றுவிக்கத் தூண்டுமடி!
தரணியில் தருக்கள் தழைக்க வைக்குமென்பதால்
தூரிகை வழி பேசும் சித்திரமானதடி!
எழில்கொண்டு எழிலை வெளியிடும் சித்திரங்கள்
பூவுலகில் அழியா மாயமானதடி!
பொழில்கொள் பூவுலகு தோன்ற மறைபொருளாய்
மண்ணில் பேசி நில் தாய்கள் அவையடி!
- மீனா தேவராஜன், சிங்கை
**
இரண்டுநாளில் வருவேன் எனச்சொல்லிப் போனாயே?
உன் அகராதியில்
இரண்டு நாள் என்பது இரு மாதங்களா?
வழி மீது விழி வைத்திருந்தவன்
இப்பொழுதெல்லாம் என் விழி அம்புகளை
உன் சித்திரத்தின் மீதுதான் செலுத்துகிறேன்
அம்புகளின் இனிமையானக் காயம்பட்டு
அவை இப்போது பேசுகின்றன.
அப்பேச்சு என் காதுகளில்
தேனாறாகப் பாய்கிறதடி.
நான் உறங்கப் பாடச்சொன்னால்
பாடியும் கதை சொல்லச்சொன்னால்
சொல்லியும் பேசும் அந்தச் சித்திரம் உன்னைவிட மேல்;
ஆமாம்; நீ சீக்கிரம் வராவிட்டாலும்
இங்கு சித்திரம் பேசுதடி
- வளவ. துரையன்
**
காண்பவை எல்லாம் மட்டுமல்ல ...
காண விழையும் கனவுகள்
சித்திரங்கள்தான்
அச் சித்திரங்கள் சிதற வைக்கும்
எண்ண குவியல்கள் .
எழுத முடியா கனவு தோரணங்கள்
கற்பனை ஆபரணங்கள் ;
அழகே என்பதா ஆசை என்பதா ?
வயது என்பதா? வாலிபம் என்பதா?
வசந்தம் என்பதா ? நானறியேன்
நெஞ்சுக்குள் பொன் சித்திரமாய்
நிற்பவளை நிலைத்தவளை
இனி காண்பேனோ
கண்ணுக்குள் கண்ணாக
நெஞ்சுக்குள் பொன்னாக !
- ச. பிரசன்னா
**
ஆயக் கலை 64- அதில்
சித்திரம் வரைவது
தனிக்கலை - ஒரு
வரலாறினையே சித்திரம் தீட்டும்
திறமை பெற்றவன் பாக்கியசாலி!
கண்கள் பேசும் சித்திரம்
நாட்டிய கலை சொல்லும் சித்திரம்
வாட்டிய வறுமையினை
சித்தரிக்கும் சித்திரம்
இப்படி.................................
உள்ளத்தில் உள்ள உணர்வுகளை
தெள்ளத்தெளிவாக உளி கொண்டு
மெல்ல மெல்ல செதுக்கும்
அற்புதக் காலை சித்திரம்!
இச்சித்திரங்கள் பேசுவது
கலைஞனின் கைவண்ணம்!
- உஷாமுத்துராமன், திருநகர்
**
ஒவியம் அதுவே சித்திரம்...
காவியங்களை உணர்த்தும்
இக்கலை சிறக்க
தேவை அசுர பயிற்சி!
பயிற்சி பெற்ற மானுடனின்
அயற்சியற்ற உன்னத
முயற்சிதான் அழகிய சித்திரம்!
தாய் சேய் அணைத்த சித்திரம்.....
தாடிக்கு பின்னே சோகம் பேசும்சித்திரம்
மாடியில் இருந்து கடைக்கண் பார்வையால்
தேடிய காதலனை பார்க்கும் சித்திரம்....
என.............ஒவ்வொரு சித்திரமும்
தினம் ஒரு கதை பேசும் சித்திரங்கள்!
சித்திரத்தினை ரசிக்கத் தெரிந்தால்
அதுவே ஒரு உன்னத திறமை!
ரசிகன் உணரும் சித்திரங்களை
வசியத்துடன் பேச வைக்கும்
ஓர் ஓவியனே.......
அவன்தான் "சித்திரம் பேசும்"
ஓவியங்களின் அரசன்!
- பிரகதா நவநீதன். மதுரை
**
சித்திரம் பேசுதடி தீட்டிய நானில்லை
போனேனங்கே மோசமடி
இப்படித்தான் இருக்கிறது நம் தேசமடி
போடுவது எல்லாம் வேஷமடி
எனக்கு தேசத்தின் மேலே நேசமடி அது
இல்லாவிடில் பிடிக்கும் தோஷமடி
உயிர் கொண்ட சித்திரமே ஓடிவந்து
என் தோஷம் கழிப்பாயோ
சந்தோஷமதை கொடுடாயோ பாசமதை
வேஷமின்றி பொழியாயோ
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்
**
மனத்திரையில் நெளிந்தோடிய எண்ணங்கள்
வர்ணத்துடன் ஒப்பனையிட்ட கற்பனையாய் !
விரல் வேந்தன் தழுவலில் மெய்மறந்து
காதல் பூரிப்புடன் தூரிகை மங்கை
வளைந்தாடி வண்ணந்தீட்ட
சித்திரமோ கற்பனையின் பரிசமாய் !
தூரிகையின் ஒவ்வொரு தீண்டலிலும்
உயிரோவியமாய் சித்திரம் உருவெடுக்க
வலுயேறிய சித்திரம் கண்சிமிட்டலுடன்
பார்வையாளர் விழிகளுடன் பகிர்ந்ததே
எண்ணிய மணம் வீசும் மனோரஞ்சிதமாய் !
விண்முகிலோடு காதல்கொள்ளும் வெண்ணிலவாய்
கற்பனை மேல் ஓவியன் காதல் கொள்ள
காதல் பரிசாம் சித்திரம் பேசுதடி
சிந்தை மயக்கும் மௌனமொழியில் !!
- தனலட்சுமி பரமசிவம்
**
வெயிலெடுத்து வெண்ணிலவின் ஒளியெ டுத்து
வெண்முத்துத் தந்தமெடுத் தவைக்கு ழைத்தே
மயில்தோகை தூரிகையால் தீட்டி வைத்து
மாமனும்என் மாமியுந்தாம் இடைவி டாமல்
ஆயுளெல்லாம் அல்லுபகல் ஒற்றை யாக
அழகாக வடித்தெடுத்த சித்தி ரந்தான்
உயிரான என்னவளாம் பேசப் பேச
உயிருருக மெய்மறந்தே வியந்து நின்றேன்!
முன்னழகை முடியுமட்டும் கூட்டிக் காட்ட
மலையிரண்டை செங்குத்தாய் நிற்க வைத்தர்;
பின்னழகைப் பெரிதுவக்கப் பின்ன லாட
பின்புறத்தை முடியுமட்டும் கூட்டி வைத்தர்;
பொன்னுருக்கி உடலாக உருக்கி வைத்தர்;
என்னவளின் சித்திரமும் உயிரும் பெற்று
என்னிதயம் துடித்திடவே இடைவி டாமல்,
என்னென்ன பேசுதடி திகைத்து நின்றேன்!
- "கவிக்கடல்" கவிதைக் கோமான், பெங்களூரு
**
வண்ணமயில் வாகனத்தில்,
ஆறுமுகன் ஏறி வரும் அழகை;
வட்டமுக தோற்றத்தில்,
பகலவன் சுழன்று வரும் அழகை;
உள் மன ஓட்டத்தை,
வண்ணத்தின் பொருள் பட தரும் அழகை;
பிள்ளை அதன் கையால்,
கிறுக்கிடும் அழகை;
உலகில் காணும் அத்தனையிலும்,
இருக்கும் அழகை;
நயமாய் காட்டிடும் சித்திரம்,
பல காலம் பேசிடும்!
வரலாற்றை அது சொல்லிடும்
- ம.சபரிநாத், சேலம்
**
அன்னை பாரதம் வாழ்க ! வளர்க !
என்னுடன் நின்தன் சித்திரம் பேசுதடி !
எத்துணை இளமை ? எத்துணை அழகு ?
எத்துணை சிறப்பு ? எத்துணை உயர்வு ?
ஆதிகவி வால்மீகியின் புனிதநூலும்
வேதம் வகுத்த வியாசர் பெரும் நூலும்
மறைமொழியாம் வள்ளுவர் குறளும்
தமிழ் , சங்கதத்தின் ஐம்பெருங் காப்பியமும்
நீர் மேலாண்மையும் சுழலும் ஏரும் , கணிதம்
மருத்துவம் , வானியல் , புவியியல், கோயில்
கட்டுமானம் , மற்றும் தொழில்நுட்ப த்திலும்
சிறந்த மனுக்குலம் அனைத்துமுன் மக்களே !
பட்டுடைத் தாயே ! நின் பெரும் புகழை
எட்டுத் திக்கும் கொட்டும் , முரசு , பேரிகை
காட்டும் காதலும் , வீரமும் என்றென்றும்
ஈட்டும் உயர் நலம் , இது திண்ணம் , திண்ணமே !
- திருமதி ராணி பாலகிருஷ்ணன்.
**
சித்திரம் பேசுதடி ! புதுச்
சித்திரம் பேசுதடி!
அன்னை மடிதனிலே
கன்னக் கதுப்பு மின்ன
முழுமதி முகத்தில் தெரியவே
முத்துக்களாய் பற்கள் விரிய
கரு வண்டெனவே
இரு விழியசைய
காற்றின் ஸ்பரிசத்திலே
நெற்றி முடி ஒதுங்க
குழை இரண்டும் ஆடவே
அழகு மழலை சிரிக்க
சித்தம் மயங்கவே
சித்திரம் பேசுதடி ! பொற்
சித்திரம் பேசுதடி !...
- கே.ருக்மணி
**
வட்டக்கரு விழிகள் சோலை வண்டென வந்ததென்ன
குளிர்ந்ததோர் அன்பான பார்வை காதலை வீசுவதேன்
சற்று மேலிருக்கும் புருவம் வில்லையும் வீழ்த்திடுமோ
வெட்டித் தெறித்தமதி நிந்தன் நுதழிடம் நாணுவதேன்
பிண்ணிய கார்குழலும் கரும் புனலெனப் பாய்வதென்ன
தேன்சிந்திடும் அதரங்களும் மெல்லக் குறுநகை செய்வதென்ன
சங்கென நின்றவுந்தன் கழுத்தெனைக் கவர்ந்திங்கு நிற்பதென்ன
இன்னுமென்னென்ன சிந்தனைகள் வந்துயெனைப் பாடாய்ப் படுத்திடுமோ
உந்தன் சித்திரம் பேசுதடி என்னுள்ளம் ஊஞ்சலாய் யாடுதடி!
- கு. இரா, வடக்கு அயர்லாந்து.
**
இறைவன், ஆண் பெண்
இருவர் உணர்வுகளை
இணைத்துப் படைத்தான்
பேசும் மனிதர்களாக...!
மனிதனோ வண்ணங்கள்
எண்ணங்களில் கலந்து
கற்பனை கலந்து படைத்தான்
பேசும் சித்திரங்களாக...!
பேசாத புத்தபகவான் சித்திரம்
ஆசையே துன்பத்துக்கு காரணம்
ஓசையில்லாமல் பேசும்
நம்மிடம் மௌனமாக...!
- பொன்விலங்கு பூ. சுப்ரமணியன், வன்னியம்பட்டி
**
வெக்கையில்
பாறை வழியும் வெண்ணையென
சொல்ல நாவற்று
நீட்டி
கைத் தட்டி
அழைத்துச் சுட்ட முடியா
ஒற்றைக் கையுடையான் போல
தன் காதல் பெருவெளியை
விளித்துரைக்கா மவுனத்துடன்
மனவிரிப்பில்
வரைந்த பேரழகுச் சித்திரத்தை
மனக் கண்ணால் பார்த்து ரசித்து
பேசும் சித்திரத்துடன்
பேசிக் கொண்டிருப்பது
காதல் தெரியா குருடர்களுக்கு
தெரியும் கொல்லோ...!?
- கவிஞர்.கா.அமீர்ஜான்
**
தளிர்க்கரம் கொண்டே
தூரிகை எடுத்து பல
வண்ணம் குழைத்து சித்திரம்
வரையத் தொடங்கிய மகள்
ஆகாயத்திற்கும்
ஆழ்கடலுக்கும்
கருநீல நிறத்தை
கவனமுடன் நிரப்பினாள் !
மேகங்களிலிருந்து
மழைத்துளிகளை
தூரிகையால் தூவினாள்!
வானவில்லை வளைத்து
வண்ணமயமாக்கினாள்.!
ஆங்காங்கே தீட்டியிருந்த
மரங்களுக்கு பச்சைநிறத்தை
மகிழ்ச்சியுடன் தெளித்தாள்!
இயற்கையைத் தன்
வசப்படுத்திய களிப்பில்
எழிலான சித்திரத்தை
ஏந்தி நின்றாள் சித்திரமாக !
.
- ஜெயா வெங்கட், கோவை 45.
**
வானவில் தூரிகை வரைந்த சித்திரம்
மின்னலாய்ப் பேசுதடி; கண்ணைப் பறிக்குதடி;
நீல வண்ண வானத் தரையில்
நீளமாய் வெண்முகில் கார்முகில் பலவாய்
வேண்டிய சித்திரம் பேசும்படி வரைந்ததெரு
ஆண்ஓ வியனும் யாரோ? ஒற்றை
வெண்ணி லவுப்பூ பூக்க வைத்த
கண்ணானச் சித்திரம் வரைந்த(து) யாரோ?
இவைபோல் என்றன் மனத்தில் என்னவளை
துவண்டு துடிக்கும் அழகு சித்திரமாய்
நானும் அறியா வண்ணம் தீட்டியே
ஊனும் உருகிட வைத்த(து) எவரோ?
இந்தச் சித்திரம் இதயத்தில் பேசிடும்
அந்தக் காலம் வரையில் வாழ்வேன்;
என்னை மாய்க்க என்னவள் சித்திரம்
என்னுள் திருடாமல் பேசிட வைப்பீர்!
- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு