கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 2

எக்காலத்திலும்  நினைவில்  நிற்கும் அக்கால   நாகரிகம்  பண்பாடு  இவைதான் 
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் வாசகர் கவிதை பகுதி 2


எக்காலத்திலும்  நினைவில்  நிற்கும் 
அக்கால   நாகரிகம்  பண்பாடு  இவைதான் 
கண்டெடுப்பின்   காலக்குறிப்புகளோ?
கல்வெட்டில்  கிடைத்த  குறிப்பும் 
சொல் ஏட்டில்  கிடைத்த   குறிப்பும் 
சொல்லும்  அரிய செய்திதான்  நாம் 
தேடும்  "காலக்குறிப்புகள்"
படிக்க  தெரிந்த  மனிதனுக்கு
தெரிந்த  செய்தியினை  ஏட்டினில்
பதிய  செய்யும்  ஞானம்  இருந்ததால்
சதி செய்யக்கூடாது  என்ற 
நல்லெண்ணத்தில்  எழுந்ததே 
காலக்குறிப்புகள்  

- பிரகதா நவநீதன்.  மதுரை

**

வாழ்ந்த வீழ்ந்த யெழுந்த கதையின் 
கல்வெட்டுகள் ஒவ்வொன்று மவர் வரலாறு துதிபாடு தின்றைய வரறிய

பொற்காசுகள் புழங்கிய காலம் பொற்கால மதுவோ நற்கால மன்றோ 
செம்பு பித்தளை அலுமினியம் இரும்பு 
காசுகள் புழங்குங் காலமே யிக்காலம் 

பொன்னை கொடுத்து அன்ன முண்ட மன்னர் புகழ் விண்ணைத் தொட்ட கால மது யின்றோப் பெண்ணை மணக்க பொன் னைத்தர மண்ணைக் கவ்வுதே 

இக்கால குறிப்புகளை அபாரமென ஏளனமாய்ச் சித்தரித்து த்திரிக்கும்
வருங்கால வரலாற்றில் குறிக்கும் 
உலகோர்க் காணக் கண் மறைக்கும் 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி, கண்டம்பாக்கத்தான் 

**

சித்திரச் சிலைகள் அற்புதக் கலைகள் 
வித்தகர் வடித்த நல்முத்திரைப் படங்கள்  
எத்தனை இன்பங்கள் நெஞ்சினிலே துயர் 
அத்தனை யுமோடுதே பஞ்செனவே

ஓலைச் சுவடியும் செப்போடு பட்டயமே  
பழங்காசுகள்; மணியான பானையோடு முதுத்தாழிகளே 
நல்லநாக ரீகமும் சொன்னதே யத்தைனையும் 
கொண்டாடியே போற்றுவோம் யெப்பொழுதும்.

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

கண்டெடுப்புகள் வழங்கும் காலத்தின் உயர்வினையே
எல்லா   நாட்டினரும்    ஏகமாய்ப்    போற்றியிங்கு
தம்நாடே அந்நாளில் தாரணியில் உயர்ந்ததென்று 
தற்பெருமை அடித்திடுவர்!தற்போதையநிலை மறந்திடுவர்!

அந்நாளில் சிறப்புடனே அகிலத்தில் வாழ்ந்ததனால்
உள்ளுக்குள் மகிழ்ந்திடலாம்!உயர்வை நினைந்திடலாம்!
இந்நாள் வாழ்க்கையிலே இழந்தவைகள் பலவற்றை
அந்தநாட்களிலே அடைந்திருந்ததில் சிறு மகிழ்ச்சி!

அதனைவிட உயர்வுடனே ஆனந்த வாழ்க்கையினை
ஏற்படுத்தி வாழ்ந்திடலே எப்போதும் மகிழ்வுதரும்!
முன்னோர்கள் வாழ்ந்தார்களென்று முழங்கிடுதலால் பயனில்லை
நிகழ்கால நிம்மதியே நீளுலகின் பிரதானம்!

-ரெ.ஆத்மநாதன்,காட்டிகன்,சுவிட்சர்லாந்து

**

கடலில் மட்டும் முத்துக்கள் இல்லை 
இந்த மண்ணின் அடியிலும் புதைந்து 
கிடக்குது நம் முன்னோர் வடிவமைத்த 
நகரமும் கோயிலும் அழகு சிற்பங்களுடன் 
காலத்தால் அழியாத அடையாள சின்னமாய் !
கணிணி யுகத்தில் வாழும் நாம்  முறையாக 
பதிவு செய்ய வேண்டும் நம் நாட்டின்  
அருமை பெருமையை ஒரு பொக்கிஷமாக !
விட்டு செல்ல வேண்டும் நம் பெயர் சொல்லும் 
பாத சுவடுகளை இனி வரும் தலை முறை 
பின் தொடர்ந்து நடக்க !
இனம் மதம் மொழி தாண்டி நாம் இன்று 
பதிக்கும் பாத சுவடு கல்லில் வடித்த சிற்பமாய் 
அடையாளம் காட்டும் நம் புனித மண்ணை 
ஒரு புதிய பூமியாக என்றென்றும் !

- K. நடராஜன் 

**
காலக் கடிகார
பக்கங்களில் எனது
365 நாட்களும்
நிரம்பி வெகு
நாட்களாகின்றன!
புது வருடத் தேடலில்
எனது மூதாதையர்கள்
 வாழும் தூசிகளின் இடையே
நானும் இடைத்தட்டுகளில்
செருகப்பட்டேன்!
கறையான்களின் ஸ்பரிசத்தால்
எனது உடம்பில்
படிந்த எழுத்துகள் 
இறந்து போக
கண்டெடுத்தவனின்
ஆராய்ச்சி காலக் குறிப்புகள்
மறைந்தனவே!
மரங்களின் உபயத்தால்
பிறந்தவன் என்றாலும்
புவி நன்மை கருதி
தமிழ்கணினி யுகப்பொழுதினில்
தமிழ் நூல்கள் அனைத்தும்
மின்நூலாய் மலர்வது எப்போது?
என்ற ஆவலில் நான்!

- பொன்.இராம்

**

ஏமாந்து போகாதீர்கள்..
80-களின்என்காலக்குறிப்புகளைப்
 படித்து விட்டு...!
என் மேல் ஊறிய உங்கள் பார்வைகள்,
பல நேரங்களில் ,
சூர்ப்பனையை போல 
என் மார்புகளை அறுத்துக் கொண்டு
உலகத்தின் ஊனப் பார்வையிலிருந்து
தப்பிக்க வேணுமாய்
என் காலக்குறிப்புகளில் 
நீங்கள் ஒருவேளை
படித்திருக்கலாம்.
இன்றைய குறிப்புகளைப் படித்தால்
வியந்து போவீர்கள்.
மேலூறும் பார்வையாளனின்
கண்களை குறி பார்த்து
குறியுடன்
பேர்த்து விடுவேன்..
ஏனென்றால் 
நான் ஒரு மகளுக்குத் தாய்
இன்று.

- கீதா சங்கர்

**
நேற்றைய நிகழ்வும்
இன்றைய செய்தியும்
நாளைய வரலாறு என்பதால்
மண்ணில் வாழ் மனிதரின்
பண்டைய வரலாறு பற்றிய
கண்டெடுப்பின் 
காலக்குறிப்புகளே
மாறி வரும் உலகில்
மாறா நிலையாக
மனதில் பதிந்திடும்
சிங்காரச் சிற்பங்கள்..
சிலிர்ப்பூட்டும் சித்திரங்கள்..
கலாச்சாரத்தை காட்டும்
கலைநயமிக்க கல்வெட்டுகள்..
சிந்தையை நிறைத்து
சிந்திக்கவும்  வைத்திடும்
அன்றோ ?

- ஜெயா வெங்கட்

**

அக வாழ்வில் காதல்
புற வாழ்வில் வீரமென
ஆயிரமாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு
மன்னரும் மக்களும்
மனுநீதி காத்தனர் !
திரை கடல் ஓடி
திரவியம் தேடி
மறை புகழ் காத்து
மதி நலம் வளர்த்து
இயற்கையை வணங்கி
இன்புற்று வாழ்ந்தனர் !
கலையை கலாச்சாரத்தை கல்வெட்டுகளில் பதித்த
பண்டையத் தமிழரின்
அழகிய வாழ்க்கை பற்றிய
கண்டெடுப்பின்
காலக்குறிப்புகள் யாவும்
வரலாறு கூறும் ஆச்சரியம்!
வாசிக்க ரசிக்க ஆனந்தம் !

- கே.ருக்மணி 

**

கல்வெட்டுக்களைப் படிப்பதற்கு பயிற்சிவேண்டும்-சும்மா
கண்டவர்கள் படித்துவிட முடியாது தலையும் வாலும் புரியாது
கல்வெட்டுக்கொண்டே நாம்கண்டு கொண்டோம் வரலாற்றை
ஆட்சி முறை, அதன் மாட்சிகளை அவர்தம் வீழ்ச்சிகளை
ஆயிரம் ஆண்டு இராஜ ராஜனுக்கு ஆகிறது என்றும் அறிந்தோம்
மாட்சியாய் ஆட்சியில் இருந்தான் கொடைகள் கொடுத்துள்ளான்
கோவில்கள் கட்டியுள்ளான், கோபுரம் எழுப்பியுள்ளான் எழுசியாய்
வரலாறாய் கையில் கொணர்ந்து கொடுத்து விட்டார் இன்று
அத்தனையும் எதன் மூலம் கல்வெட்டின் மூலம் அறிந்தோம் நாம்
சிலசமயம் சிலைவடிவிலும்,சித்திர வடிவிலும் பிறமொழி வடிவிலும்
கல்வெட்டுக்களை இன்று ஆங்கிலமாய் மாற்றுகிறார் தஞ்சையில்
காரணம் தெரியவில்லை பொறுத்துப் பார்ப்போம்!
காலத்தில் குறிப்புகள் கல்வெட்டுக்கள் சரியான தலைப்பு !

- கவிஞர்  அரங்ககோவிந்தராசன்,948812296, இராஜபாளயம்

**

உலகமே தமிழருக்கு உறவல்லவா  -இதை
உறக்க சொல்வது கண்டெடுப்பின் காலக்குறிப்பல்லவா!

பானை ஓட்டுக்குறிப்பும் வரலாறு பேசுமல்லவா!
நட்ட நடுகல்லும் வீரத்தைக் காட்டுமல்லவா!

கண்டெடுத்த காலக்குறிப்பில் சேவல்சண்டையும் ஏறுதழுவலும்
வீரத்தை வளர்க்க உதவிய உத்தியல்லவா!

கிடைத்த நாணயங்கள்யாவும் வாணிபத்தின் சிறப்பல்லவா!
கல்வெட்டும் அரிச்சுவடியும் கண்டெடுத்த வைரங்களல்லவா!

மொழியோடு பல்கலையும் வளர்த்த நாடல்லவா!
தொல்காப்பியமே இதை புரியவைக்கும் ஏடல்லவா!

மன்னர்களைப் புகழ்வது மட்டுமல்லாது - அவர்களிட்ட
மிகுவரியையும் எடுத்துரைத்து மாற்றிய தமிழல்லவா!

பூஜ்ஜியங்கள் ராஜ்ஜியமானதும்! ராஜ்ஜியங்கள் பூஜ்ஜியமானதும்!
காலக்குறிப்பின் கண்டெடுப்பில் கண்டறிந்த கூற்றல்லவா!

காலக்குறிப்புகள் தமிழரின் இன்ப ஊற்றல்லவா!
அதனைப் பாதுகாத்தலும் நமது பொறுப்பல்லவா!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

சிந்து வெளியிலிருந்து - குமரிக்கண்டம் வரை இருந்த வரி வடிவங்களுக்கு சொந்தக்காரர்கள் நாம்,
தேம்பாவணியும் - தேவாரமும் திகட்டாத திருவாசகமும்
தளையத் தளையக் கட்டினோம் - தமிழன்னைக்கு
கட்டியம் கூறும் - காலச்சுவட்டினை
ய வனத்திலும், ரோமாபுரியிலும் - எகிப்திலும்
இன்றும் காண்பர்,
ஆங்கிலம் எனும் மொழி அகிலத்திற்கு வருவதற்கு ஆராயிரம் ஆண்டுகள் முன்பே - சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள்,
சிங்க புரியும் -தாய்லாந்தும் நாம் சூட்டிய பெயர்கள்,
இன்றோ - ஆங்கிலப் பள்ளி
அனுமதிக்காக - அலை மோதுகின்ற கூட்டமாய்,
இத்தாலி உணவின் மோகத்தில் - இட்லியை மறந்தோம்,
நோய்களின் கூடாரத்தில் - தத்தளிக்கும்-தமிழர் கூட்டம்,
என்று தணியும் இந்த - அயலக மோகம்.

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
(நேரிசை ஆசிரிய விருத்தம்) 

உலகில்  தோன்றிய   முதலாம்  மாந்தன்
நிலத்தில்  மூத்த  இனத்தவன்  தமிழன்;
முதலில்  தோன்றிய  முதன்மொழி  தமிழே;
மதமோ சாதியோ இன்றி நிலத்தைப்
பதமாய்  ஐந்திணை யாகப் பகுத்து, 
வையந்  தோறும்  ஆண்டவன் தமிழன்;
வையந் தோறும் உள்ள மொழிகள்
தமிழின் வேர்ச்சொல் கொண்டே அறிந்தான்; 
அமிழ்த  தமிழ்ப்போல் வாழ்வியல், கலையியல்
கட்டட  இயல்கள், ஓவிய, வானை
முட்டி உயர்ந்த வானியல்,  அறிவியல், 
மருத்துவ  மாண்பியல்  போன்ற  ஆயிரம்
அருமை இயல்கள், இலக்கிய இலக்கண
இயல்கள்  இயல்பாய்  அமைந்த  இனம்மொழி
செயற்கை  அற்ற  செந்தமிழ்(ழர்)   என்றே
எழுதிப்  பேசி  என்னப்  பயனோ? 
வழுவா  நிலையில்  கடலினை ஆய்ந்தும்
மண்ணுள் உள்ள சான்றினை  ஆய்ந்தும் 
கண்டெ  டுப்பின் காலக் 
குறிப்புகளால்  வையம் வியக்கவைப் போமே! 

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு

**
வாழும் காலத்தே
  வாழ்ந்த நினைவுகளை
வரலாற்று சுவடாக்கி
  வருங்கால தலைமுறைக்கு
நற்பயனாக்கிய நம்முன்னோர்
   தலைசிறந்த செயலுக்கு
தலைவணங்கு!! பெருமிதங்கொண்டே!!
  மண்ணுள் புதைந்த
மகத்தான காலக்குறிப்புகளை
மறைந்திடா வண்ணம்
மறந்திடா வண்ணம்
   காத்திடுக தமிழ்மறையை
போற்றி புகழ்ந்திடுக!!!
   இருப்பதை செம்மைபடுத்தி
சீர்பெற்றிட வாழ்ந்திடுக!!
   இன்றிருப்பதை அழியாது
காத்திடுக.... என்றும்
  கண்டெடுப்பின் காலக்குறிப்புகள்....

- கவி தேவிகா, தென்காசி

**

கண்டங்கள் பலவற்றைக் காண வில்லை
……………கசப்பான உண்மையது கடந்த காலம்..!
மண்ணுள்ளே கிடைத்ததெலாம் மனிதன் வாழ்ந்த
……………மகத்தான வாழ்க்கைதனை மேலும் சொல்லும்.!
கண்டவற்றை ஆராயும் கலைவிஞ் ஞானம்
……………காலமுள்ள வரையிலது கதைபோல் சொல்லும்.!
கண்டெடுப்பின் மூலமாகக் காலக்கு றிப்பும்
……………கலாச்சார மேன்மையையே கண்டு ணர்த்தும்.!

.

சிற்பங்கள் பலவற்றில் சிங்கம் யாளி
……………சிலவற்றை உயிராகச் செதுக்கி வைத்தார.!
எற்றைக்கும் எப்போதும் எழிலாய்க் கொஞ்சி
……………எடுத்துரைக்கும் சிலைகள்தான் இறைவ னன்பு.!
கற்களெலாம் பேசுகின்ற கலையு ணர்வை
……………கண்டெடுத்த சிற்பங்கள் கனிவாய்ச் சொல்லும்.!
கற்காலச் சுவடுகளே காவி யம்போல்
……………கல்வெட்டுக் குறிப்புகளாய் காலம் வெல்லும்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

குகைகளிலே   வரைந்துவைத்த   ஓவி   யங்கள்
    குறித்துவைத்த   பனையோலைக்   குறிப்பு   ரைகள்
பகைவென்ற   மன்னர்கள்   புகழைச்   சொல்லும்
    பதித்துவைத்த   பாறைகளின்   கல்வெட்   டுக்கள்
வகைவகையாய்ச்   செய்திட்ட    கொடைகள்    தம்மை
    வடித்துவைத்த   செப்பேட்டு   வாச   கங்கள்
திகைக்கவைக்கும்   தமிழர்தம்   பெருமை   தன்னைத்
    திசையெங்கும்   அறியவைக்கும்   ஆவ   ணங்கள் !

அரப்பாவின்    அகழாய்வில்   கண்டெ   டுத்த
    அரிதான   பொருட்களோடு    தமிழ   நாட்டின்
தரங்கம்பாடி     கீழடியில்   அகழ்ந்தெ   டுத்த
    தரமான   பொருள்களெல்லாம்    உலகின்   மூத்த
வரலாற்றைக்    கொண்டயினம்   தமிழி   னந்தான்
    வாய்த்திட்ட   தமிழ்மொழிதாம்   முதன்மை   என்றே
குரலெடுத்துக்   கூவுகின்ற   அடையா    ளங்கள்
    குவலயமே   வியக்கின்ற   பெருமி   தங்கள் !

- பாவலர்  கருமலைத்தமிழாழன்

**
ஒரு குழந்தையோடு
ஒரு தாயும் பிறக்கிறாள்...

குழந்தைத் தனங்களுக்கு
நகரும் ஒவ்வொரு கணத்திலும்
மகுடத்தைக் காட்டிலும் தாங்க நேர்கிறது
முள்கிரீடம்

அப்படியான நிர்பந்தத்திலும் சந்தோஷிக்கிறாள் பெண் ராஜாவாகிய
தாய்...

விலாக்கள் நொறுங்கியதில்
கணக்கெடுக்காமல்
வளைந்த வயதையும் ஏணியாக்கியதை
குறித்துக் வைத்துக் கொள்வதில்லை  வாழ்க்கையில் தாய்...

கணக்கெடுக்க வரிசைப்படும்
காலவிரிப்பின் குறிப்புகளைக் கொள்ளாத மனம்
தான் ஈன்ற பொழுதில் தெரியும்
காலக்குறிப்பின் வலிகள்...

இது
தேசீய இனங்களின் வலிகளையும் போக்கி சமத்துவம் படைக்கவும் துணையாகும் அனுபவம்...
%

- கவிஞர். கா.அமீர்ஜான்/ திருநின்றவூர்

**
 
கலையழகை உறிஞ்சிய சிலைகளில்
நாட்டு நாகரிகம் நாடகமாய் –
நடைமுறையில் இருந்த
உடையழகும் நடையழகும்
செதுக்கியவன்,  சிலைக்குள்
பதுக்கி வைப்பான் –
புகுந்து பார் !! கல்லிற்குள் கலாசாரம்
லேசர் வெளிச்சமாய் புலப்படும் !!
மருந்தும் விருந்தும் பாறைக்குள்
பொருட்காட்சி நடத்தும் !!
ஆம் –
கண்டெடுத்த சிற்பங்களுக்கு
காலம் உண்டு – காலன் இல்லை !!

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

**

ஒரு நள்ளிரவுச் சாமத்தில் திடுக்கெனக் கண்விழித்தேன்,
என் இரவை யாரோ வெட்டிக் கொண்டிருந்தார்கள்
இருட்டின் பாதாளத்திற்குள் மெல்ல நடந்து சென்றால்
ஆறடி செங்கல் கல்லறையிலிருந்து 
இரண்டு மலர்க்கைகளும், ‘சலீம்’ என்ற அவலக்குரலும் வெளிவந்தன
என் இரவு நொறுங்கித் தூள்தூளாகிக் கிடந்தது

அன்று திரைக்குப் பின்னாடி மலர்கள் தொடுத்துக் கொண்டிருந்தாய்
என் கவிதைகளை நிசப்தம் வாசித்துக் கொண்டிருந்தது
ஒவ்வொன்றுக்கும் ஒரு பூவை எடுத்து வைத்தாய்
நூறு முடிந்தது என்று நீ வெளியே வந்தாய்
அங்கே குலோத்துங்கன் என் தலையை வெட்டி முடித்திருந்தான்
‘அமராவதி’ என்று அவன் கண்ணீரோடு அலறினான்

எந்த யுகத்திலோ யாரோ வைத்த தீயில்
இன்னும் என் இரவுகள் எரிந்துகொண்டிருக்கின்றன
ஒவ்வொரு இருட்டின் கண்களிலிருந்தும் நீ 
எட்டிப் பார்க்கிறாய்; உன் முகம்முழுவதும் தீச்சுவடுகள்!

 - கவிஞர் மஹாரதி

**

பல்லாயிரமாண்டுகள் முன்தோன்றிய
மூத்தக்குடியின் சமூக அடையாளங்களோ
கல்வெட்டுகளில் காலத்துடன்
ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும்
கற்காலம் தொடங்கி தவழ்ந்த நாகரிக
காலத்தின் முற்களை நகர்த்தி காட்ட,
ஆழியில் புதைந்த தடையங்களும்
ஊழிகாற்றில் மறைந்த தடங்களும்,
அகழாய்வில் தொல்லியல் சான்றுகளில்
சொல்லில் வடிவமைந்ததே வாழ்வியலுடன்
நதிகள் தடம் பதித்த பாதைகளும்!
நனிநகரிகம் திறந்து காட்டிய
கனிந்த மனித வாழ்க்கையின் சிறப்புகள்
இனிய கண்டெடுப்பின் காலச்சுவடிகளே !!

- தனலட்சுமி பரமசிவம்

**

ஒருமையில் பேசிக்கொண்ட போது,
உன்னைக் கண்டேன் 
தனிமையில் பேசிக்கொண்ட போது,
என்னைக்கண்டேன் 
பறவை பறப்பதை பார்த்தேன்,
இறக்கையோடு விமானம் கண்டேன் (1900-ல் ரைட் சகோதரர்கள் விமானம்)
இருளில் பார்த்தேன்,
ஒளி பிறந்தது (1831-ல் மைக்கேல்பாரடே மின்சாரம்)
இறக்கையுடன்  ஒளியும் சேர்ந்ததால் ,
என்னால் என்னையே உணரமுடியவில்லை 
இருப்பது  போதும் என்ற நிறைவே இல்லை
தேவைகளை அடுக்கி, 
தொல்லைகளை பதுக்கி 
கண்ணிவெடியாய் என்று வெடிக்குமென,
வாழ்வின் ஒவ்வொரு அடியும் பயத்துடனே கழிகிறது   

- ம.சபரிநாத்,சேலம்

**

கற்கால மனிதர்களுக்குள்ளும் கண்டு பிடிப்புகள்
தற்கால மனிதரைவிட அறிவின் படைப்புகள்
உற்பத்திக்கு முதலிடம் தந்த முன்னோர்களவர்
பற்பல கல்லாயுதங்கள் கண்ட முதல்வர்களவர்

சிந்துவெளி நாகரிக சிற்பிகளும் தமிழர்களாய்
உந்துதலில் கட்டடக் கலை விற்பன்னர்களாய்
துந்துபிகள் முழங்க பவனி வந்த மன்னர்களாய்
சிந்தனையில் சிறப்பாகி நாகரிகம் கண்டனரே

செப்பேடுகளில் சரித்திரக் குறிப்புகள் தந்தனர்
அப்போது நடந்தவையனைத்தும் அரங்கேறின
தப்பேதுமின்றி கல்வெட்டுகள் அங்கங்கே நிறுவி
எப்போதும் பழமையை பதித்திட்ட பாங்கானதே

எழுத்தாணியால் அழுத்தி எழுதிய தமிழெழுத்துகள்
அழுத்தமாய் எடுத்துரைத்தது தமிழின் பெருமையை
முழுதான முத்தான தமிழ் நூல்கள் ஓலைகளிலே
விழுதாகத் தொடர வழிவகுத்த வியப்புகளென

கண்டெடுப்பின் காலக் குறிப்புகள் கணக்கிலடங்காது
விண்டுரைக்க வியப்பின் எல்லையில் நிற்குமது
பண்டு நடந்தவை பரபரப்பாய் படிக்கக் கிடைக்கிறது
தொண்டாக செய்த முன்னோர் அறிவு வள்ளல்களே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

பூமியைத் தோண்டி
புதையல் எடுக்கிறோம்
புத்தியைத் தோண்டி-அதன்
காலத்தைக் கணிக்கிறோம்!

பெண்ணிலிருந்து கண்டெடுத்த குழந்தையின்
காலக்குறிப்பெடுத்து
வாழும் காலத்தைக் கணிக்கிறோம்!
மண்ணிலிருந்து கண்டெடுத்தவற்றிற்கு
வாழ்ந்த காலத்தைக் குறிக்கிறோம்!

ஜாதகம் எதிகாலம் காட்டும்
கடிகாரம் நிகழ்காலம் காட்டும்
கண்டெடுப்பின் கலக்குரிப்புகள்
கடந்த காலத்தைக் காட்டும்!

-கு.முருகேசன்

**

சிந்துச் சமவெளி
சீர்மிகு தமிழர் பண்பாட்டை 
பறைசாற்றும் பெருவெளி.
கீழடி
தமிழருக்கு என்னடா? வரலாறு
என்றவர்களுக்கு  தந்தது செருப்படி.
ஆதிச்சநல்லூர்
ஆதித்தமிழர்
சாதிச்ச நல்லூர்.
அழகன்குளம்
தமிழர் தனிச் சிறப்புகள்
நிரம்பிய குளம். 
அரிக்கமேடு
பழம் தமிழரின்
தகவல் தரும் 
அறிக்கை எடு..!

- முத்துப்பாண்டி பரமசிவம், நத்தம்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com