மழைமேகம்
நிலவும் சூரியனும் கல்லறையில் தூங்கும்
பொழுதில் வானத்தை மழைமேகம் தாங்கும்
பைத்தியம் பிடித்த இடியும் காற்றும்
படபட வென்றே முகிலினைத் தூற்றும்
கருத்த மேகம் நீர்பிடித்த கும்பம்
பூமியில் தெறிக்கும் அதனின் பிம்பம்
மணிச்சாரல் துளிகள் கருமுகில் கனாக்கள்
மண்ணின் மீது விழுகின்ற வினாக்கள்
மழையை அடைகாக்கும் கார்மேகக் கூட்டம்
மழைத்துளிப் பூக்கள் மலர்ந்திருக்கும் தோட்டம்
உழவனின் கைகள் கும்பிடும் கோயில்
உன்னத சொர்க்கத்தின் உயர்ந்ததோர் வாயில்
வான்கடலில் உறைந்தாலும் மழைமேகம் அலையாகும்
மழையாக விழுந்தாலே மண்ணுலகம் நிலையாகும்
- கவிஞர் மஹாரதி
**
மேகங்களே...மழை மேகங்களே!
மேதினியை இப்படியே வாட்டிடுதல்
நியாயந்தானா என்று கணமேனும்
நீவீர் நினைத்துப்.பார்ப்பதுண்டோ
பெய்தால் ஒன்றாய்ப் பெய்கின்றாய்
பிறழ்ந்தால் நன்றாய் பிறழ்கின்றாய்
மேகமென்று கர்ணன் தன்னை
மேதினி போற்றுதலை அறியாயோ
கரியநிறத்தில் நீ வரும் வேளையில்
கானமயிலும் தோகை விரித்தே
ஆடிப்பாடி மகிழ்ந்து நிற்கும் ,
அப்படியே புவி வியந்து நிற்கும்!
மன்னர்கள் காலத்தில் நீயுந்தான்
மகிழ்வுடனே மாதம் மூன்றுமுறை
நின்று பெய்ததும் நிஜந்தானா
நிம்மதி எமக்கும் தருவாயா!
-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி
**
ஊருணி நிறைவதும்
உள்ளம் குளிர்வதும்
பயிர்கள் சிரிப்பதும்
உயிர்கள் மகிழ்வதும்
மழைமேகம் பொழிவதால்!
வானில் தோன்றும் வெண்மேகம்
விளையாடிவிட்டுப் போகும்!
வானில் தோன்றும் கார்மேகமே
மண்ணின் கருப்பை தீர்த்து விட்டுப் போகும்!
விண்மீன்கள் பிடிக்க
வானில் யார் விரித்தது வலை? மேகம்!
யார் புகைத்த புகை? மேகம்!
மேகம்!
வானில் பறக்கும்
இறக்கை இல்லாப் பறவை!
உலகம் சுற்றும்
உருவமில்லாப் பறவை!
நாம் நினைத்த உருவில் தோன்றும்
சாம்பல் மேடுகள் மேகம்!
பூமியின் தாகம் தீர்க்கும்
உயிர்களின் சோகம் தீர்க்கும்
மழை மேகம்!
-கு.முருகேசன்
**
நன்கு கதிர்வளர்ந்த பின்னும்
நெல்மணிகள் இல்லாமல்
இருப்பதை போன்றும்....
நன்கு பழுத்த பின்னும்
முக்கனிகள் சுவையற்று
இருப்பதை போன்றும்....
கடற்கரைக்கு சென்றுவிட்டு
கால்களை முத்தமிட - கொஞ்சும்
அலைகள் இல்லாமல்
இருப்பதை போன்றும்....
காதலியை கண்டபிறகும் - அவளின்
கடைக்கண் பாா்வை கிட்டாமல் -
காதலன் இருப்பதை போன்றும்....
நிலவை நெருங்கியும் - லேண்டர்
விண்கலம் - தகவல் தராமல்
இருப்பதை போன்றும் இருக்கின்றது...
மழை மேகமே -
நீ வந்தும்
மழை வராமல் இருப்பது....
-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை
**
நீராடும் மேகக் கூட்டம்
நீலவான்மேல் இருக்க; இங்கே
போராடும் மக்கள் தம்மின்
புன்னகையை இழந்தி ருக்க
வாராயோ என்று வேண்டி
வரவேற்று காத்தி ருக்க
தீராத இன்பம் தந்து
தினந்தோறும் பொழிவாய் நீயே!
- கோ.வேல்பாண்டியன், இராணிப்பேட்டை
**
மழை மேகமே, ஓ...மழை மேகமே, நீ விலை போயினையோ? ஓ..விலை போயினையோ?
மா விழியாள் உன் வரவால் இவ்வழி ஏகலையோ ? ஓஓ
இவ்வழி ஏகலையோ? (மழை மேகமே)
காளை நான் கலங்கிட மழை மேகமே,நீ பொழிந்தனையே!
கன்னியவள் வடிவம் உன்னில் தெரிகையில் நீ கரைந்தனையே! (மழை மேகமே)
மழை மேகமே, விண்மகள் விரி கூந்தலே, புவியின் சீர்தட்டே, மயில் ஆடல் உன்னாலே!
மண்மீதில் நீ சொரிகின்றாய், அந்தணர் வளர் யாகத்தீ நெய் போலே!(மழை மேகமே)
என்னவள் என் அருகினில் வருகையில், பெருமழை என நீ கொட்டி விடு!
என்னுடன் பேசிட, உழவரின் உபகாரியே, உபகாரியே, நீ வரம் கொடு!
(மழை மேகமே)
சூல்கொண்ட பிடிகளாய், நகருகின்ற மழை மேகங்களே, மழை மேகங்களே!
சுடர் வைர மின்னலாய் தூரத்தே, குடையொடு வருகிறாள், என் காதலியே!
தத்தித்தோம்..தத்தித்தோம்..ததிங்கிடத்தோம்..
தாவுது, துள்ளுது என் மனம் தகிடதோம், தகிடதோம், தந்தனத்தோம்!
(மழை மேகமே)
- இலக்கிய அறிவுமதி.
**