மௌனச் சிறை வாசகர் கவிதை 3

அடை மழை என பொழிய வேண்டிய நேரங்களில் கானல் நீரைத் தேர்ந்தெடுக்கிறேன்
மௌனச் சிறை வாசகர் கவிதை 3

மௌனச் சிறை

அடை மழை என பொழிய வேண்டிய நேரங்களில் 
கானல் நீரைத் தேர்ந்தெடுக்கிறேன்...

வாயாடி ஓய்கிறேன் கனவு உலகில் 
கவிதை நடையாய்....
நனவு உலகிலோ
உதடுகளை ஊசியால் கோர்த்த சட்ட புத்தகமாய்...

வார்த்தைகளை விழுங்கி விழுங்கி 
கனத்து இருக்கிறது நெஞ்சு ஈரல்...
தொண்டைக் குழியிலிருந்து வெளியேற்ற 
தடுத்து நிறுத்துகிறது நாவு ஈரம்....

மௌனம் சம்மதத்திற்கு மட்டுமல்ல...
இயலாமையின் அறிகுறி முயலாமையின் அறிகுறி 
தயக்கத்தின் அறிகுறி மயக்கத்தின் அறிகுறி 
சினத்தின் அறிகுறி ப(பி)ணத்தின் அறிகுறி 
அடிமையின் அறிகுறி தனிமையின்  அறிகுறி 

எனது மௌனத்தைச் சிறையிலடைக்க வேண்டும்...
கனமான வார்த்தைகள் கொண்டா??
இந்தப் பூட்டுச் சரிதானா???
சரி... கேட்டுச் சொல்லுங்கள்....
நில்லுங்கள்.....
ஆனால் யாரிடம் கேட்க???!!!??
இந்தச் சிறைக்கு வெளியில் 
யாருமே இல்லையே!!!!!!

- இரா.பிரேமலதா  

**

அன்பும் பண்பும் அறமும் திறமும்  
     அனைத்தும் தமிழின் கொடையாகும் !- துயர்
இன்னல் வந்தால் எளிதே அழிக்கும்
     ஏற்றம் தமிழின் மறமாகும் !

முப்பால் போல முனைப்பை நல்கும்
     மொழியே தமிழின் முதலாகும் !- எவர்
எப்பால் என்ற போதும் கூட
     இனிமை தமிழின் வித்தாகும் !

தொல்காப்பியம் போல் சொல்லும் வகையில்
தோன்ற வில்லை நூலேதும் !- மொழி
வெல்லம் போலும் வெள்ளம் போலும்
     விளங்கும் தமிழ்தன் விழியாகும் !

அகமும் புறமும் அடுக்கடுக்காய்
     அந்நாள் வாழ்ந்தார் கதைகூறும் !- நம்
அகமும் முகமும் போல விளங்கி
     ஆழ்ந்த தமிழின் முடிசூடும் !

சிறப்பு மிக்க சிறப்பே சேர்க்கும்
     தேனின் அமுத மொழியாகும் !- நம்
பிறப்பும் இறப்பும் தமிழுக் கென்றே
     பேணி வாழ வழிகோலும் !

அன்றும் இன்றும் என்றும் தமிழே
     ஆளும் உயிரும் உடலாகும் !- எந்த
இன்னல் எனினும் இடியாய் தாங்கும்
     இனிய தமிழே உறவாகும் !

தமிழின் சிறையே வாழ வைக்கும்
     தனித்த பாது காப்பாகும் !- மவுனம்
தமிழே கலைக்கும் தலைமை கொடுக்கும்
     தன்னே ரில்லாத் தரவாகும் !

-தேன்மொழிவாணன்,ஆர்க்காடு


**

விரிந்த வெளிக்கு
வெறுமையை காவல் காக்க வைத்தது
ஏகம்...

சிம்மாசனமற்ற
பிரம்மத்தனத்தால் வியாபித்து வைத்து
புலப்படாமல் குழம்ப
வேடிக்கைப் பார்க்கிறது பிரமாண்டத்தின்
புதிர்...

குழந்தையைப் போல்
சூரிய சந்திர நட்சத்திரங்களோடு
விளையாடிக் கொண்டிருக்கிறது
சூட்சுமம்...

நீரையும் காற்றையும்
நிலத்தில் ஊடுறுவ வைத்து
இடிமின்னல்களை அண்ணாந்து பார்க்கவிட்டு

ரசிக்கிறதாக இருக்கிற பிரபஞ்சத்தில்
உயிரினங்களையும் நடமாடவிட்டு
அலகிலாமல் ஆடுவதால்

நிகழும்
லாபமென்ன என்பதில்
நிகழ்த்தாமலிருந்தால் நட்டமென்ன?!
யாருக்கும் எதற்கும்...

எனக் கேட்டு
விடை தெரியா குழப்பத்தில்
தனக்குத்தானே
சிறையிட்டுக் கொண்டது
மவுனம்...!?

- கா.அமீர்ஜான்/திருநின்றவுர்

**

அரும்பு மவுன சிறையாலே அழகு மலராய் விரிகிறது !
விரும்பா மவுன சிறையாலே வெற்றி பலவும் விளைகிறது !
நெருப்பு மவுன சிறையாலே நெற்றி நீறாய்ச் சிரிக்கிறது !
பருப்பு மவுன சிறையாலே பருப்பும் குழம்பாய் மணக்கிறது !

சிப்பிக் குள்ளே சிறையாகி தேர்ந்த மவுனம் காத்ததனால்
ஒப்பில் உயர்ந்த முத்தாகி உலகம் காண விழிக்கிறது !
எப்போ திருந்தோ மண்ணுக்குள் ஏற்ற மவுன சிறையினிலே
ஒப்பி இருந்த காரணத்தால் உயர்ந்த வைரம் கிடைக்கிறது !

மண்ணாம் சிறையில் மவுனமுடன்
மணியாம் வித்து கிடக்கிறது !
விண்ணாம் சிறையில் விடுபட்டே வீழ்ந்து மழைமண் நனைக்கிறது !
கண்ணைத் திறந்து வித்ததுவும் கட்டி மண்ணைப் பிளக்கிறது
எண்ணம் இழந்து சிறையினிலே இருந்த மவுனம் கலைகிறது !

மவுனச் சிறையை உடைத்தெறிந்தால் மண்ணில் துயரம் மடிகிறது !
மவுனச் சிறையை உடைத்தெறிந்தால் மகிழ்ச்சி எங்கும் படர்கிறது !
மவுனச் சிறையை உடைத்தெரிந்தால் மழையாய் மகிழ்ச்சி பாய்கிறது !
மவுனச் சிறையை உடைத்தெரிந்தால் மலராய் மணமே கமழ்கிறது !

மவுனச் சிறையே அன்பகத்தை மகிழ்ச்சி பூக்க வைக்கிறது !
மவுனச் சிறையே இல்லத்தில் மாட்சி சேர வைக்கிறது !
மவுனச் சிறையே சிலநேரம் மனத்தை வாட்டி வதைக்கிறது !
மவுனச் சிறையே மகிழ்வதனை மலர்காய் கனியாய் இனிக்கிறது !

-து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி).

**

உன்னைக் கண்டபின்பு நானும்
...உலகம்மறந்து கிடந்தேன்உன் அழகுசிறைக்குள்
மண்ணில் வாழும் காலம்வரை
...மலராய்பூத்துக் கிடந்தேன்உன் அன்புசிறைக்குள்
இமைகள் இரண்டுக்கும் இடையில்
...இருவிழியால் அடைத்தாய் உன்விழிசிறைக்குள்
சுமைகள் எல்லாம் மறந்து
...சுதந்திரமாய்வாழ வைத்தாய்உன் இதயசிறைக்குள்
கனவுகளை கற்பனையாய்ச் சுமந்து
...கவிதையாய் பிறந்தேன்உன் காகிதசிறைக்குள்
வானவில்லாய் நானும் இங்கு
...வளைந்து போனேன்உன் வண்ணசிறைக்குள்
பசுமையான இனிய நினைவுகளோடு
...பறவையாய்த் திரிந்தேன்உன் காதல்சிறைக்குள்
பேசாத நிலவாய்கண்ணீர்த் துளிகளோடு
...பிரிவால் துடித்தேன்உன் “மௌனசிறை”க்குள்

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

ஒலியின் மொழி மனிதம்
மெளனத்தின் மொழி இறைமை,
ஓர் நீண்ட வழிப் பயணத்தின்
நெடிய இரவை - தன் கூரிய பற்களால் கடித்து 
விழுங்கும் மெளனம், நிசப்தமாய் காணாமல் போகிறது.
செய்தவற்றை அசை பார்க்கும் முன்பே முடிந்து விடுகிறது
முழுமையாய்,
நானும், மெளனமும் எதிர் எதிரே!
 நிசப்தத்தை கலைத்தது என் செருமல்,
கேட்டாயா ஏதேனும்?" என்றேன் நான்.
"எப்போதும் என்னோடுதானா நீ?- என்றது  மெளனம்.
"விரும்புகிறேன் அதனை" - என்றேன் நான்.
"இல்லை என்பதை இப்படியும் சொல்லலாமா?" 
"ஒன்றைப் பிரதிபலிக்கும் விழைவிலும், 
ஒப்பீடு செய்யும் தருணத்திலும் உனை இழக்கிறேன்"
 நகைத்துக் கரைந்தது மெளனம்.
ஒப்பீடும், பிரதிபலிப்பும் இல்லா நிலை வேண்டி,
என்றென்றும் அமைதி என்னுடன் இருக்க வேண்டி,
ஆசைப்படுவதிலேயே
கழிகிறது காலம் - மெளன சிறையில்

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

பத்து மாதம் பத்துமா நான் - நீ
சேத்து வச்ச சொத்தம்மா,
ஒன்றாய் இரண்டாய் பலவாய்
இன்று உருவாகி நின்ற உடலின்
உருவாக்கம் உந்தன் கருவறை,
அருவமாய் 
ஆரம்பித்து இறைமையுடன்,
எனை
ஈன்று - உருவாக்கி உடல் தந்து
ஊட்டி நிதம் எனை வளர்த்து
என்னை இங்கு பாராட்டி
ஏற்றம் புரிந்திட்ட
ஐயிரண்டு மாத மெளன 
ஒளி கடந்த வெளியூடே
ஓங்கார ஒலியூடே-
அவ்விய அகந்தையற்ற
அச்சிறையே தாயின் 
மௌன சிறை,
நிம்மதியும் அத்தோடு போச்சு.

- கவிதாவாணி மைசூர்

**

அவளுக்கோ வயது 26
மணமாகவில்லை காரணம் காதல்
படிப்பு இரட்டை பட்டம்
படித்த படிப்புக்கு வேலை தேடி
முன்னே சென்றால் முட்டல்
பின்னே தங்கை துரத்தல்
ஒரு பக்கம் தந்தைக்கு வேலையில்லை
மறுபக்கம் காதலன் கைபிடிக்கவில்லை
தண்ட சோறு என தந்தை திட்ட
காசில்லை என தாய் கண் கசக்க
சோம்பேறி என உரவுகள் உரச
திமிர் பிடித்தவள் என நட்புகள் நகைக்க
இருள் பகல் என அறியா இருள் சிறையில்
காதலன் கைப்பிடிக்க காத்திருக்கிறாள்
மெளன சிறையில்.

-ரகுநந்தன்(சசகு)

**

உதடுகள் உரசாமல்,
பிரச்சினைப் பொழுதில்
உன் வார்த்தைகளைச்
சிறை இட்டால்,
முரண்பாடென்ற தண்டனையில்லையே!

நீ அள்ளித் தெளிக்காமல்,
அளவாய் வடிக்கும்
அன்பு வார்த்தைகளாலே,
இவன்..பிறர் மனம் வருத்தாத
மௌன சிறை பூண்டவன் என்றாவாயே!

வார்த்தைகளை உனக்குள்ளே,
சிறையிட்டு பூட்டிவைத்து,
கேளா மொழிக்கு..
நீ செதுக்கிய மௌனச்சிலையும்
ஓர் சிறந்த ஒலித்தானே!

-கவி.சி.காவியா, புதுக்கோட்டை

**

இல்லற ராஜ்யத்தில் எப்போதும் மெளனம் ஒரு ஆயுதம்
கருத்து மாறு  தானாக  சரியாகும் வரை அது நீடிக்கும்
நாட்டில்கூடசில பிரச்சினைகள் வரும்போது தலைவர்கள்
காட்டும் எதிர்ப்பு மெளனம் மொழிதான் அறிவோம் நாம்
மெளனம் சிறை போன்றதுதான் மகிழ்ச்சி கிடைக்காது
மெளன ராகம், மெளன கீதம் பெயர்களாய் வந்துள்ளன
பேசாமல்இருப்பது மிகக்கடினம் உண்ணாமல்இருக்காலம்
மெளனம் ஒருவகைப்போராட்டம் உண்ணாவிரதம் போல்
மெளனமாக  இருந்தால் மனதுக்கு கடினம், மெளனம்
தனக்குத்தான் போட்டுக்க்கொள்ளும் ஒரு சிறைதான்
மெளனம் புரட்சியாளார்களால்  தவ நிலையில் கூட
கடவுளின் கவனத்தைக் கவர முடியாது உண்மை
அற்புத மனிதர்கள் கடைப்பிடிக்கும் மெளன தவத்தால்
சாதாரணமாக பயனேதுமின்றி கடவுளை  காண்பார்கள்
மெளனம் சிறையில் தன்னைத் தானே பூட்டிக்கொள்ளும்
கவனம் கவர்ந்து கடவுளைக் காணும் ஒரு வழி தான்!           

 - கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**

மௌனசிறையில் நான் இருந்தேன்
என்மடியில் அவளும் தானிருந்தாள்!
பிறையை  மிஞ்சும்  அவள்நெற்றி 
புரளும் அலையென அவள்கூந்தல்
துள்ளும்  மீனென  அவள்கண்கள்
தூத்துக்குடி முத்தென வெண்பற்கள்
சேலத்து   மாம்பழ    வழவழப்பு
சிவந்த அவளின் கன்னங்களில்
ஊட்டியின் ரோஜா இதழ்போல
உதடுகள் இரண்டும் மெலிதாக!
கண்கள் விரியப் பார்த்திருந்தேன்
கடின மௌனத்தில் ஆழ்ந்திருந்தேன்!

சுதந்திரக்  காற்றை   நாம்நுகர
நூறு  ஆயிரம்  முன்னோர்கள்
கொடிய சிறையில் அடைந்திட்டார்
கொடுமைகள் பலதையும் பட்டிட்டார்!
மௌன  சிறையில்  வாடிட்டார்
மகிழச்சியை அவரும் தொலைத்திட்ட்டார்!
ஆனால்    அந்த     நாடின்று
அசுத்தக் காற்றால் மாசுபட்டு
வாழும் மக்களைப் பயமுறுத்தி
வழி தெரியாமல் துயருற்று
மௌனமாய் மனதுள் அழுதபடி
மௌன சிறையில் அடங்கிற்றே!

-ரெ.ஆத்மநாதன், அமெரிக்கா

**
குடும்பமாய் ஒரு கூட்டம்,
சிற்றுண்டி முடித்தது!
“பெண்ணைபிடித்தது” என்று அவர்கள் சொல்ல
இரண்டு நாள் பிடித்தது !!
கல்யாணப்பட்டில்
வெள்ளிச்சரிகையா? வெள்ளைச்சரிகையா?
அல்வாவில் கூட அரைத்தித்திப்பா?
பெண்ணின் காதிற்குள் புகுந்த குண்டூசிகள் !!
புதிய இல்லத்தில் புகுந்தவள்
கருப்புச்சொற்களை கரைத்து,
கருங்கற்களை கற்கண்டு ஆக்கியவள் !! 
குடும்பமும் உண்டு,
குழந்தையும் உண்டு,
குதூகலம் குற்றால அருவியாய்
பாசமென்ற மூலிகையுடன் கொட்டியது!!
இவள் விட்டுக்கொடுப்பதை
தொட்டுகொள்ளவில்லை – விழுங்கினாள் !!
சூழ்நிலைகளை சுகமாக்கினாலும்,
இன்றும் இவள் மௌனச்சிறையில்
அந்த கல்லூரிக்காதலன் ---

- கவிஞர்.  டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD
பேராசிரியர்,  மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி, புதுச்சேரி  

**

மௌனம் சிறைதான் என்றாலும் பல வினாக்களுக்கு விடை கொடுக்கும்
பேசிமுடியாத பிரச்சினைகள் கூட பேசாமல் சாதிக்கமுடியும் மௌனத்தால்
மௌன சிறையில்  சவமாக தவமிருந்தாலும் கடவுளை காண்பதில்லை
மௌனம் இருந்தால் மோகமற்று மோனமாயிருந்தால் கிட்டுமென்பார்
தேடப்படுபவனாக இருக்கும் அவனை தரிசிக்க மௌனம் ஒரு வழிதான்
தேடப்படுபவன் கிடைத்து விட்டால் அவனும் சாதாரணன் ஆகிவிடுவான்
ஞானிகள் மட்டுமே காண்பார் நமது ஊனக்கண்ணுக்கு காணக்கிடையார்
ஞானிகள் கையாண்ட வழிகளில் ஒன்றுதன் மௌனம் சிறை அறிவோம்
இமயம் போனாலும் கருவரையில்,சர்ச்சில், தொழுகையிடத்தில் காண
எவர் முயன்றிடும் கண்டேன் சொல்லலாமே ஆனால் காணமுடியாது
அமைதியாய் இருந்து ஓரிடத்தில் யோகம் செய்து ஆன்மாவுடன் பேசலாம்
அதில் லயித்து சுகித்து இருக்கும் நிலை கைவல்யம் என்கின்றார். ஆனால்
ஆழ்வார்கள் இதனை விரும்பியதில்லை ஆண்டனின் திருவடியடைய
ஆயிரங்கள் பாடி அன்பாய் அழைக்கின்றார்கள் திவ்யபிரபந்தமாக
ஆனால் உறுதியாக நம்பலாம் மௌனம் மனநோயை போக்கவல்லது
அமைதியான  வாழ்வினிலே மோனத்து இருந்து அடையலாம் நிம்மதி!

- கவிஞர் சூடாமணி .ஜி 638290809    இராஜபாளையம்     

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com