அப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை 3

நாற்காலி இல்லாத வீடாயிருந்த காலமது ஆற்றாமையின்றி ஒற்றுமைத் தென்றல் வீசியது
அப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை 3

அப்பாவின் நாற்காலி

அப்பாவின் நாற்காலி - இந்த நாற்காலியில்
அமர உள்ளாட்சி தேர்தல் வேண்டாம்
அப்பாவின் உள்ளாா்ந்த அன்பொன்றே  போதும்;
அப்பாவை நாங்கள் தாங்கியதைவிட - அவர்
அமர்ந்த நாற்காலி தாங்கியதுதான் அதிகம்;
அவருக்கு ஓய்வளித்து உணவளிக்க விரும்பினால் -
உட்காா்ந்து சாப்பிட்டால் உடல்வலிப் பெறும்
உழைத்து சாப்பிட்டால்தான் உடல்வலிமைப் பெறுமென்பாா்;
அப்பா நாற்காலியில் அமர்ந்தபடியே கூறிடுவார்
பட்ட பாட்டினையும் - படித்த செய்திகளையும் -
அவர் கொண்டாடிய செய்திகளை விட -
அவர் கண்ணீர்விட்ட செய்திகள்தான் அதிகம்-
ஒரு தீர்ப்புக்கு மட்டுமல்ல - இதேபோல்
ஒவ்வொரு தீர்ப்புக்கும் உடனடி நீதிவேண்டுமென்பாா்-
இங்கே உடல் - உயிர் - உடைமை -
எதனை இழந்தாலும் இழப்பீட்டுத் தொகை -
இழப்பின் வலியை இழந்தவரே அறிந்திடுவாா் -
இழந்தவரின் நிலையெண்ணி நித்தமும் அழுதிடுவாா் -
அப்பாவின் அழுகையில் விழுந்த கண்ணீர்துளிகள்
அப்பாவின் நாற்காலியையும் மண்ணையும் ஈரமாக்கியது -
அந்த ஈரம் அனைவரின் மனங்களிலும்
அந்தந்த வழக்குகளிலும் வேண்டுமென்று அணுதினமும்
ஆண்டவனை வேண்டியவண்ணமாய் அழுதுக் கொண்டிருக்கும்....

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

அவர் அமர்ந்து அயர்ந்து நான்
கண்டதில்லை, 
உணவு கூட ஒழுங்காக நேரம் ஒதுக்கி உண்டதில்லை,
எப்போதும் உழைப்பு, ஓட்டம் ஓட்டம் தான்,
அப்போதும் குறைந்திடாத கரிசனம், 
ஆழ் மனதில் அவர் தான் எமது தலைவன்,
பார்வையால் பல வினாக்களையும்
பதில்களையும் சொல்லத் தெரிந்த அவருக்கு ஏனோ
எமனுடன் பேராடத் தெரியவில்லை - அகவை 42
எந்தக் கெட்ட பழக்கம் இல்லாதிருந்தும்
மேலுலகம் அவரை அழைத்துக் கொள்ள,
எங்கள் கண்ணில் அவர் இருந்த நாற்காலியும்
கண ணீரும் மட்டும் எஞ்சியிருக்க, வேறு ஒன்றும் சொல்லவியலாத
அப்பாவின் நாற்காலி  எப்போதும் அன்புடன் எங்களுடன்

- கவிதாவாணி மைசூர்

**

என் வீட்டு தாழ்வாரத்தில்
கணக்கில்லா பொருட்கள் இருப்பினும்
என் அப்பாவின் மர நாற்காலி
ஒன்றே- தாழ்வாரத்தின் முதல்வனாய்
தலை தூக்கி நிற்கும் - என்றும் கம்பீரமாய்…..!
என் அப்பாவின் வீரம்
நாற்காலிக்கும் உண்டு - அது
நிற்கும் அழகைக் கண்டால்……..!
பழந் தேக்கினால் இழைக்கப்பட்ட
எனது பாட்டனின் நாற்காலியை
இன்றும் மறவாது போற்றி,
அதில் அழகாய் அமர்ந்து……
தினப் பொழுதைத் தொடங்கும் - என்
அப்பாவின் இளஞ் சகோதரன்
அச்சிறு மர நாற்காலி

-  பிரியங்கா விஜயராகவன்

**

அப்பாவின் நாற்காலி அவ்வளவு எளிதல்ல
தப்பாமல் அவரிடத்தைத் தனியாக அடைவதற்கு
ஒப்புவமை ஏதுமற்ற உயர்ந்த இடந்தன்னிலே
தப்பிதங்கள் செய்யாமல் தழைத்த மனிதரவர்!

பத்து வயிறுகளைப் பசியாற்றிப் பார்த்தஅவர்
சித்து விளையாட்டில் சிறந்தவரோ தானென்று
உற்று நோக்கிடவே ஊராரும் விரும்பிடுவர் 
சற்றேனும் தன்பணியில் சளைத்துமவர் இருந்ததில்லை!

பொறுமை நிதானம் புன்னகை தன்னுடனே
சிறுமைக் குணத்தைச் சிதறடித்த பெருமையுடன்
எல்லோர்க்கும் நல்லவராய் இருந்திட்ட அவரிடத்தை
அடைந்திடலும் எளிதில்லை!அதற்கென்றும் முடிவில்லை!

அப்பாவின் ஞாபகங்கள் அடிமனத்தைக் கனலாக்கும்
எப்பொழுதும் உழையென்று ஏகமாய் ஆணையிடும்!
விஞ்ஞான முன்னேற்றம் விரிவடையா காலத்தில்
வேற்றூர் பலசென்று வினையாற்றி உயர்ந்தவரவர்!

அடுத்தவர்க்கு உதவுவதை அயராமல் செய்திட்டார்
தடுத்தாலும் அவர்பணியில் தாமதங்களை விலக்கிட்டார்
அவரின் மகனென்ற அறிமுகமே போதுமென்று
நால்வரும் முடிவெடுத்தோம்!நல்லதையே செய்கின்றோம்!
-ரெ.ஆத்மநாதன்,
  பால்ஸ் சர்ச்,வெர்ஜீனியா,அமெரிக்கா

- ரெ.ஆத்மநாதன், அமெரிக்கா

**
கனிவு, கண்டிப்பு, கல்வி—
மூன்றும் கலந்த திரிகடுகம் –
ஆம் – அப்பா,
செழிப்பை மறைத்த செல்வந்தர் –
எழுபத்தி இரண்டு ஆண்டுகள்
விரிந்தும் சுருங்கியதும் போதும்,
விளையாட்டை நிறுத்தியது இவர் நுரையீரல் –
இப்போது – உயிரும் இல்லை, உயிலும் இல்லை –
சாம்பல் சற்றே வரத்தொடங்கியது,
சாலயோர மனைகள் எவருக்கோ ?
பல நூறு பவுன் தங்கம்
யாருக்குள் தங்கும் ?
எந்த வங்கிகளில் என்ன கணக்கு ??
அலசிக்கொன்டிருந்தனர் மகனும் மகளும் ---
அங்கே சுயநலமின்றி
அப்பா அமர்ந்த நாற்காலியின் கால்களை
வாஞ்சையுடன் சுற்றி வந்தது
அந்த டாபர்மன் நாய்க்குட்டி மட்டுமே !!

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

**

காலை எழுந்து கடன்கள் கழித்து
பாலைக் கறந்து பாத்திரம் ஊற்றி
காப்பி குடிக்கையில் தேடிய ஓரிடம்;
தோட்டம் நடந்து பயிர்களைப் பார்த்து
தோன்றிய வேலைகள் இனிது முடித்து
கால்நடை மேய்ந்திடக் காட்டில் துரத்தி
பசியது போக்க பாங்காய் அமர்ந்து
ருசியுடன் தேனீர் சுவைத்ததும் இவ்விடம்;
நண்பர்கள் உறவுகள் யார்வரின் என்ன
பண்புடன் பேசவே அமருவார் இங்கே;
ஓய்வு எடுப்பதும் புத்தக வாசிப்பும்
தானாய் நடந்திடும் நித்தமும் இதிலே;
எங்கள் "அப்பாவின் நாற்காலி" நல்ல
அனுபவமுறையே தினம் சொல்லும் நாற்காலி!!

- கு.இரா வடக்கு அயர்லாந்து

**

அதிகாலை விடியலை எண்ணியே
கண் உறக்கத்தின் கனவை மறந்திருப்பார்.
உழைத்து வியர்வை சிந்தியே
என்றென்றும் தேய்ந்திருப்பார்.

எப்படி தேய்ந்தாலும்,
அலைந்து ஓய்ந்து அவர் இளைப்பாறி..
என்றென்றும் அவர் இளமையை இரசிப்பது
அவரின் சிம்மாசனத்திலே!

குடும்பம் என்பதையே என்றும் நினைத்து
அவற்றில் அன்பு, உழைப்பு,ஆரவாரம்,உறுதி என்பதை
நான்கு கால்களாய் தூணாக்கி நாள்தோறும் இளைப்பாறுவார்
அவருக்கு இனிமையான நாற்காலியிலே!

என் இன்முகம் காண என்றென்றும் அன்பை ஊட்டி
அவர் அரவணைப்பை பகிர்ந்தது
அவர் இரசித்த அந்நாற்காலியால் மட்டுமே!

-கவி.சி.காவியா, புதுக்கோட்டை

**

அனுபவங்கள் பல நம்மிடம் பகிருமே
உயிர் தந்த உயிரை சுமந்த
உயிர்  கொண்ட மரத்தினாலான
உயிரோட்டம் நிறைந்த நாற்காலி !
கதிரவன் கதிர்களும், வருணன் பொழிவுகளும்
இயற்கை துணைகளாக உடன் வர,
வியர்வை முத்துக்கள் நெற்றியில் உருள,
பொருளாதார நெருக்கடிகளை மனதில் சுமந்து,
வீடு திரும்பிய அப்பாவை
விரல் பற்றிய குளம்பி நிறைந்த குவழையுடன்
சற்றே அமர்ந்து ஓய்வெடுக்க
புன்னகையுடன் வரவேற்ற நாற்காலி !
அமைதியாய் இருந்து தீர்க்க முடிவெடுக்க
கம்பீரமாக திண்ணையில் அலங்காரமாய்
அப்பாவை சுமந்த நாற்காலி இன்று
அப்பாவின் நினைவலைகளுடன்
கண்ணீர் மல்க நடுதிண்ணையில் அனாதயாய் !

- கவிஞர் தனலட்சுமி பரமசிவம்

**

நாற்காலி இல்லாத வீடாயிருந்த காலமது
ஆற்றாமையின்றி ஒற்றுமைத் தென்றல் வீசியது
காற்றுக்கென பனையோலை விசிறி பேசியது
வேற்றுமையின்றி தரையிலமர்ந்தோம் அன்று

காலம் மாறியது வீடே மாறியது நாற்காலி வந்தது
கோலம் மாறினாலும் நடுத்தரம் மாறவில்லை
ஆலம் விழுதென நாங்களிருக்க அப்பா ஆலமானார்
வேலம்குச்சி பற்பசையாக ஓயாது உழைத்தாரவர்

ஒன்று இரண்டல்ல ஐந்து பேர் மகவுகள் நாங்கள்
கன்றுகள் வளர உதிரத்தை வியர்வையாக்கினார்
வென்று வரும் வீரரைப் போல் மாலை வருவாரவர்
சென்று அமர்வார் நாற்காலியில் சோர்வாகவே

எங்களோடு வளர்ந்த நாற்காலியும்  தேய்ந்தது
சிங்கமென அமர்ந்து அன்பும் ஆணைகளுமாய்
தங்கமென கோலோச்சிய தந்தை ஓய்வானார்
அங்கங்கள் சுருங்கி வயதும் கூடி முதுமையானார்

அவரோடும் நாற்காலியோடும் கழிந்த நாட்கள்
தவறேதுமில்லா நல்வாழ்வை எங்களுக்கு நல்கியது
சவமாக ஆன தந்தையைத் தாங்கியது நாற்காலி
சுவரோரமாக கவலையில் ஆழ்ந்திருக்கிறது அது

இருக்கைகள்  ஆடம்பர வாழ்வில் மாறியது இங்கே
உருவில் பழையதானாலும் நாற்காலி சோதரனல்லவா
கருவில் தோன்றாவிடினும் அப்பாவின் நாற்காலியல்லவா
விருப்பமுடன் அப்பாவின் நினைவாய் இருக்கிறது அது.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

பள்ளியிலிருந்து  வீடு வர
தள்ளி அமர்ந்த நாற்காலியின்
அரசன்  அவர்தான்  என் அப்பா!
உழைத்து  சம்பாதித்த  பணத்தில்
சிறுக  சேமித்து ஆர்வமுடன்
மலர்ந்த  முகத்துடன்   வாங்கிய
நாற்காலி........ அதுதான்
என் அப்பாவின் நாற்காலி!
அவர் நடமாடிய  காலத்தில்
அதில் அமர்ந்து விட்டால்
பதில்கூட  பேசாமல்  கண்மூடிய 
கனவு உலகில்  மகிழ்வார்!
இன்று.............................
அப்பா இல்லை............ஆனால்
அப்பாவின்  நாற்காலி
அவரின்றி  வெறுமையாக
காட்சிதருவதால் ..............
மாட்சிமைமிக்க  அப்பாவை....
அதில் அமர்ந்திருப்பதாக
கற்பனை செய்து   வாழ்வதால் 
சொர்க்கத்தை..............!

- பிரகதா நவநீதன்.  மதுரை

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com