முதல் முத்தம்! வாசகர் கவிதை பகுதி 3

முத்தம் அது  எவருடைய  சித்தம் கலங்க வைத்து 
முதல் முத்தம்! வாசகர் கவிதை பகுதி 3


முதல் முத்தம்  

முதலாய்த் தந்த முத்தம் வாழ்வில்
..........முழுதும் நிறைந்த நிகழ்ச்சிதான்.!
பதமாய் இருவர் பதட்ட முடனே
..........பங்கு கொள்ளும் பகிர்வுதான்.!
இதமாய் அமைந்த இடமும் அதற்கு
..........இனிதாய் அமைய இன்பமே.!
நிதமும் இதுபோல் நடக்க வேண்டி
..........நினைத்து மகிழும் நினைவுதான்.!

.

இதழ்கள் ஒன்றாய் இரண்டும் சேர்ந்தால்
..........இன்பம் அதனின் உச்சமே.!
அதரம் உடலின் அங்கம்..! தருமே
..........அதற்க டையா ளமுத்தமே.!
உதயம் ஆகும் உன்னத எழுச்சி
..........உடம்பில் பொங்கும் மகிழ்ச்சியாய்.!
இதர சுகத்தில் இதுவே மிகையே
..........இலக்கி யமுமே இயம்புமாம்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

முத்தம் அது  எவருடைய  '
சித்தம் கலங்க வைத்து 
பித்தம்    தெளிய  உதவுவது!  
மழலையின்  முத்தம் 
மாசில்லா காற்றுப்போல 
தூசியிலா  இல்லம்  போல 
சுத்தமுடன் இருக்குமே!
உள்ளம்  கலங்கி  துன்பத்தில் 
தள்ளாடினால்   பல்லில்லா  
கள்ளமறியா   மழலையின்  முத்தம் 
துன்பத்தை விரட்டுமே!
இன்பம் சேர்க்கும்  முத்தம் 
சுவர்க்கத்திற்கு  வழிகாட்டும் 
பெறுவோம்  மழலையிடம்  முத்தம் 
தருவோம்  அதனிடம்  அன்பை! 

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

ஆதாமின் விலா ஏவாளாகிவிட்ட
வியப்பின் அழகுக்கு இடாமல்
சாத்தானின் பிரயாசத்தால் குலுங்கிய
ஏதென் தோட்ட ஆப்பிளுக்கு
இட்டதால்
சப்தங்கள் அற்றும் மிகுந்தும்
போல்
இங்கெங்கினாதபடி
எங்குமான பிரகாசத்தையும் தாண்டி
இருளிலும் எதிரொலிக்கின்றன 
வெளியெங்கும் முத்தங்கள்...

முதலில் தொடங்கிய முத்தங்களால்
சாம்ராஜியத்திலிருந்து
சாமான்யங்கள் வரைக்கும் 
தொடர்ந்து
யுத்தக் களத்தில் மோதினாலும்
அன்பின் வழியதும் முன் நிற்கத்தான் செய்கின்றன;
முத்தங்கள்...

- ~கவிஞர். கா.அமீர்ஜான்- திருநின்றவூர்

**

முதல் முத்தம்
காதலில் முதலீடு!- அது
கொடுத்தாலும் குறையாது
பெற்றாலும் நிறையாது
கொடுப்பவருக்கும் மகிழ்ச்சி!
பெறுபவருக்கும் மகிழ்ச்சி!

காதலில்! சத்தம் சாதிக்காததை
முத்தம் சாதிக்கிறது!

காதலியாய் மனைவியாய் இருந்து
பெற்ற முத்தங்கள் எல்லாம்!
தாயானபோது வட்டியும் முதலுமாய்
திருப்பிச் செலுத்தினாள் குழந்தைக்கு!

முத்தம்
உதடுகளின் மௌனமொழி!
உயிர்களின் உணர்வு மொழி!
முப்பால் உலகப் பொதுமறை!
முத்தம் உயிர்களின் பொதுமறை!

-கு.முருகேசன்

**

இதய ஊஞ்சலின் இன்ப ஆட்டத்தின் மிகுதியில்
உதயமாகும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு
அதரங்கள் குவிந்து மற்றொரு அதரம் தேடியதும்
இதமான உரசலில் தோன்றும் இனிப்பே முத்தம்

ஈன்றெடுத்த அன்னையின் பாச வேகத்தில் தான்
தோன்றியது அவள் ஈந்த பாச முத்தம் சேய்க்கு
தேன் தடவிய சிற்றிதழ்களின் மென்மை தந்த
மேன்மையான இன்ப ஊற்று முத்தமல்லவா அது.

இணைந்த இதயங்களில் காதல் மொட்டாகி மலர
அணைத்து சுகம் காண முற்படும் வேளையில்
பிணைந்த இதழ்களின் திருவிளையாடலாக
நினைந்து நினைந்து மகிழ்ந்ததே முதல் முத்தம்

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

நான் கருவறையில் இருந்தபோது
கிடைத்தது என் தந்தையின்
முதல்முத்தம்..!
நான் மண்ணில் பிறந்தபோது
கிடைத்தது என் தாயின்
முதல்முத்தம்..!
நான் காதல்வானில் திரிந்தபோது
கிடைத்தது என் காதலியின்
முதல்முத்தம்..!
நான் மணவாழ்வில் மகிழ்ந்தபோது
கிடைத்தது என் மனைவியின்
முதல்முத்தம்..!
நான் தந்தையாய் மாறியபோது
கிடைத்தது என் மகளின்
முதல்முத்தம்..!

- கவிஞர் நா.நடராஜ், கோவை.

**

அழகான  முத்தம்.....
ஆர்வமுடன்  பெற்ற முத்தம் 
இனிய  அனுபவ முத்தம் 
ஈதலுடன் பெறுவேன் அன்பு முத்தம் 
உற்சாகம் தரும்  முத்தம்!
ஊக்கம்  தரும்  முத்தம்!
என்றும் வேண்டும் இந்த முத்தம்!
ஏக்கம் என்ற சொல்லை மறக்க வைக்கும் முத்தம்!
ஐயமில்லை அது எனக்கு பிடித்த முத்தம்!
ஒருமுறை  இல்லை  பலமுறை பெரும் முத்தம்!
ஓயாமல்  இனிக்கும்  முத்தம்!
ஒளடத்தில்  பயணிக்க வைக்கும்  முத்தம்!
அஃது  நான் ஈன்ற   என் மகள் 
எனக்கு கொடுத்த   முதல் முத்தம்!
மறக்கவே முடியாத முதல் முத்தம்!
ஞாலத்தை  மறக்க வைக்கும்  முத்தம்!
ஜாலம் அறியா  அன்பு முத்தம்!

- பிரகதா நவநீதன், மதுரை

**
அந்தி சாயும் அழகான வேளை!
அணைத்து இழுத்தேன் மெல்ல அவளை!
இதழின் ஓரம் ஈரம் இல்லை!
முத்தம் தந்து ஈர்த்தேன் அவளை!

தரிசான மண்மீது மழைத்துளி போல்!
இதயத்தில் எங்கும் காதல் மழை!
இனிக்க இனிக்கப் பெய்தது இடைவிடாது!
இனியொரு கணம் இது போலாகுமா!

முதல் முத்தம் முதல் சொத்து போல!
பதிவு பண்ணியே பற்று கொண்டேன்!
சாகும் வரை சாகாவரம் பெற்ற!
என் முதல் முத்தம்!
இனிக்கும் நித்தம்!

- குமார் சுப்பையா

**

மரணத்தை வென்ற முதல் முத்தம்
மழலைக்கு தாய்கொடுக்கும் முதல் முத்தம்;

உறவினர் சூழ்ந்திருக்க - காற்றின் வழியே
உரியவள் செலுத்திய முதல் முத்தம்;

இரவின் மடியில் - நிலவின் ஔியில்
இயற்கையெனும் அழகியலோடு முதல் முத்தம் ;

உதடுகள் சேராமல் உள்ளங்கள் சேர்ந்த
உத்தமர்களின் அன்பெனும் முதல் முத்தம்:

வெற்றியாளர்க்கு ஆசிர்வாதமெனும் முதல் முத்தம்;
தோல்வியாளர்க்கு அனுபவமெனும் முதல் முத்தம் ;

விண்ணிலேயே  முடங்கிவிட்ட முத்தம் -மண்ணிற்கு
வரமறுக்கும் மழையெனும் முதல் முத்தம்;

மங்கையரை ஏமாற்றும் கயவர்களின் முத்தம் -
மண்ணிலிருந்து அகற்றவேண்டிய முதல் முத்தம்;

'கவிதைமணி'யால் அலங்கரிக்கப்பட்ட  தமிழ் முத்தம்
சமூகத்தை மாற்றவந்த 'முதல் முத்தம்'

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
 

**


பகலவனின் கதிர்வீச்சில்
வியர்வை சொட்ட
பேருந்து நிறுத்தத்தில்
காத்திருந்த கணநேரம்
கண்ணில் பட்டாளவள்...
பார்ப்பதற்கு கொள்ளையழகு...
பார்வையற்ற பாலகியவள்...
இமைப்பதற்குள் என்வசமிழுத்தேன்
பேருந்துக்குள் அகப்பட்டுவிடாமல்....
நடுநடுங்கி போனவள்...
நிதானித்துக்கொண்டு என்னிடத்தில்
நன்றியுரைக்க கைகளைபிடித்து
அழுத்த முத்தத்தை
ஆட்சேபனையின்றி பதித்துசென்றாள்
மனமுழுதும் பூரித்தது....
நான்பெற்ற அன்பின்
முதல் முத்தம்.......

- கவிஞர். க. இராமலெட்சுமி @கவி தேவிகா, தென்காசி

**

முதல் முத்தம் குறித்து
கவிதை எழுதி அனுப்ப
இன்றே கடைசி நாளாம்...

உன் இதழில் கவி எழுதி
பின் அதையே
அந்த இதழுக்கும் 
அனுப்ப வேண்டும்.

என் அன்பே வழக்கம்போல,
"அப்புறம் ஒருநாள்..."
என்று இன்றும் என்னைத் தடுத்து விடாதே...

 - ஆதியோகி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com