'இந்த நாள் இனிய நாள்' வாசகர் கவிதை பாகம் 3

நல்ல உடையணிந்து நறுஞ்சுவை உணவுண்டு உறுதியான தன்வீட்டில் உறங்கியெழும் நிலையினிலே 
Best day ever
Best day ever

இந்த நாள் இனிய நாள்


தமிழ், தமிழ், தமிழென்று தொடர்ந்து சொல்லும் போது
 அமிழ்து, அமிழ்து , அமிதென்று தானாய் வரும்
இமிழ்க்கடல் அமுதமாய் இனிக்கும் தமிழ் என் தாய்மொழி
  எண்ணும் தோறும் இரும்பூதி எய்துகிறேன்,மகிழ்ச்சி!

விண்ணோடும், மண்ணோடும் உடுக்களோடும்
  உருவான தமிழ் எங்கள் மூச்சேயாகும்
முதன்மொழியாம் உலகின்மொழி தமிழேயாகும்
  கீழடியால் உறுதி செய்வோம் பெருமைகோள்வோம்!

தமிழுக்கும்அமுதென்றுபேர்இன்பத்தமிழ் எங்கள்உயிருக்குநேர்
  கேட்டால் இனிக்கும் இன்பத்தமிழ் இனிபுறுவோம்!
தமிழ் உலகத்தின் முதன்மொழி என்று உணர்ந்தநாள்
  அறிந்தநாள் இந்தநாள் இனிய நாள்! வாழ்த்துக்கள்!

- கவிஞர் அணிபுதுவை கோவேந்தன், இராஜபாளையம்

**

எழிலான வண்ணக்கோலமும்
குத்துவிளக்கு நிறைகுடத்துடன்
பிடித்து வைத்த மஞ்சள்
பிள்ளையாரும் - கூடவே
மாவிலை தோரணமும்
கொட்டும் மேளம் நாதஸ்வரமும்
வாய் நிறைந்த புன்னகையுடன்
வாசலில் அன்னையும் தந்தையும்
விருந்தினரை வரவேற்க
சித்தப்பாவும் பெரியப்பாவும்
மேடையை சரிபார்க்க 
பெரியம்மாவும் சித்தியும்
நலங்குகளை ஆயத்தம் செய்ய  மாமாவும் அத்தையும்
அனைவரையும் நலம் கேட்க
தாத்தாவும் பாட்டியும்
நல்லூரானையும் சந்நிதியானையும்
துணைக்கழைக்க
பெரியவர்களோ கூடி அரசியல் பேச
இளவட்டங்களோ மறுபக்கம் கிரிக்கெட்டை விமர்சிக்க
அக்கா தோழிகளுடன்
அலங்காரத்தில் மும்முரமாக
குழந்தைகளோ தேவதைகளாய்
சுற்றி சுற்றி ஓடி ஆட
கலகலப்பும் குதூகலமுமாய்
அத்தனை உறவுகளையும்
ஆனந்தமாக ஒன்றிணத்து
அழகாய் சபை நிறைத்து மகிழும்
அக்காவின் திருமண நாளாம்
இன்றைய நாள் இனியநாள்!!

- உமா, நோர்வே
**
அறம் என்ற நற்பொருளை அகத்தில் ஏற்றி,
தவநிலையில் தன்முனைப்பை - திருப்பி உள்ளே
தரமான வாழ்விற்கு
வழிகள் சொன்ன
நாலடியும் ஈரடியும் ( குறள் )
கற்று நின்றால்,
பெற்றவர்க்கும் உற்றவர்க்கும் அதுவே வெற்றி, 
ஏற்ற மது எந்நாளும் - இதில்
மாற்றம் இல்லை
கற்றோரைக் கற்றோரே காமுறுவர்,
அப்போது நாளெல்லாம் இனிமை பாரீர்.
நலமோடு சிறக்குமே
நாளும் வாழ்வும் .

- கவிதா வாணி. மைசூர்

**

அன்னை என்னை படைத்து உலகிற்கு 
அறிமுகம் செய்த நாள் இனியது ;
தந்தை எனக்கு கல்வி புகட்ட 
பள்ளிக்கு அனுப்பிய நாளும் இனிது ;
படிப்பை முடித்து நேர்வழியில் நல்ல  
பதவி கிடைத்தது ஓர் இனிய நாள் ;
பழுதின்றி யாருக்கும் நியாயத்தின் பயனளித்து 
பணிமுடித்த நாளும் இனிது;
மனம் நிறை மனையாள் என்னுடன் 
இணைந்த நாள் இனியது தான் ;
விழுதாய் மகன்கள்  என் தோளோடு 
வளர்ந்துவரும்    நாளெல்லாம் இனிது;
ஒவ்வொரு மலராய் உருவான மாலையாய்
உறவுகள் சேரும் நாளும் இனிது ;
நலிவுறும்போது நாடிவந்து உதவும் 
நட்பு தொடரும் நாளெல்லாம் இனிது ;
நல்லவை நினைத்து அல்லவை தவிர்த்து 
நடந்தால் எல்லா நாளும்  இனிமைதான் ;அந்த 
வகையில் இந்த நாளும்  இனிய நாள் !

- முத்து இராசேந்திரன்,சென்னை 

**

காலம் நேரம் பார்ப்பதால் கடமை யாற்ற முடியுமோ ?
ஓல மிட்டே இருந்திடின் உயர்வு தானே கிட்டுமோ ?
சீலம் இன்றி எங்கிலும் சிறப்பு காண முடியுமா ?
ஞாலம் சிறக்க வாழ்ந்திட நல்ல நாளே இந்தநாள் !

நடந்த துயரை எண்ணியே நாளும் அழுது புரள்வதா ?
கடந்த காலம் மீண்டுமே காண இனியும் தோன்றுமா ?
படர்ந்த முல்லைப் பூவினில் பரவும் மணமும் குன்றுமா ?
நடக்கும் யாவும் நல்லதாய் நடக்கும் இந்நாள் இனியநாள் !

யானை வயிற்றில் போனது யாவும் திரும்பக் கூடுமோ ?
தேனை போல யாவுமே சிறந்த மருந்தாய்த் திகழுமோ ?
மோனை எதுகை இல்லையேல் மொழியும் பாட்டாய் முகிழ்க்குமோ ?
ஏனை நாள்கள் போலவே இந்த நாளே இனியநாள் !

சிந்தை யின்றி செயல்களைச் செய்து தோல்வி காண்பையோ ?
நொந்து துயரில் நாளெலாம் நொடிந்தும் ஒடிந்தும் போவையோ ?
வெந்த துண்டுத் தூங்கியே வீணாய் நீயும் மாள்வையோ ?
முந்தை நாள்கள் போலிலை மொழியும் இந்நாள் இனியநாள் !

அந்த நாளின் துயரிலே ஆழ்ந்த தெல்லாம் அகற்றுவாய் !
இந்த நாளே இனியநாள் என்றே ஏற்று மகிழுவாய் !
இந்த நாளே நற்செயல் இனிதே செய்ய எண்ணுவாய் !
எந்த நேரம் எனினுமே இனிக்கும் வெற்றி காணுவாய் !

- து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி)

**
இந்த நாள் இனிய நாள் ...நாம் 
வந்த  நாள் முதல் எந்த நாளும் 
இனிய நாளே ! மனதில் மகிழ்ச்சி 
இருக்கும் நாள் இனிய நாள் ! மனதை 
இறுக்கும் உணர்வு  இருக்கும் ஒரு 
நாள் இனிய நாள் இல்லை   நமக்கு !
நாள் என்றும் ஒன்றுதான் !...இனிப்பும் 
கசப்பும் நம் மனநிலை சார்ந்ததே !
இன்பமும் துன்பமும் சேர்ந்தே வாழ்க்கை !
இந்த நாள் மிக நல்ல நாள் ...நாளை 
இதை விட நல்ல நாள் என மனதில் 
கொண்டால்  வாழ்வில் இந்த நாள் 
மட்டுமல்ல எந்த நாளும் ஒரு இனிய நாளே ! 

- கந்தசாமி  நடராஜன் 

**

ஒரு சூரிய கதிர்
சாளரத்தைத் தாண்டி
உள்ளுக்கு வந்து
வெளிச்சத்தை தருகின்றது

காலையில் எழுந்து 
பூக்களின் வாசம்
மனதிற்கு இன்பம் தரும்

மரங்களில் இலைகள்
பச்சைப் பசேலென இருக்கும்

குருவியும் பாட்டுப் பாடும்
இனிமையான பாட்டுப் பாடும்

இந்த நாள்
ஒரு இனிய நாள்

- கனிசா கணேசன் (வயது 12)

**

எல்லா நாளும் இன்ப நாளே
இந்த நாளை இனிதாக்கினாலே
சொல்லால் இன்பம் செயலால் இன்பம்
என்றொரு மார்க்கம் தனதாகக் கொண்டால்
எல்லா நாளும் இன்ப நாளே
அந்த நாளை நோக்கியொரு நடை
இந்த நாளில் விதைத்துச் சென்றால்
எல்லா நாளும் இனிய நாளே
அன்பும் அறமும் வாழ்வின் ஆணிவேரென
அற்புத கொள்கை நெஞ்சினில் சுமந்தால்
எல்லா நாளும் இன்ப நாளே
ஒருவருக்கொருவர் தமக்கென வாழ்ந்து
இன்பதுன்பம் பகிர்ந்திட்டாலே
எல்லா நாளும் இனிய நாளே
சினமும் வெறுப்பும் சீக்கிரமளித்திடு மெனறந்து
பொறுமையும் புத்திக்கூர்மையும் நின் மதியென காத்தால்
எல்லா நாளும் இன்ப நாளே
எல்லாம் வல்ல என்னை நானே மதித்துச் சென்றால்
எல்லா நாளும் இனிய நாளே!

- யோகராணி கணேசன், நோர்வே

**

இந்தநாள் இனியநாள்  என்றுதான் பிறந்திடும்
அந்தநாள் இனியநாள் ஆக்கிடும் தன்மையைச்
சிந்தையில் ஏற்றிடும் செயலதைப் போற்றிடும்
விந்தையில் வாழ்க்கையை வேட்கையில் ஏற்றிடும்
சொந்தநாள் யாவுமே சுகந்தரும் இனியநாள்
எந்தநாள் ஆயினும் இன்னுரை பேசிடும்
வந்தநாள் நல்லநாள் வாழ்க்கையில் புனிதநாள்
தந்தநாள் தன்னலஞ் சாராது நின்றநாள்.

வாழ்வதோ இனியது வரும்நா ளெலாமே
சூழ்வினை தொடர்ந்திடும் சோம்பலை எரித்துநல்
ஆழ்குழிப் புதைத்திட அகன்றிடும் துன்பமும்
கூழ்குடித் தாயினும் கொண்டதோர் கொள்கையில்
வாழ்வதே நல்லது வாழ்ந்திடும் நாளெலாம்
வீழ்வது இலாமலே வெற்றியைக் காணலாம்
ஊழ்வினை யாடலும் ஒழிந்திடும் நல்லுளந்
தாழ்வுறா நிமிர்ந்திடும் தலைமையாய் எழுந்திடும்

எண்ணமும் நலமாய் இழைத்திடும் செயலதன்
வண்ணமும் நலமாய் வாய்த்திடும் என்றால்
திண்ணமாய்த் தெரிந்திடும் திசையெலாம் உதித்திட
நண்ணிடும் நாளெலாம் நமக்கினி யநாளாம்
பண்ணிய நல்வினை பண்டுதீ வினைகளை
உண்ணியே பொசுககிடும் ஒருசுடர்த் தீயினில்
கொண்டதும் நல்லன கொள்வதும் நல்லன
என்றிடில் எல்லா நாளுமினி யநாளே!

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை
**

நல்ல உடையணிந்து நறுஞ்சுவை உணவுண்டு
உறுதியான தன்வீட்டில் உறங்கியெழும் நிலையினிலே
என்னாட்டு  மக்களெல்லாம் இருந்திடும் நிலைவந்தால்
அந்நாளை நானும் அகத்திலேற்று மகிழ்வுகொண்டு
இனிய நாளென்பேன்!இதயசுகம் மிகவெய்தி
உறவுகளின் துணையோடு உற்சாகத்தில் திளைப்பேன்!

மழையிலும் பனியிலும் மனம்வியர்க்கும் கோடையிலும்
சேற்றிலும் சகதியிலும் சிரமந்தரும் நீரினிலும்
தன்னலங் கருதாமல் தனக்கென்று பாராமல்
ஊரார் பசியாற உலகமே அமைதிபெற 
உழைக்கின்ற உழவனுக்கு உயர்வாழ்வு கிடைத்திட்டால்
அதுவன்றி இனிய நாள் அகிலத்தில் வேறுண்டோ?!

அதிகாலை பால்காரர் அடுத்துவரும் பேப்பர்காரர்
மளிகைக் கடைப்பையன் மலர்போடும் பூக்காரப்பெண்
இதழில் புன்னகையை எழிலாக்கும் எதிர்வீட்டுக்காரர்
பாசமழை பொழியும் பாங்கான பக்கத்துவீட்டுக்காரர்
இவர்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் இன்பமுடன் இணைந்திருந்தால்
அதுவன்றோ இனியநாள்! அகமகிழும் பெரியநாள்!

-ரெ.ஆத்மநாதன், அமெரிக்கா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com