தீபம்
தீபம்

தீபம் வாசகர் கவிதை பகுதி 3

பிள்ளையர்க்குப்   பெற்றோரே   தீபம்;  கல்விப் பயில வைக்கும் ஆசிரியர் தீபம்; 

தீபம் ஒன்று குன்றின் மீது !
திருவென ஒளிரும் சுற்றியும் சுடரது !
இல்லம் ஏற்றும் சுடரும் தீபம் !
இருளைப் போக்கும் பணிகள் சுபம் !
விண்ணில் தீபம் சூரியக் கனலே !
மண்ணில் உயிர் நலம் பேணுந் தணலே !
தெருக்களில் கடைகளில் ஒளிரும் தீபம் !
தரணியில் விழாக்களில் தீப வெள்ளம் !
தீபஒளி தனில் நகர்விழி விருந்து !
தவமாய்ப் பிள்ளைக் கற்றிட மருந்து !
தீப ஒளியிலா உலகினில் தூக்கம் !
தினமும் கதிரவன் மறைவினில் துவக்கம் !
ஆழ்துளைக் கிணற்றினைச் சுற்றியும் தீபம் !
அணைந்  தணைந்து மின்னும் வண்ணம் !
உபாயம் ஒன்றினை உரியவர் செயும் வழி !
அபாயம் இல்லா வாழ்வுக்கு ஒரு வழி !

- இலக்கிய அறிவுமதி

**
பிள்ளையர்க்குப்   பெற்றோரே   தீபம்;  கல்விப்
         பயிலவைக்கும் ஆசிரியர் தீபம்; நாளும்
பள்ளிகளே   கோவில்கள்; கல்வி  தீபம்;
          படிப்பவர்க்கு நூல்களேதாம் தீபம்; என்றும்
வெள்ளைமனங்   கொண்டவர்கள் தொண்டின் தீபம்;
           விருப்புகளும் வெறுப்புகளும்  அற்று வாழும்
கள்ளமனம்  இல்லாத நல்லோர்  நாட்டின்
         கதிரவனாய்   ஒளிர்கின்ற தீப மாவர்!

நாடுநலம் பெறுவதற்கும், நாட்டு மக்கள்
          நலிவின்றி வாழ்வதற்கும், வள்ளல் நெஞ்சால்
வாடுகிற   நிலையினிலும் கருணை யோடு,
          வறியோரும் வளமாக வாழ வேண்டி,
பீடுடனே   மாண்புபோற்றி வாழ்நாள் தோறும்
          பிறருக்காய்த்  தொண்டாற்றித் தனைத்தொ லைத்தும்
மாடுபோன்று பாடுபட்டு  ழைக்கும்  தெய்வ
         மாப்பிறவி யாவருமே வணங்கும் தீபம்!
 
- "கவிக்கடல்", கவிதைக்கோமான், பெங்களூர்.

**
மண் அகலில்
எண்ணெய் நிரப்பி,  
ஊறிய திரியில்
நெருப்பு வைத்துப்பார்-
விளக்கின் வெளிச்சம் வெளியே –
தூய்மை கிண்ணத்தில்
அன்பு நூல்களால்  இணைந்த
வெள்ளைக் கொத்து ஒன்று, 
“மெய்” என்னும் நெய்யில் ஊறட்டும் –
பக்தியால் அதை பற்ற வைத்துப்பார் !
தீபமாய் வெளிச்சம் உள்ளுக்குள் !!

- கவிஞர்.  டாக்டர.  எஸ். பார்த்தசாரதி

**

காலைக் கதிரோன் விளக்கைக் கண்டே
     கடிதே உலகம் விழிக்கிறது !
மாலை இரவு நிலவு விளக்கால்
     மண்ணே மறந்து துயில்கிறது !

கண்ணாம் விளக்கு ஒளியால் உலகம்
     காண அழகாய் இருக்கிறது !
மண்ணில் பசுமை விளக்கின் ஒளியில்
     மகிழ்ந்தே உலகம் மலர்கிறது !

வீட்டின் இருளை மின்விளக் கெல்லாம்
     விலக்கி எரிந்தே ஒளிர்கிறது !
நாட்டில் பாதை விளக்கு களாலே
     நல்ல பகலாய்த் தெரிகிறது !

கோயில் உள்ளே குமிழாய் விளக்கு
     கொஞ்சி அழகாய் எரிகிறது !
கோயில் போல தூங்கா விளக்கு
     கொஞ்சும் அறையில் வழிகிறது !

வீட்டின் இரண்டு மாடம் தன்னில்
     விழியாய் விளக்கு தெரிகிறது !
பாட்டின் கூட்டாய், யாப்பும் அணியும்
     பார்க்கே விளக்காய் விரிகிறது !

கல்வி விளக்கால் கடமை யாவும்
     கனிந்த வெற்றி ஆகிறது !
வல்லார் தம்மின் திறமை விளக்கால்
     வாழ்வு வளமே காண்கிறது !

அன்பு விளக்கால் இந்த உலகம்
     அமைதி கண்டே களிக்கிறது !
அன்பும் அறிவும் விழியாய்க் கொண்டால்
     அனைத்தும் வெற்றி விளைக்கிறது !

- து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி)

**
வீடு தோறும் தீபங்கள்,
வீதி தோறும் வண்ணங்கள்,

மாளிகை தோறும் சொந்தங்கள்,
மாடங்களில் எல்லாம் புன்னகைகள்,

வாழ்வில் ஒளி சேர்க்கும் தீபம், 
பிறர் வாழ்வின் துயர் நீக்கும் தூபம்,

இன்று இட்ட தீபம் எந்நாளும் மிளிர்ந்து,
எந்தன் அக இருள் களைந்து,
குணச்சுடர் ஏற்றி, 
புற ஒளியாய் மிளிரட்டும்!

இந்நற்தீபம் அனைவரிடத்திலும் சுடரட்டும்!

- இனிய தமிழ் செல்வா, ஓமன்

**

இருள்  அகற்ற ஒரு தீபம் போதும் 
பல தீபம் ஏற்றிட பொங்கிடும் ஒளி 
வெள்ளம் ! தீபத்தின் ஒளியில் 
ஒளிரும்  தீபாவளி ! 

அகத்தின் இருள் நீக்கிட தேவை 
ஒரே ஒரு தீபம் ! " நான் " எனது "
என்னும் அகந்தை அழிய ஒரு சிறு 
தீபம் ! உன்னை நீ யார் என்று புரிய 
வைக்கும் ஆன்மிக தீபம் !

அகத்தின் இருள் மறைந்தால் இந்த 
ஜெகமே மிளிரும்  ஒரே ஒரு தீப 
ஒளியால் ! 
அகந்தைப் பிசாசை அழித்து ஒழிக்க 
அகத்தில் ஏற்றுவோம் ஆன்மிக தீபம் முதலில் !
அதுவே உண்மையில் தீபாவளி நம் வாழ்வில் !

- கந்தசாமி நடராஜன் 

**

இரவிருளை விளக்க வரும் கதிரவனின் தீபம்
மனவிருளை விளக்க வரும் ஞானமெனும் தீபம்
அறியாமை நீக்க வரும் கல்வியெனும் தீபம்
ஆசையெனும் கத வடைக்க முக்தியெனும் தீபம்
இழிவு நிலை கடப்பதற்கு ஊக்கமெனும் தீபம்
கனிவு நிலை காண்பதற்கு காதலெனும் தீபம்
மகிழ்ச்சி தனை வரவேற்க வசந்தமெனும் தீபம்
எழுச்சிதனை ஏற்றி வைக்கும் கொள்கையெனும் தீபம்
பொய்மை யிருள் போக்கவரும் உண்மையெனும் தீபம்
ஏழ்மைத் துயர் துடைக்கவொரு ஏற்றமெனும் தீபம்
இசைமழையில் இதயம் கொஞ்ச இராகமெனும் தீபம்
இல்லங்கள் இனிமைபெற மின் னொளியின் தீபம்
பலகோடித் தீபங்கள் இருந்தாலும் என்ன வயிற்றுப்
பசியாற்றும் அருளொன்றே மண்ணில் உயர்வான தீபம்.

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**
அண்ணாமலையில் மகா தீபம்!
அது புண்ணியம் தரும்
மகாதேவனின்
அருட்கடாச்சம்!

தீபம் கொண்டு படிக்கலாம்!
தீபம் கொண்டு ஒரு
உயிரை முடிக்கலாம்!
முன்னது அருமை!
பின்னது சிறுமை!

தீபம் இருளை விலக்கும்
வெளிச்சம்!
தீபம்  மங்களம் தரும் சுபம்!
தீபம் இருட்டில் விழியிருந்தும்;
வழி தெரியாதவர்களின்   "ஒளிகாட்டி" என்ற "வழிகாட்டி"!
 
தீபம் தொட்டால் சுடும்!
தீபம் வேண்டாமென விட்டால்;
அனைத்தும் கெடும்!

சமையலுக்கு உதவும் தீபம்!

சவத்தை( இறந்த உடலை) சாம்பலாக்கிடும் தீபம்!

நம் உயிர் கூட தீபம் தான்!
அது அணையாத வரை
தான்!
நம் ஆட்டம் தான்!

மனதிற்குள் நல்ல தீபங்கள் ஏற்றி!
மன இருளை நீக்கி!
அருள் ஒளிகளை
பாதையாக படைப்போம்!

யாரையும் சுடாத
தீபமாக மாறலாம்!
ஊரையும் உலகையும்
தீயதில் இருந்து காத்திட!
நாமெல்லாம் சகோதரத்துவம் என்ற
" அனையாத தீபத்தை"
நம் மனங்களில் நீங்காமல் ஏற்றுவோம்!

- கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்.

**
தீபங்கள் வீடுதனை ஒளிரச் செய்யும்
-----தீதோட்டி நன்மைகளைப் பெருகச் செய்யும்
தாபங்கள் மனக்கசப்பை நீங்கச் செய்யும்
-----தனம்கொடுத்து வறுமையினை ஓடச் செய்யும்
பாபங்கள் புரிவதினைத் தடுக்கச் செய்யும்
-----பால்போல மனந்தன்னைத் தூய்மை செய்யும்
கோபத்தை விலக்கியன்பைப் பொழியச் செய்யும்
------கொடும்நோய்கள் அண்டாமல் காவல் செய்யும் !
வேப்பெண்ணெய் இலுப்பெண்ணெய் தேங்காய் எண்ணெய்
-----வேண்டியநல் விளக்கெண்ணெய் நெய்யைச் சேர்த்துப்
பாப்புனையும் அகத்திணைகள் ஐந்தைப் போல
-----பக்குவமாய்க் கலந்திட்ட எண்ணெய் தன்னில்
காப்பியங்கள் தமிழ்ப்புகழைப் பேசல் போன்று
-----காலைமாலை தீபங்கள் ஏற்றி வைத்துக்
கூப்பியக்கை மனமுருக இறையை வேண்டிக்
-----கும்பிட்டால் வளமனைத்தும் கொட்டும் வீட்டில் !
அகல்விளக்கு சரவிளக்கு ஆத்ம விளக்கு
-----அய்ந்துமுக விளக்கோடு குத்து விளக்கு
மகத்துவத்தைப் பொழியும்கா மாட்சி விளக்கு
-----மாண்புதனை தருகின்ற பாவை விளக்கை
தகவாக நாமேற்றித் தொழுது வந்தால்
-----தடையாக நிற்குமிருள் விலகல் போன்றே
அகம்தன்னில் அகங்காரம் விலகி யங்கே
-----அருள்கருணை வந்தமரும் ஓங்கும் வீடே !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**
பஞ்சித் திரியதில் எரியும் தீபம் நீ நடக்கும் பாதைக்கு வெளிச்சம் தரும்
நெஞ்சில் எரியும் கருணை தீபமுன்
வாழும் வாழ்வுக்கு வெளிச்சம் தரும்

கஞ்சிக்காக எரிந்து பசியாற்றும் தீபமுன்
பசித்தீர்க்கும் நித்திரைக்கு முத்திரை
வஞ்சகம் எனும் தீபம் எரிந்து நாசமாகும்
மோசமான நிலமையை நிலுவையில்

நிறுத்தியதனில் கோபம் கொள்ளவும்
தெரியும்; அனுதாபம் காட்டவும் தெரியும்
லாபம் ஈட்டித்தர வழி காட்டித்தரவல்லது சாபமிடாது தூபங்காட்டும் ரூபமானது

நாதீபம் தீவில்தீபம் மேகதீபம் ஆகாய
தீபம் கற்ப்பூரதீபம் சத்தியதீபம் சாத்திய
தீபம் கார்த்திகைதீபம் அணையாதீபம் ஆயிரம் தீபமென எரியும் நம்நடுவிலே

- வே. சகாய மேரி

**
ஓலைச்சுவடிகளில் பஞ்சமுக ‘ தீப விளக்கு” என்று பார்க்கின்றோம்
  நீர்,நிலம்,காற்று,ஆகாயம், நெருப்பென்று குறித்துள்ளார் அவற்றை
ஏழைக்குடிசையில் கூட இயல்பாய் தீபம் ஏற்றிவைப்பார் அந்நாளில்
  தீபாவளி  அடுத்துவரும் கார்த்திகையில் தமிழகத்தில் நாட்டிலெங்கும்
வரலாற்று புகழ்மிக்க குத்துவிளக்கு வடிவமைத்து தருகிறது நாச்சியார்கோவில்
  உலோகத்தில் வடித்தெடுக்கும் உன்னத கலை குத்துவிளக்கு செய்யும் கலை
வரலாற்று சிறப்புமிக்க குத்துவிளக்கை  விழாக்களின் ,பிரபல நிகழ்ச்சிகளின் 
   துவக்கத்தில் ஏற்றி வைப்பது மரபாக உள்ளது இப்போதும்
அகல் விளக்கு,காமாட்சி விலக்கு,பாவைவிளக்கு, ஆளுயர விளக்கு
   ஆனை மீது ஏறிவரும் திருவிளக்கு என்று அழகழகாய் விளங்குமிது
வீட்டில் ஏற்றும் விளக்கு இவை , மலையின் மேலேற்றும்  விளக்கு மகத்தானவை
   அண்ணாமலையாரே திருவிளக்காய் காட்சி தருகிறார் திருவண்ணாமலையில்
குன்றுகள் இருக்குமிடங்ககளில் குடியிருப்பார் குமரனென்பார் அங்ககெல்லாம்   
  கோலோச்சும் விளக்குகள் குடியிருக்கும் அங்ககெல்லாம் மகழ்சிபொங்கும்
ஆதியிலே மனிதன் நெருப்பை கண்டு பயந்தான் அதை வணங்கினான்
 நெருப்பை ஒரு கட்டுக்குள் கொண்டுவர எண்ணினான் அது குத்துவிளக்கானது

- கவிஞர் அரங்க..கோவிந்தராஜன் 

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com