தீபம் வாசகர் கவிதை பகுதி 2

ஞாயிறும் திங்களும் ஞாலத்தின் ஒளிதீபங்கள் ! 
தீபம்
தீபம்

ஞாயிறும் திங்களும் 
ஞாலத்தின் ஒளிதீபங்கள் !
ஞானிகளின் அறிவொளியில்
ஞானமது சுடர் விடும்.!

அண்ணாமலை மகாதீபம்
அகிலத்தின் இருள் நீக்கும் !
அருட்பெருஞ்ஜோதி தரிசனம்
அக இருள் போக்கும் !

திருக்கார்த்திகை தீபங்கள்
திருவருள்   தந்திடும் !
தீபாவளி வண்ண தீபங்கள்
தீமைகளை விலக்கிடும்!

திக்கெட்டும் ஒளி வீசும்
திருமகள் வாசம் செய்யும்
தீபங்கள் பல   விதம் !
தீவினை அகற்றுவதே அதன்
வேதம் !
இயற்கையோடு இணைந்து 
ஏற்றுக தீபம் ....
இறைவனை .  வணங்கி
போற்றுக தீபம்......

- ஜெயா வெங்கட்

**

தன்னை உருக்கி
இருளைப் போக்கும்
வெண்பனிக் காலத்தில்
மின்மினியாய் ஜொலிக்கும்
இறைவன் வகுத்த வஞ்சனை உலகில்
பாதி பகல் இருள் சூழ்ந்த நாட்டில்
மனிதன் சித்தத்தால் உருவான ஒளியில்
உடலும் உள்ளமும் உற்சாகம் பெற்றிடும்
உயர்ந்தவன் வீட்டில் அடிக்கொரு தீபம்
விடியலை வேண்டி நாடே எரிந்தபோது
விடுதலை வேண்டி வீட்டுக்கொரு தீபம்
கார்த்திகை மாதத்து கனக்கும் பொழுதுகளில்
தீபமாய் ஒளிர்கிறது நம் தியாகிகள் வீரம்
மங்காது மங்காது தீபச் சுடர்கள்
நீங்காது நீங்காது தீப அலைகள்

- யோகராணி கணேசன், நோர்வே

**
தீக்கு கூட
வண்ண, வண்ண
உருவங்களாய்  தோன்றுகின்றன
தீபமாக    நீ
எரியும் போதும்.,

ஒளிரும் பொற்காசுகள்
அவள்  இருகைகளில்
ஓ..அது  தான்
கார்த்திக்கை தீபமா?...

  தன்னை இழந்தும் - தன் 
  குடும்பத்தை காக்கின்ற தந்தை
  போல்  - எண்ணெய் இழந்தும்
  ஒளியை காக்கின்ற  தீபத்தில்
  உள்ள வெண்ணிற தீரியே..,

கோடி இருள்கள்
உலகையே  மறைக்கிறது,
கோபுரத்தில் நீ
இருக்கும்  முன்..,

இரவில் மட்டும்
நீ   அதிகம்
தோன்றுகிறாய்.., - இருளை
விரட்டவா இல்லை ?
மகிழ்ச்சியை பெருக்க வா?.

- கவிஞர். மைக்கேல் ,மதுரை.

**

தீபம்
வான்வெளி தீபாவளியைக்
கொண்டாட நிலாப்பெண்
ஏற்றி வைத்த ஒளிவிளக்கு
உடுதீபங்களின்
ஒளியில்
மண்மாதாமழலைசுஜித்
மொழிகாணதீபங்கள்
ஏற்றி காத்திருக்கிறாள்

- நிலா

**
தீபமாய் நெஞ்சில் சிறப்பான குறிக்கோளை
என்றைக்கும் குறையாமல் எரிய விடுபவர்கள்
வாழ்வில்   முன்னேறி    வளங்கள்பல   பெற்று
ஊர்மெச்ச வாழ்ந்திடுவர்!உளத்துள் உயர்ந்திடுவர்!
ஏற்றிய  தீபமேந்தி  எழிலாய்   நீ கார்த்திகையன்று
என்றைக்கோ வந்தது இன்றுமென் மனதுள் தீபமாய்
ஒளிர்வதை நீயுமன்பே உணர்வாயா முழுவதுமாய்
அதில்தானே வாழ்கின்றேன்!அகத்தில் மகிழ்கின்றேன்!
ஆலயங்கள் இருளில் அடைகாத்து இருந்தபோது
தீபமேற்றி இருளைத்  திகைப்பில் துரத்திடவே
பழக்கம் கொண்டு வந்து பழக்கிட்டார் தீபத்தை!
இன்றைக்கும் தொடர்வதுதான் எதற்கென்று புரியவில்லை!
இதயதீபத்தில்  என்றைக்கும் இருக்குது உயிர்வாசம்
தீபஒளி நீயன்றோ! சிரிக்கும் உன் முகமன்றோ?!
பாசமும் உனதன்றோ!பரிதவிப்பும் எனதன்றோ!
மலைமீது தீபமாய் மனதெங்கும் உனதுருவன்றோ?!
ஆலயதீபம் அமைதிக்கு நல் வித்திட்டு
ஊரெங்கும் உற்சாகம் உணர்வுடனே பெருக
என்றைக்கும் நிம்மதியை எல்லோர் மனதினிலும்
தீபமாய் எரியவிடும்!திகட்டா இன்பந்தரும்!

-ரெ.ஆத்மநாதன், ஃபால்ஸ் சர்ச்,வெர்ஜீனியா,அமெரிக்கா

**
அன்பெனும் விளக்கினை ஏற்றிடலாம்"
   அனைவரின் அகத்திலும் ஒளிர்ந்திடலாம் !
அன்பினால் உலகினை ஆண்டிடலாம்
   அறிவினால் உயர்வினை அடைந்திடலாம் !
அன்பெனும் விதையினை விதைத்திடலாம்
   அமுதெனும் பழத்தினைப் பெற்றிடலாம் !
அன்பினால் இயேசு காந்தியைப்போல்
   அனைத்துல கெங்கிலும் வாழ்ந்திடலாம் !

அறிவெனும் விளக்கினை ஏற்றிடலாம்"
   அகந்தையை அடியுடன் அகற்றிடலாம் !
நெறிவழி நித்தமும் நடந்திடலாம்
   நிலைநிழல் பரவிட நிலைத்திடலாம் !
பொறியென இயங்கியே பூத்திடலாம்
   பொன்னென மணியெனப் பொலிந்திடலாம் !
அறிவியல் கணிதத்தில் அறிஞரைப்போல்
   அனைத்தவர் உளத்திலும் வாழ்ந்திடலாம் !

அரசியல் விளக்கினை ஏற்றிடலாம்"
   அனைவரும் உயர்ந்திடச் செய்திடலாம் !
தரமுடன் உரமுடன் தாங்கிடலாம்
   தன்னிகர் இன்றியே தழைத்திடலாம் !
பரந்தயிவ் வுலகினில் பரவிடலாம்
   பாமரர் உளமெலாம் பற்றிடலாம் !
அரசியல் காம ராசரைப்போல்
   அருமையர் கக்கன்போல் வாழ்ந்திடலாம் !

பொதுநெறி விளக்கினை ஏற்றிடலாம்"
   புவியெலாம் போற்றிடத் திகழ்ந்திடலாம் !
எதுசரி என்பதை இயம்பிடலாம்
   எதுதவறு என்பதை உணர்த்திடலாம் !
புதுமலர் போலவே மணந்திடலாம்
   புலமையர் வணங்கவும் பார்த்திடலாம் !
இதுவழி எனுமுயர் வள்ளலார்போல்
   என்றுமே எவருளும் வாழ்ந்திடலாம் !

-ஆர்க்காடு. ஆதவன்.

**
தீராத மடமை தீர்க்கும்
வழி வேண்டுமா!
காக்கும் தெய்வங்களின்
கனிவைப்பெற வேண்டுமா!
உலகத்தின் தொடக்கம்
ஒளி என்ற உண்மை வேண்டுமா!
ஓயாத சுழற்சியில் புவியின்
இருட்டு மறைய வேண்டுமா!
அஞ்ஞானங் கொண்டு
அலைவோர்கள் திருந்த வேண்டுமா!
மெய்ஞானச் சுடர் நம்
மனதில் புக வேண்டுமா!
தியானத்தின் முடிவில் வரும்
ஒளிச் சக்கரம் சுழல வேண்டுமா!
ஆத்மாவின் உருவமும் பரமாத்மாவின்
திருவும் ஒளியல்லவா
தீபத்தின் சுடராக, ஒளியாக
விளங்கும் மாதேவனே
உன் சக்தியின் மகிமை
தீபம் அல்லவோ;
அதை மனதுள் தீண்டுவதும் சுகமல்லவோ......

-  சுழிகை ப.வீரக்குமார்

**

மதில் சுவர்களில்
கிடக்கும் குப்பை மேடுகளில்
மாடங்களில் வாசல்களில்
என
விஷேசங்களில்
தீபமேற்றிப் பழக்கப்பட்ட நாம்
பிரகாசத்தை ஏற்றி வைக்காமல்
இருளில் வைத்துக் கொள்கிறோம்
மனங்களை...

சிவகாசிக்கு
வெளிச்சத்தைத் தேடி
பள்ளிக்கூடம் துறந்து வாழ்க்கையைச்
சிதறடிக்கும் தீப்பொறிகளை நோக்கி
பசியோடு போகிறார்கள் சிறார்கள்...

வெடித்து
வெளியை மாசு படுத்தும்
புகைமூட்ட நெடிகளுக்குள் குமைகின்றன
ஏழ்மைகள்...

வெடித்தும் எரித்தும்
வண்ணங்கள் மின்ன புத்தாடைகளுடன்
கொண்டாடுகின்றனர் மாடி விட்டு
மனங்கள்...

நடைபாதைகளிலும்
சூழ்ந்த சுவர்களின் இருளில்
தீபமேற்றி
குமைகிறது கவனிப்பார் இல்லா
பாமரர் வாழ்க்கை....

- அமிர்தம்நிலா/ நத்தமேடு

**

மலையுச்சி வரை
வெளிச்சத்தை விரித்து வைத்து
பள்ளத்தாக்கின் அடிவார இருளில்
நசுங்கி வாழ்ந்தாலும் ஒளி வழங்கும்
வள்ளல் மனம் கொண்டது
தீபம்...

உழைப்பில் வழியும் வியர்வையால்
தாகத்தையும் பசியையும் போக்கி
வறுமையில் வாடுதல் போல
பிறரை
பிரகாசிக்கச் செய்து அடிபணியும்
தொழிலாளியும் தீபமும்
ஒன்று...

அஞ்ஞானத்தையும் அறியாமையும்
மண்டிக்கிடக்கும் பாதைக்கு
பகுத்தறிவின் வெளிச்சம் காட்டுவது தான்
தீபத்தின் அறிவு...

தீபத்தை
கருவறையில் மறைத்து வைத்து
வெளியெங்கும் பரப்புகிறார்கள்
இருட்டை...

எல்லாரையும்
பேதப்படுத்தாமல் வெளிச்சப்படுத்தி
கொண்டாடும் தீபங்களையும்
களவாடுதல் போல் தான்;

இருக்கவும் உடுக்கவும் உண்ணவும்
பேதமில்லாமல்
படைப்பவனையும் அடிமைப்படுத்திச்
சுரண்டுகிறார்கள்...

காலங்கள் மாறும்
கடமைகள் பொதுவாகும்
அப்போது
ஒளியும் உழைப்பும் ஒன்றாகும்...
 
- கவிஞர் கா.அமீர்ஜான்

**
குழியில் விழுந்த சிறு குழந்தைக்கான தீபமிது
குழியில்விழும் சோகங்கள் தீரவேண்டி ஏற்றும் தீபமிது
விழுந்தவுடன் காக்க தவறியவர்களை கண்டிக்கும் தீபமிது
வளர்ப்பின் அலட்சியங்களை சுட்டிக்காட்ட வந்த தீபமிது

ஏட்டுச் சுரக்காயான விஞ்ஞானத்தை கண்டிக்கும் தீபமிது
எத்தனைமுறை பட்டாலும் திருந்தாதவரை கண்டிக்கும் தீபமிது
ஏங்கிய உள்ளங்களின் பரிதவிப்பில் குமுறும் தீபமிது
எங்கும் காக்கும்வசதி வேண்டுமென்ற கோாிக்கை தீபமிது

மெத்தனப்போக்கை மொத்தமாய் கண்டிக்க வந்த தீபமிது
ஔியில்லா இருள்சூழ்ந்த தீபாவ'(ளி)லி கண்ட  தீபமிது
விழியற்ற நிலையில் ஔியேற்றி வாழும் தீபமிது
வழியற்ற நிலையில் மாற்றம்வேண்டி மன்றாடும் தீபமிது

இது வலியோடு கண்ணீரால் ஏற்றப்பட்ட தீபமிது
இது பெருங்காற்றெனும் துயரில் சிக்கிய தீபமிது
இது இழப்புகள் வராதிருக்க - தவம்கிடக்கும் தீபமிது
இது ஔிரும் இந்தியாவில் மழுங்கிய தீபமிது

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

தீப ஒளியே!!
ஒளியின் சுடரே!!
சுடரின் நிலையே!!
நிலையில் வாழும் சிவனே!!
அவனில் வாழும் உயிரே!!
தீய சக்தியை அழிக்கும்
தீபமே! தீபத்தின் ஒளியாய்
விளங்கும் எங்கள் சக்தியே!!
தீயின் சுவாலையில்
அனைவரும் சமமே! - 
அதுவே இயற்கையின் முறையே!!
"சாபம்" ஒன்று நீங்கிட
"தீபமொன்று" போதுமே!!
"கோபம்" வந்தபோதிலும் 
"பொறுமை" ஒன்று ஆளுதே!!
மனிதநேயம் காத்திட
மனிதன் ஒன்று இல்லையே!!
மனிதம் ஒன்று காப்பது
அன்பு மட்டும் போதுமே!!- மனிதனே
இன்று முதல் தீவினையை சுட்டெரிக்கும் தீபமாய் இரு!!
ஜாெலிக்கட்டும் வீடு தாேறும் தீபம்!!
மலரட்டும் வீடுதோறும் அன்பு!!
செழிக்கட்டும் வேளாண்மை!!
பரவட்டும் பைந்தமிழோசை
பார்முழுதும் - வாழ்க  தமிழ்!!
வளர்க மனித நேயம்!!

- மு.செந்தில்குமார், ஓமன்

**
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com