Enable Javscript for better performance
deepam poem | தீபம் வாசகர் கவிதை பகுதி 1- Dinamani

சுடச்சுட

  
  yamadeepam1

  தீபம்

   

  எண்சீர் ஆசிரிய விருத்தம்

  ஆவளியாய் அகல்விளக்கில் அழகின் தீபம்
  ..........அகயிருளை நீக்கியபின் அகற்றும் சாபம்..!
  பாவத்தின் சம்பளம்தான் பாரில் துன்பம்
  ..........பண்டிகையின் மகத்துவத்தால் பலனாய் மாறும்.!
  ஆவலாகக் கொண்டாடும் அனைத்தும் இன்பம்
  ..........ஆன்மீகச் சிந்தனையும் அதனுள் பொங்கும் ..!
  யாவர்க்கும் நலமாக ஏற்றும் தீபம்
  ..........ஏழ்பிறப்பும் நன்மையாக எங்கும் மேவும்..!
  .
  தீபத்தின் மகிமையாலே தீரும் லோபம்
  ..........தினமுமதை வழிபட்டால் தருமே லாபம்..
  கோபதாப எண்ணமுமே குறுகி வாடும்
  ..........குத்துவிளக் கேற்றிவைத்தால் குறைகள் ஓடும்..!
  ஞாபகங்கள் பலவண்ணம் நாளும் சொல்ல
  ..........ஞாலத்தில் பண்டிகையால் நலமே உண்டு..!
  பாவம்செய் நரகனாலே பட்ட துன்பம்
  ..........பகவானால் அகன்றதாலே பெற்ற தின்பம்..!
  .
  ஒளிவெள்ளம் காண்பதாலே உண்டாம் மாற்றம்
  .......... ஒருவிதமாய்ப் புத்துணர்ச்சி உணரும் தோற்றம்..!
  தெளிவான சிந்தனையைத் தருமே தீபம்
  ..........தீயவெண்ணம் அழித்தபின்னே தீர்க்கும் தாபம்..!
  களிப்பளிக்கும் பண்டிகையாய்க் காலம் போற்றும்
  .......... கதையாக நல்லதையே கண்டு கூறும்..!
  ஒளிவழியாய் வந்துபிறந் தோங்கும் அன்பு
  ..........உலகனைத்தும் அறிதற்கே ஓர்நாள் நோன்பு..!

  - கவிஞர் பெருவை பார்த்தசாரதி

  **

  இருளை அகற்றும் பொன்னொளிதீபம்
  ....இறைவனுக்கு விளக்கேற்றும் தீபம்
  அருளின் வழிகாட்டும் ஆலயதீபம்
  ....அமைதியின் சுடராய்மாறிய தீபம்
  எண்ணெய் உள்ளவரை ஒளிகொடுக்கும்
  ....எரிந்து விளக்குக்கு விழிகொடுக்கும்
  எண்ணம்போல் உயரபாடம் கொடுக்கும்
  ....எங்கும் ஞானத்தின் மொழிகொடுக்கும்
  தீபங்களின் ஆவளி தீபாவளியாகும்
  ....தீமைகள் எரித்திடும் அன்புஒளியாகும்
  தீபங்களின் ஒளியால் வாழ்வுமலரும்
  ....தீவினைகள் நம்மைவிட்டு விலகும்
  ஒளிவடிவில் இறைவன் இருக்கிறான்
  ....ஒளியால் அகஇருளை விலக்குகிறான்
  ஒளியுண்டாக தீபத்தை நாம்ஏற்றுவோம்
  ....ஒளிமயமாய் வாழ்வை மாற்றுவோம்

  - கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

  **

  சின்ன சின்ன தீபம்
  மஞ்சள் நிறம் தீபம்
  வெளிச்சத்தைக் காட்டும்
  இருளை அழித்துவிடும்
  எல்லா உணர்ச்சிகளை காட்டும்
  கையில் வடிவாய் அமையும்
  இருளான நேரத்தில்
  சூரிய கதிரின் சின்ன துண்டை காட்டும்
  தீபம்

  - கனிசா கணேசன் (வயது 12)

  **
  தருமமது வென்றநாள் தரணியோர் அதைநினைந்து
  ஒருமுகமாய் மகிழ்கின்ற உன்னதநாள்! -- அருமைமிகு
  இன்னாளில் ஒளியேற்றி இவ்வுலகே மகிழ்வதுபோல்
  பொன்னாளிதில் ஒளியேற்றிப் போற்று!

  கனிவுடனும் அன்புடனும் காண்கின்ற அனைவருக்கும்
  இனிப்பளித்து மகிழ்கின்ற இனியநாள்! -- புனிதனவன் 
  கண்ணபிரான் உலகவரைக் காத்திட்ட இன்னாள்தனை
  பொன்னாளென ஒளிகூட்டிப் போற்று!

  தீபாவளித் திருநாளில் தீபங்களை ஏற்றித்தொழ
  பாபங்கள் விலகிடவே பார்த்திடலாம்! --ஆபத்தும்
  விலகிட்ட இன்னாள்தனை விவேகமுடன் கொண்டாட 
  நலம்பெருகக் கண்டிடுவோம் நாம்!

  தீயதுவே உயிர்கட்கு ஆதாரம் -- உலகில்
        தீயில்லை என்றாக உயிர்களில்லை!
  ஓய்ந்திடாமல் கோள்கள்பல சுற்றுதற்கும் -- இங்கு
        உயிரினங்கள் பலகோடி வாழ்வதற்கும்
  காய்கின்ற ஆதவனின் கிரணங்களே -- தான்
        காரணமாம் என்பதனை யார்மறுப்பார்?
  ஓய்வின்றி ஆதவன் தனையெறித்தே -- காக்கும்
        உன்னதமும் இறைவனவன் கருணையதே!

  - அழகூர். அருண். ஞானசேகரன்.

  **

  எந்த
  இருட்டுக்குள்ளும்
  தீபம் ஏற்றி வைப்பவர்களையே
  திசைகள் வரவேற்கும்
  ஏற்றி வைப்பதோடு
  எதுவும் முடிந்துவிடுவதில்லை
  திரியை
  உயர்த்திக்கொண்டே இரு
  நெய்யிட்டவாறு
  நீ இரு
  காற்று
  ஊதி அணைக்கலாம்
  கவசம் அமைத்துக்
  காவல் காத்திரு
  இருளை
  ஓடி ஓடி விரட்டுகிறது
  ஒற்றை மின்மினிப் பூச்சி
  கோடி கோடி மின்மினிப் பூச்சிகளின்
  கூட்டம் நீ

  -கோ. மன்றவாணன்
  **

  யாருக்கும் இன்பமளித்து  அழகாக  எரியும் தீபம்!
  எல்லாப் பேருக்கும் ஒளி கொடுக்கும் நல்ல தீபம்!
  தராதரம்  பார்க்காத அழகு தீபம்!
  இன்பம் பொங்க செய்யும்  பளிச்  தீபம்!
  தினமும் ஏற்றினால் நிம்மதி கொடுக்கும் தீபம்!
  நெற்றி வியர்வை நிலத்தில் விழ
  உழைத்த உழைப்பில் கிடைத்த பணத்தில்
  வாங்கிய  புத்தாடை ஜொலிக்க
  இன்பம்  பொங்க  செய்யும் சிவந்த  தீபம்!
  தீப ஒளி எங்கும் வீசக்  கண்டோம்!
  மகிழ்ச்சி பூ  எங்கும்  பூக்க கண்டோம்!
  பற்பல அகல் விளக்குகள்  புதிதாக எரிந்து
  வீட்டையும் மனதையும்  நிறைய  வைத்த
  அழகு தீபம்  கண்களில்  சந்தோசம்  பூக்க  கண்டோம்!
  இதனால்..............
  தங்கிய  சோகம்  போகக் கண்டோம்!
  தீபங்கள்  எரிவதால் தீமைகள் நீங்கி
  கோபங்கள் ஓடி  நன்மை பூக்க  கண்டோம்!
  பொங்கியது  மகிழ்ச்சி........ இந்த மூலம்
  தங்குவது  இன்பம்!................
  தீபம் ஏற்படுவோம் அதை போற்றி  துதி
  செய்து  அமைதியாக வாழ்வோம்

  - உஷாமுத்துராமன்,  திருநகர்
  **


  **
  அறியாமை அழகுருவில் அத்தனையும் அடித்துத்தள்ளும்,
  தீண்டாமை திருடன்போல ஊரெல்லாம் சுற்றித்திரியும்,
  கேள்வி கேட்கும் உரிமையெல்லாம் திகைத்துப்போய் திக்கிநிற்கும்,
  பொதுநலத்தின் குழந்தையை போக்கத்தவனாய் உலகம் நோக்கும்,
  அறிவிலிகள் ஆட்சிகளில் ஆந்தைக்கூட்டம் ஆட்டம்போடும்,
  ஆட்டுமந்தைக் கூட்டத்தின் ஓலம் மட்டும் காதைக் கிழிக்கும்,
  ஒளியெல்லாம் வற்றிப்போய் இருளெங்கும் சூழ்ந்து கொள்ளும்,
  விளக்கேற்ற விரும்புவபன் வீடெல்லாம் பற்றி எரியும்,
  இந்தநிலை உலகத்தில் என்றேனும் மாறாதோ!
  உறங்குபவன் உணர்ச்சியெல்லாம் விழித்துக்கொண்டு கேளாதோ!
  மந்தபுத்தி மனசுக்காரன் மண்டியிட்டு மடிந்துபோக..
  மாற்றதின் நற்பண்பை ஊருலகம் காணவேண்டி..
  பேச்சின்போதும் பேதத்தின் பெயர் சொல்ல மறந்துபோக..
  பேரின்பம் வாயில் திறக்க சிற்றின்பம் துறந்துபோக..
  கருமைவானம் வெளுத்துப் போக..
  காரிருளைக் கிழித்துக் கொல்ல..
  எழுச்சியென்னும் எண்ணெய் ஊற்றி..
  மனதைக் கொஞ்சம் திரித்து விட்டு..
  அறிவுச் சுடர் பற்றி எரியும் 
  உணர்ச்சித் தீபம் ஏற்றி வைத்து 
  உச்சிக்குளிர நொடியேனும் ஆடிடுவோம்!

  - சிவசங்கரி , சிவகங்கை

  **
  (குழந்தை இறப்புக்கு பிறகு சிறு மாறுதல்களுடன் - குழந்தைக்கான தீபம் )

  குழியில் விழுந்த சிறு குழந்தைக்கான தீபமிது
  குழியில்விழும் சோகங்கள் தீரவேண்டி ஏற்றும் தீபமிது
  விழுந்தவுடன் காக்க தவறியவர்களை கண்டிக்கும் தீபமிது
  வளர்ப்பின் அலட்சியங்களை சுட்டிக்காட்ட வந்த தீபமிது

  ஏட்டுச் சுரக்காயான விஞ்ஞானத்தை கண்டிக்கும் தீபமிது
  எத்தனைமுறை பட்டாலும் திருந்தாதவரை கண்டிக்கும் தீபமிது
  ஏங்கிய உள்ளங்களின் பரிதவிப்பில் குமுறும் தீபமிது
  எங்கும் காக்கும்வசதி வேண்டுமென்ற கோாிக்கை தீபமிது

  மெத்தனப்போக்கை மொத்தமாய் கண்டிக்க வந்த தீபமிது
  ஔியில்லா இருள்சூழ்ந்த தீபாவ'(ளி)லி கண்ட  தீபமிது
  விழியற்ற நிலையில் ஔியேற்றி வாழும் தீபமிது
  வழியற்ற நிலையில் மாற்றம்வேண்டி மன்றாடும் தீபமிது

  இது வலியோடு கண்ணீரால் ஏற்றப்பட்ட தீபமிது
  இது பெருங்காற்றெனும் துயரில் சிக்கிய தீபமிது
  இது இழப்புகள் வராதிருக்க - தவம்கிடக்கும் தீபமிது
  இது ஔிரும் இந்தியாவில் மழுங்கிய தீபமிது

  இது வரலாற்றில் என்றும் வாழும் தீபம்
  இது வருமுன் காப்போம் என்றுணர்த்திய தீபம்
  இது ஈடு இனணயற்ற தெய்வீக தீபம்
  இது எல்லோா் நெஞ்சத்திலும்வாழும் மழலை தீபம்

  -கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

  **

  தீபம்ஏற் றும்திரு விழாவாகும் தீபாவளி அங்கே வடமாநிலத்தில்
  வண்ண திருவிழா தீபாவளி அதனால் தீபம் தலைப்பாய் ஆனது அறிவேன்
  தீமையை அழித்து நல்லதே செய்ய திருவிழா காண்போம் அது தீபாவளி
  நரகாசுரனை காண்போம் கயமை,வண்மம் தீமை செய்யும் செயல்கள் தனில்  
  அனைவரிடத்திலும் அன்பினை செலுத்துவோம் முடிந்தால் உதவுவோம்
  அதுவே தீபாவளி நமக்கு அளிக்கும் அறிவுரை ஆகும் தீபாவளி வாழ்த்துக்கள்
  தீபம் என்றால் விளக்கேயாகும் தினுசு தினுசாய் காணலாம் ரசிக்கலாம்
  பஞ்சமுகம் உள்ள குத்துவிளக்காய் பரிமளக்கும் விளக்குகள் இங்கே
  அகல்விளக்கு,காமாட்சி விளக்கு, வாழைப் பூவிளக்கு, பாவை விளக்கு, யானைவிளக்கு 
  இதனை விடுத்து மின்னிணைப்புள்ள சரவிளக்குகள் அலங்காரம் அதிகம்

  - கவிஞர் . அணிபுதுவை கோவேந்தேன்

  **
  நல்ல விளக்கே ஒளியூட்டும் நனிதே பலவாம் விளக்கேற்றும் !
  நல்லோர் வாழ வழிகாட்டும் நலிந்தோர் உயரத் தெம்பூட்டும் !
  பொல்லார் தமக்குப் பகையாகும் புரிந்தார் தமக்கே நட்பாகும் !
  செல்லார் தமையும் சீராக்கும் தெளிவும் சிறப்பும் மிகவாக்கும் !

  காலைக் கதிரும் விளக்காகும் கவினார் நிலவும் விளக்காகும் !
  மாலை மங்க மின்விளக்கு மண்டும் இரவைப் பகலாக்கும் !
  ஆலை போல்நாம் இயங்கிடவே அடடா உடலும் விளக்காகும் !
  தோலை அணிந்தோன் மலையினிலே சுடரும் விளக்கு கார்த்திகையாம் !

  விளக்க மிலாமல் எம்மதமும் விளங்க உண்டோ உலகத்தில் ?
  விளக்காம் விழிகள் இல்லாமல் வேண்டும் காட்சி ஏதுலகில் ?
  விளக்கம் கூட விளக்காகும் விளம்ப இணையாய் ஏதுலகில் ?
  விளக்காம் கல்வி இல்லாக்கால் விழியும் குருடாம் வியனுலகில் !

  விளக்கில் லாத இருட்டினையே விரும்பி எவரும் ஏற்பாரோ ?
  விளக்கில் லாத வீட்டினிலே விரும்பி எவரும் வாழ்வாரோ ?
  விளக்கில் லாமல் தொழிற்சாலை வேண்டும் படியாய் இயங்கிடுமோ ?
  விளக்கில் லாத காரிருளில் விழிகள் இருந்தும் வீணன்றோ ?

  விளக்கே விளக்கே நீஎரிவாய் வேண்டும் ஒளியைத் தான்தருவாய் !
  விளக்கே அடுப்பை ஏற்றிடுவாய் வேண்டும் உணவை சமைத்திடுவாய் !
  விளக்கே துயரை எரித்திடுவாய் வேண்டும் இன்பம் அளித்திடுவாய் !
  விளக்கே விளக்கே உன்னைப்போல் விரும்பும் ஒளியை எனக்களிப்பாய் !

  -படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி,ஆர்க்காடு.

  TAGS
  deepam
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai