பரபரப்பான ஆட்டத்தில் சென்னை வெற்றி
சென்னை, ஏப்.12: ஐபிஎல் போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ûஸ வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெட்


சென்னை, ஏப்.12: ஐபிஎல் போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ûஸ வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இமாலய ஸ்கோரை இலக்காகக் கொண்டு விளையாடிய சென்னை ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது.
அகர்வால் அதிரடி: சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் டேனியல் வெட்டோரி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மயங்க் அகர்வால்-கிறிஸ் கெயில் ஜோடி பெங்களூரின் இன்னிங்ûஸ தொடங்கியது. கெயில் நிதானமாக ஆடினாலும், அகர்வால் ஆரம்பம் முதலே விளாசலில் இறங்கினார்.
போலிங்கர் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த அகர்வால், அஸ்வின் வீசிய 5-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாச 5 ஓவர்களின் முடிவில் 51 ரன்களை எட்டியது பெங்களூர். இதையடுத்து 6-வது ஓவரை வீச அல்பி மோர்கலை அழைத்தார் தோனி. அதற்குப் பலனும் கிடைத்தது. அந்த ஓவரின் 2-வது பந்தில் பிராவோவிடம் கேட்ச் ஆனார் அகர்வால். 26 பந்துகளைச் சந்தித்த அகர்வால் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கெயிலுடன் இணைந்தார் விராட் கோலி.
ஆட்டத்தின் 9-வது ஓவரை ரெய்னா வீசினார். அதுவரை நிதானமாக ஆடிய கெயில், அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் மீண்டும் விறுவிறுப்பை ஏற்படுத்தினார். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் அடிக்கப்பட்டன.
கெயில் அரைசதம்: தொடர்ந்து சிறப்பாக ஆடிய கெயில், ஜகாதி வீசிய 14-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விரட்டி, 27 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் அரைசதம் கண்டார். இது அவருடைய 6-வது அரைசதம். மறுமுனையில் கோலி, பந்துகளை வீணடிக்காமல் ரன் சேர்த்துக் கொண்டிருந்தார். இதனால் 15.1 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது பெங்களூர்.
அந்த அணி 162 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. கெயில் 68 ரன்களில் இருந்தபோது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் அது எல்லைக்கோட்டில் நின்ற பிராவோவின் கையில் தஞ்சம் புகுந்தது. 35 பந்துகளைச் சந்தித்த கெயில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த டிவில்லியர்ஸ் கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்தார். ஆனால் அவரின் கணிப்புத் தவறாகவே அது கேட்ச் ஆனது. கடந்த ஆட்டத்தில் அரைசதம் கண்ட அவர், இந்த ஆட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மோர்கல் வீசிய 18-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி அரைசதம் கண்டார் கோலி, கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 46 பந்துகளைச் சந்தித்த அவர், 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். இது அவருடைய 7-வது அரைசதம். போலிங்கர் வீசிய கடைசி ஓவரில் கோலி, புஜாரா 0, வெட்டோரி 1, பத்கல் 0 என அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தாலும், கடைசிப் பந்தில் வினய் குமார் சிக்ஸர் அடிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
சென்னை தரப்பில் போலிங்கர் 3 விக்கெட்டுகளையும், மோர்கல், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உள்ளூர் நாயகன் அஸ்வின் 4 ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கினார். ரெய்னா ஒரே ஓவரில் 21 ரன்கள் கொடுத்தார்.
6 அல்ல 12: பிராவோ வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசினார் கெயில். அவர் அடித்த பந்து மைதானத்தின் மேற்கூரைக்குப் பறந்தது. அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த டாம் மோடி, இந்த சிக்ஸர் 12 ரன்களுக்கு நிகரானது என்று குறிப்பிட்டார்.
பிளெஸ்ஸிஸ் 71: பின்னர் ஆடிய சென்னை அணியில் முரளி விஜய்-டூபிளெஸ்ஸிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. ஆனால் முரளி விஜய் 15 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வழக்கம்போல் சொதப்பினார். முரளி விஜயை அற்புதமாக கேட்ச் செய்து வெளியேற்றினார் முரளீதரன். இதையடுத்து டூ பிளெஸ்ஸிஸýடன் இணைந்தார் ரெய்னா.
கடந்த ஆட்டங்களைப் போலவே இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய டூ பிளெஸ்ஸிஸ், 32 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். முரளீதரன் வீசிய 11-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற ரெய்னா, ராஜு பத்கலிடம் கேட்ச் ஆனார். 14 பந்துகளைச் சந்தித்த ரெய்னா ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார். 12 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.
தோனி 41 ரன்: இதையடுத்து டூ பிளெஸ்ஸிஸýடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் தோனி. இந்த ஜோடி அதிரடியாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வெட்டோரி வீசிய 14-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசிய டூ பிளெஸ்ஸிஸ், முரளீதரன் வீசிய 15-வது ஓவரின் 3-வது பந்தை சிக்ஸருக்கு தூக்க அது கோலியின் கையில் தஞ்சம் புகுந்தது. 46 பந்துகளைச் சந்தித்த டூ பிளெஸ்ஸிஸ் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார்.
திருப்புமுனை ஏற்படுத்திய மோர்கல்: இதையடுத்து பிராவோ களமிறங்கினார். சற்றுவேகமாக ஆடிய தோனி 24 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னையின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்டது.
கோலி ஓவரில் 28 ரன்கள்: கோலி வீசிய 19-வது ஓவரை எதிர்கொண்ட அல்பி மோர்கல், 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 28 ரன்களை விளாசினார். இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பான கடைசி ஓவர்: வினய் குமார் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் அல்பி மோர்கல் வெளியேறினார். அவர் 7 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
3-வது பந்தில் பவுண்டரியை விளாசினார் பிராவோ. அது நோபாலாகவே அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார் பிராவோ. இதனால் கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-வது பந்தில் ரன் கிடைக்கவில்லை. 5-வது பந்தில் பிராவோ ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தில் இரு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்ததால் ரசிகர்கள் இருக்கை நுனிக்கே வந்துவிட்டனர். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார் ஜடேஜா.
இதனால் சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பிராவோ 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும், ஜடேஜா 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். வினய் குமார் 4 ஓவர்களில் 53 ரன்களும், கோலி 2 ஓவர்களில் 36 ரன்களையும் வாரி வழங்கினர். டூ பிளஸ்ஸிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதிகபட்ச ரன்: சென்னை எடுத்த 208 ரன்களே இந்த ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர், இரண்டாவதாக விளையாடிய அணி எடுத்த அதிகபட்ச ரன் ஆகும்.
இன்றைய ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: கொல்கத்தா
நேரம்: இரவு 8.00
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...