கடைசிப் பந்தில் சென்னை வெற்றி
சென்னை, ஏப். 21: ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ûஸ வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.


சென்னை, ஏப். 21: ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ûஸ வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த சென்னை ஆட்டத்தின் கடைசிப் பந்தில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.
3-வது இடம்: இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் சூப்பர் கிங்ஸ் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை பங்கேற்ற 7 ஆட்டங்களில் 4 வெற்றி,
3 தோல்விகளைப் பெற்றுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் திராவிட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். திராவிடும், ரஹானேவும் அந்த அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர். முதல் 3 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். பிராவோ வீசிய 4-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரியை விரட்டி அதிரடியில் இறங்கினார் ரஹானே. அந்த ஓவரின் கடைசிப் பந்தில் திராவிட் சிக்ஸர் அடிக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. ஆனால் இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அஸ்வின் வீசிய 5-வது ஓவரில் ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஓவைஸ் ஷா வந்த வேகத்தில் ஜகாதி வீசிய 8-வது ஓவரில் சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் திராவிட் ஸ்ட்ரெய்ட் திசையில் சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் எல்லையில் நின்ற போலிங்கரின் கையில் தஞ்சம் புகவே திராவிட் 26 ரன்களில் வெளியேறினார். அவர் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். இதைத்தொடர்ந்து மெனரியா களம் கண்டார்.
இந்த ஜோடி நிதானமாக ஆடியதால் 14 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. ஜடேஜா வீசிய 15-வது ஓவரில் ஓவைஸ் ஷா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். மேலும் அந்த ஓவரில் 2 பந்துகள் வைடு ஆனதோடு, பவுண்டரிக்கும் சென்றது. இதனால் அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன.
ஷா 52 ரன்: தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஓவைஸ் ஷா 40 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். 19-வது ஓவரில் மெனரியாவை அற்புதமாகக் கேட்ச் செய்தார் ஜகாதி. 34 பந்துகளைச் சந்தித்த மெனரியா 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஓவைஸ் ஷா ஆட்டமிழக்க 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். ஓவைஸ் ஷா 43 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் குலசேகரா 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டும், அஸ்வின் 4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஜடேஜா 3 ஓவர்களில் 32 ரன்களை வாரி வழங்கினார்.
இந்த ஆட்டத்தில் சென்னை வீரர்களின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. எதிரணி வீரர்களை அதிக ரன் எடுக்கவிடவில்லை.
டூபிளெஸ்ஸிஸ் அதிரடி: 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் பத்ரிநாத் நிதானமாக ஆடியபோதும், டூபிளெஸ்ஸிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். ஸ்டூவர்ட் பின்னி வீசிய 2-வது ஓவரில் 3 பவுண்டரிகளையும், அமித் சிங் வீசிய 5-வது ஓவரில் 2 பவுண்டரிகளையும் டூபிளெஸ்ஸிஸ் விளாச சென்னையின் ஸ்கோர் வேகமாக உயர்ந்ததோடு ஆட்டத்திலும் விறுவிறுப்பு ஏற்பட்டது.
மெனரியா வீசிய 7-வது ஓவரில் டூபிளெஸ்ஸிஸ் சிக்ஸர் அடிக்க 50 ரன்களைக் கடந்தது சூப்பர் கிங்ஸ். ஆனால் அடுத்த ஓவரில் பிராட் ஹாக் பந்துவீச்சில் கோஸ்சுவாமியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார் பத்ரிநாத். கடந்த ஆட்டத்தில் அரைசதம் கண்ட பத்ரிநாத், இந்த ஆட்டத்தில் 22 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து டூபிளெஸ்ஸிஸýடன் இணைந்தார் ரெய்னா. 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது சென்னை.
அரைசதம்: தொடர்ந்து சிறப்பாக ஆடிய டூபிளெஸ்ஸிஸ் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். திரிவேதி வீசிய 15-வது ஓவரின் 5-வது பந்தில் டூபிளெஸ்ஸிஸ் சிக்ஸர் அடிக்க சென்னை 100 ரன்களைக் கடந்தது. 17-வது ஓவரின் முதல் பந்தில் டூபிளெஸ்ஸிஸ் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தோனி களமிறங்கினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ரெய்னா தூக்கி அடித்தார். ஆனால் அது எல்லையில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனது. 24 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார் ரெய்னா. அடுத்து களம் கண்டார் பிராவோ.
பரபரப்பான கடைசி ஓவர்: கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோ, தோனி ஓடியே ரன் சேர்த்ததால் கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மைதானமே அமைதியாக இருந்தது. அந்தப் பந்தை எதிர்கொண்ட தோனி லெக் திசையில் அடிக்க இரண்டு ரன்கள் கிடைத்தது. இதன்மூலம் சென்னை வெற்றி பெற்றது. தோனி 12 பந்துகளில் 15 ரன்களும், பிராவோ 10 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் கெவோன் கூப்பர் 4 ஓவர்களில் 23 ரன்களை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். டூபிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்
ராஜஸ்தான் 146/4 (20 ஓவர்களில்)
(ஓவைஸ் ஷா 52, மெனேரியா 36,
குலசேகரா 1வி/17)
சென்னை 147/3 (20 ஓவர்களில்)
(டூபிளெஸ்ஸிஸ் 73, ரெய்னா 26,
கூப்பர் 2வி/23)
ரஹானே தொடர்ந்து முதலிடம்
இந்த ஆட்டத்தோடு சேர்த்து மொத்தம் 7 ஆட்டங்களில் விளையாடி 319 ரன்கள் குவித்து இந்த ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் ராஜஸ்தானின் ரஹானே. அதிக ரன்கள் குவிக்கும் வீரர்கள் அணியும் ஆரஞ்சு நிற தொப்பியையும் தக்கவைத்துக் கொண்டார். டூபிளெஸ்ஸிஸ் (7 ஆட்டங்கள் 302 ரன்கள்) 2-வது இடத்திலும், ஓவைஸ் ஷா (7 ஆட்டங்கள் 268 ரன்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
போட்டித் துளிகள்
*இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ராஜஸ்தானின் கெவோன் கூப்பர். டெல்லியின் மோர்ன் மோர்கல் 5 ஆட்டங்களில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். மும்பையின் முனாப் படேல் 10 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
* சனிக்கிழமை என்பதால் மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மைதானத்துக்கு வந்திருந்த இளம் ரசிகர்கள், ரசிகைகள் ஆட்டம் போட்டு உற்சாகமாக ஆட்டத்தை ரசித்தனர்.
* ஆட்டத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்ததால் மைதானத்தின் அருகே பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் வெயிலில் வாடினர்.
இன்றைய ஆட்டங்கள்
மும்பை இண்டியன்ஸ் -
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இடம் : மும்பை, நேரம்: மாலை 4.
டெக்கான் சார்ஜர்ஸ் -
கொல்கத்தா நைட் ரைடரஸ்
இடம்: கட்டாக், நேரம் : இரவு 8.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...