ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழகத்தில் கைவிடப்பட்ட நிலையில் கபடி

சென்னை, ஜூலை 3: தமிழகத்தில் கபடி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் கபடி வீரர், வீராங்கனைகளுக்கு இடம் வழங்கப்படவில்லை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:10 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஜூலை 3: தமிழகத்தில் கபடி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் கபடி வீரர், வீராங்கனைகளுக்கு இடம் வழங்கப்படவில்லை. அரசின் சார்பில் நடைபெறும் கோடைகால பயிற்சி முகாமில்கூட கபடி விளையாட்டு இடம்பெறுவதில்லை என்று வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 இந்தியாவின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டாக இன்றளவும் பேசப்படுவது கபடி விளையாட்டு. தமிழகத்தின் கிராமங்களில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கபடி, இப்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 ஒரே பயிற்சியாளர் : தமிழகத்தில் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களுக்கும் சேர்த்து கபடி விளையாட்டுக்கென அரசின் சார்பில் ஒரேயொரு பயிற்சியாளர் மட்டுமே உள்ளார். அவரும் மதுரையில்தான் இருக்கிறார்.

 இதனால் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பயிற்சியாளர் இன்றி தவிக்கின்றனர். மண்டல வாரியாக பயிற்சியாளரை நியமிக்கும்பட்சத்தில் கபடி வீரர், வீராங்கனைகளுக்கு உதவியாக இருக்கும்.

 வேலைவாய்ப்பு குறைவு: கபடி வீரர்களுக்கு கடந்த 24 ஆண்டுகளாக காவல் துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் அரசு வேலை வழங்கப்படவில்லை. காவல் துறையில் ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் சேர்த்து 5 சதவீத வேலைவாய்ப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.

 மாநகராட்சி, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றாலும், இதுவரை வழங்கப்படவில்லை.

 அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் கபடி விளையாட்டில் உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதால், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரர், வீராங்கனைகள் அங்குள்ள அணிகளுக்காக ஆடிவிட்டு அங்கேயே வேலைபெற்று வருகின்றனர். இதனால் பலம் வாய்ந்த தமிழக அணி வலுவிழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

 விளையாட்டு விடுதிகளில்...இதுமட்டுமின்றி அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டு விடுதிகளிலும் கபடி வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பிற விளையாட்டு வீரர்களுக்கு விடுதிகளில் இடம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பெருமைமிக்க விளையாட்டான கபடி புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது.

 இதுதொடர்பாக மாநில அமைச்சர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்- செயலர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் அது கிடப்பிலேயே இருக்கிறது என்று கபடி வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

 பரிசுத்தொகை: கிரிக்கெட், டென்னிஸ் போன்றவற்றில் வசதி படைத்தவர்கள் மட்டுமே விளையாட முடியும். ஆனால் கபடி விளையாடுபவர்கள் பெரும்பாலும் ஏழ்மையைப் பின்னணியாகக் கொண்டவர்கள்.

 சிலர் தேசிய அளவிலான கபடிப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தபோதும், அதற்கான பரிசுத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

 சமீபத்தில் பிகாரில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிர வீராங்கனைகள் 3 பேருக்கு அந்த மாநில அரசு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது. உலகக் கோப்பையில் விளையாடிய ஆந்திர வீராங்கனைகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அம் மாநில அரசு அறிவித்தது. ஆனால் தமிழக வீரர்களுக்கோ விளையாட்டு விடுதியில்கூட இடம்தர மறுக்கிறார்கள் என்றுகூறி ஆதங்கப்படுகின்றனர் கபடி வீரர்கள்.

 கபடியை சேர்க்க நடவடிக்கை: இதுதொடர்பாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் விஜயகுமார், பொது மேலாளர் மேரி ராசாத்தி ஆகியோரிடம் கேட்டபோது, "மாவட்ட வாரியாக விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 வரும் காலங்களில் விளையாட்டு விடுதிகளில் கபடி வீரர், வீராங்கனைகளுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

 கபடி வீரர்களுக்கு இதுபோன்று தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுமானால், இனி வரும் காலங்களில் யாரும் கபடி விளையாட முன்வரமாட்டார்கள்.

 தமிழகத்தின் பாரம்பரியமிக்க பல்வேறு விளையாட்டுகள் அழிந்துவரும் நிலையில், இப்போதைக்கு அழிவின் விளிம்பில் இருக்கும் கபடி போன்ற விளையாட்டுகளையாவது பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.