ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கானல் நீராகும் ஒலிம்பிக் பதக்கங்கள்!

ஒலிம்பிக் போட்டி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சர்வதேச தட கள சம்மேளனம் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. ஒலிம்பிக் ஆடவர், மகளிர் 100 மீ., 400 மீ., தொடர் ஓட்ட போட்ட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:12 pm

ஏ.வி. பெருமாள்

ஒலிம்பிக் போட்டி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சர்வதேச தட கள சம்மேளனம் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. ஒலிம்பிக் ஆடவர், மகளிர் 100 மீ., 400 மீ., தொடர் ஓட்ட போட்டிகளில் இந்தியாவுக்கு இடமில்லை என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

 2010 காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 400 மீ. தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தங்கம் வென்று, இப்போது ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி வழக்கை எதிர்கொண்டுள்ள அஸ்வினி அகுஞ்ஜி, சினி ஜோஸ், மன்தீப் கெüர், மன்ஜீத் கெüர் ஆகியோரை நம்பியிருந்ததாகவும், அவர்களின் மீதான தடை நீட்டிக்கப்பட்டதால் இந்தியா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் இப்போது சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

 இவர்கள் கூறும் காரணத்தை யாரும் நம்பமாட்டார்கள் என்பது வேறு. எனினும் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட இந்தியாவில் ஊக்கமருந்தில் சிக்கிய அந்த நால்வரை விட்டால் வேறு விளையாட்டு வீரர்களே இல்லையா?

 ஒலிம்பிக்கிற்கு ஆடவர், மகளிர் என, பிரிவுக்குத் தலா ஓர் அணியை உருவாக்க இயலாத நிலையில் தட கள சங்கங்கள் இருந்து என்ன பயன்? தேசிய அளவில் தட கள விளையாட்டை நிர்வகிக்க இந்தியத் தட கள சங்கம், இது போதாதென்று மாநில மற்றும் மாவட்ட அளவிலும் தட கள சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களின் செயல்பாட்டுக்கு அரசு கட்டடங்களில் ஓர் அலுவலகம் போதாதென்று, பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இவ்வளவு இருந்தும் நான்கே நான்கு விளையாட்டு வீரர்களை நம்பித்தான் இந்தியத் தட கள அணி இருக்கிறது என்று சொன்னால் கேவலமாக அல்லவா இருக்கிறது.

 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பதை விட்டுவிடலாம். ஒலிம்பிக்கில் தகுதிபெறவே தகுதியற்று போய்விட்டது ஏன்? இதற்கான காரணம் என்ன? குறை எங்கிருக்கிறது என்று ஆராயத் தொடங்கினால், வீரர்கள் தேர்வில் இருந்து தொடங்குகிறது பிரச்னை.

 அடுத்தபடியாக விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதியில் மிகப்பெரிய குறைபாடு இருக்கிறது. சென்னை போன்று பெருநகரங்களில் கூட பெரிய அளவில் மைதானங்கள் இல்லை. சென்னையில் விளையாட்டுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நேரு மைதானத்தில் வீரர்கள் சுதந்திரமாக பயிற்சி மேற்கொள்ள முடிகிறதா என்றால், இல்லை.

 சென்னையில் உள்ள பெருவாரியான தனியார் பள்ளிகளில் விளையாட்டுக்கென மைதானங்கள் இல்லை. ஆனால் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்களிடம் விளையாட்டுக்கென ஒரு கணிசமான தொகையை கறந்துவிடுகின்றனர். வாங்கியத் தொகைக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்பதற்காக, நேரு மைதானத்தை வாடகைக்கு எடுத்தும் போட்டிகளை நடத்துகிறார்கள். இதனால் இருக்கிற ஒரு மைதானத்திலும் வீரர்கள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போதாதென்று நேரு உள் விளையாட்டரங்கும் இப்போது தனியார் நிகழ்ச்சிகளுக்கு வேறு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அங்கு நிகழ்ச்சிகள் நடக்கும்போது சுற்றியிருக்கும் மைதானங்களில் பயிற்சிபெறச் சென்றால் வீரர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இந்த நிலை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தொடர்கிறது. வேறு நிகழ்ச்சி இல்லாதபோதுதான் மைதானங்கள் வீரர்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது.

 பயிற்சிபெறத் தரமான உபகரணங்கள் கிடையாது. விளையாட்டு விடுதிகளில் உள்ள வீரர்களுக்குத் தரமான உணவுகள் தரப்படுவதில்லை. கெட்டுப்போன உணவும், பழங்களும் வழங்கப்படும் நிலைதான் இன்னும் தொடர்கிறது. குறைகளைக் களையும் முயற்சியும் எடுப்பதில்லை. வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் சிறப்பு கவனத்துடன் ஆதரிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் வெற்றிகளைக் குவித்து நாட்டுக்கு பெருமைத் தேடித் தருகிறார்கள்.

 விளையாட்டுக்காகப் பணத்தை செலவு செய்துவிட்டு, இவ்வளவு பணம் செலவிட்டிருக்கிறோம் என்று அறிக்கை மூலம் விளம்பரம் தேடிக்கொள்வதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறது அரசு. அந்தப் பணம் வீரர்களை சென்றடைந்ததா? அவர்களுக்குத் தரமான பயிற்சி அளிக்கப்படுகிறதா? என கண்காணிப்பது கிடையாது. கேள்வி கேட்பதும் இல்லை. கேள்வி எழுப்பினாலும் காதில் விழுவதில்லை.

 விளையாட்டு அமைப்புகளில் நிர்வாகிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிக்கவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும்தான். விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகளில் எத்தனைபேர் விளையாட்டு வீரர்கள் என்றால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகள் எல்லோருமே சலுகைகளை அனுபவிப்பதற்காகவே பதவியில் அட்டைப் பூச்சி போன்று விடாமல் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள்தான். இவர்கள் திறமையான வீரர்களை உருவாக்குவார்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.

 உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, கடந்த 2008 ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 100. பதக்கப்பட்டியலிலும் முதலிடம். ஆனால் உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை ஒரு தங்கம், 2 வெண்கலம் என மூன்று மட்டுமே. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்த இடம் 51. இதுதான் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்ற போட்டி. 1900-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் இந்திய அணி ஒலிம்பிக்கில் வென்றுள்ள பதக்கங்களின் மொத்த எண்ணிக்கை 20 மட்டுமே.

 எல்லா நாடுகளும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வீரர்களை 4 ஆண்டுகளுக்கு முன்பே இனம் கண்டு அப்போது முதலே பயிற்சியளிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்தியாவிலோ சில நாள்களுக்கு முன்பு வரை ஒலிம்பிக் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்துவந்திருக்கிறார்கள்.

 சரியான வீரர்களை இனம் கண்டறிவது, திறமையின் அடிப்படையில் மட்டுமே வீரர்களைத் தேர்வு செய்வது, நல்ல உள்கட்டமைப்பு வசதி, முறையான திட்டமிடுதல், சரியான பயிற்சி, தரமான பயிற்சி உபகரணங்கள் போன்றவற்றை ஏற்படுத்தாத வரையில் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டு பலனில்லை. இதேநிலை தொடருமானால் இந்த ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, எத்தனை ஒலிம்பிக் ஆனாலும், பதக்கப் பட்டியலில் பார்வைக்கு எட்டாத இடத்தில்தான் இந்தியா இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.