/

இந்தியாவுக்கு 4-வது வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 7:55 pm

ஜிம்பாப்வேக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா, 115 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஷிகர் தவன், வினய் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக சேதேஷ்வர் புஜாரா, மோஹித் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் புஜாராவுக்கு இது அறிமுக ஒருநாள் போட்டியாகும். அதேவேளையில் மோஹித் சர்மா, இப்போதுதான் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

144 ரன்களில் ஆல்அவுட்: டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, ஜிம்பாப்வேயை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து பேட் செய்த அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சிக்கந்தர் ராஸா 7 ரன்களில், மோஹித் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது.

பின்னர் வந்த மஸகட்ஸா 10, கேப்டன் பிரென்டன் டெய்லர் 0, வில்லியம்ஸ் 0, சிபான்டா 24 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற, 50 ரன்களை எட்டுவதற்குள்ளாகவே 5 விக்கெட்டை இழந்தது ஜிம்பாப்வே. எனினும் 6-வது விக்கெட்டுக்கு வாலர்-சிகும்பரா ஜோடி 80 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை மோஹித் சர்மா பிரித்தார். 77 பந்துகளைச் சந்தித்த வாலர் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு மீண்டும் சரிவுக்குள்ளான ஜிம்பாப்வே, 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணியின் சிகும்பரா 66 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 17 ரன்களுக்கு ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தரப்பில் அமித் மிஸ்ரா 8.4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா வெற்றி: 145 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மாவும், புஜாராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அறிமுகப் போட்டியில் விளையாடிய புஜாரா 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சாதாரா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

இதையடுத்து ரோஹித்துடன் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. கடந்தப் போட்டிகளில் சரியாக விளையாடாத இவர்கள் இருவரும், இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட, 26-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது இந்தியா.

வில்லியம்ஸ் வீசிய 29-வது ஓவரில் ரோஹித் சர்மாவும், ரெய்னாவும் அடுத்தடுத்து அரைசதம் கண்டனர். ரோஹித் 84 பந்துகளிலும், ரெய்னா 60 பந்துகளிலும் அரைசதத்தை எட்டினர்.

விட்டோரி வீசிய 31-வது ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, 2-வது பந்தில் சிக்ஸரையும், 3-வது பந்தில் பவுண்டரியையும் விளாச, 30.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா.

ரோஹித் சர்மா 90 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 64, சுரேஷ் ரெய்னா 71 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது.

3-வது ஆட்டத்தில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிய இந்தியா, தற்போது 4-வது ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளது. அதேநேரத்தில் ஜிம்பாப்வே அணி தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் ஆட்டம் வரும் சனிக்கிழமை புலவாயோ நகரில் நடைபெறுகிறது.

2-வது இந்தியர்!

அறிமுகப் போட்டியில் விளையாடிய மோஹித் சர்மா 10 ஓவர்களில் 3 மெய்டன்களை வீசி, 26 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற 2-வது இந்தியர், சர்வதேச அளவில் 55-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மோஹித் சர்மா.

அறிமுக ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் இந்தியர் இந்திய அணியின் தற்போதைய தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் ஆவார். இவர், 1980-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கி 64 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

சுருக்கமான ஸ்கோர்

ஜிம்பாப்வே-144

(சிகும்பாரா 50*, வாலர் 35, மிஸ்ரா 3வி/25, மோஹித் சர்மா 2வி/26)

இந்தியா-145/1

(ரோஹித் சர்மா 64, ரெய்னா 65*, சதாரா 1வி/31)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.