சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன்மூலம் சென்னையில் சூப்பர் கிங்ஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.
அந்த அணியின் ஷேன் வாட்சன் 34 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து சூப்பர் கிங்ûஸ வீழ்த்தினார்.
முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹசி-முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.3 ஓவர்களில் 83 ரன்கள் சேர்த்தது. 40 பந்துகளைச் சந்தித்த ஹசி 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பின்னி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
முரளி விஜய் அரை சதம்: பின்னர் வந்த ரெய்னா 1, கேப்டன் தோனி 2 ரன்களில் ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார். மறுமுனையில் 49 பந்துகளில் அரைசதம் கண்ட முரளி விஜய், 50 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். முன்னதாக விஜய் 46 ரன்களில் ரன் அவுட்டில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
கடைசிக் கட்டத்தில் பிராவோ 11 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுக்க, சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் தரப்பில் கெவன் கூப்பர் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வாட்சன்-பின்னி அதிரடி: பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணியில் ரஹானே 9, ஃபாக்னர் 1, சாம்சன் 0, திராவிட் 22 ரன்களில் வெளியேற, 9.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து தடுமாறியது ராஜஸ்தான்.
இதன்பிறகு ஷேன் வாட்சனுடன் இணைந்தார் ஸ்டூவர்ட் பின்னி. அந்த அணி வெற்றி பெற கடைசி 10 ஓவர்களில் 93 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது 11-வது ஓவரை வீச வந்தார் அஸ்வின். அந்த ஓவரில் பின்னி ஒரு சிக்ஸரை விளாச, அதிரடி ஆரம்பமானது. அதே ஓவரில் வாட்சன் இரு சிக்ஸர்களை விளாசினார். இதேபோன்று பிராவோ வீசிய 14-வது ஓவரில் பின்னி ஒரு சிக்ஸரையும், வாட்சன் இரு சிக்ஸரையும் விளாசினர்.
கிறிஸ் மோரிஸ் வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்து 25 பந்துகளில் அரைசதம் கண்ட வாட்சன், கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பிராவோ பந்துவீச்சில் வாட்சன் போல்டு ஆனார். அவர் 70 ரன்கள் எடுத்தார். ஜடேஜா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் பின்னி சிக்ஸர் அடிக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ராஜஸ்தான். பின்னி 23 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் கோட்டை: இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் தனது உள்ளூர் மைதானமான ஜெய்ப்பூரில் விளையாடிய 8 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது ராஜஸ்தான். ஐபிஎல் போட்டியில் உள்ளூர் மைதானத்தில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட ஒரே அணி ராஜஸ்தான் மட்டுமே.
சிக்ஸர் இல்லை: சூப்பர் கிங்ஸ் பேட் செய்தால் அங்கு சிக்ஸருக்கு பஞ்சம் இருக்காது என்பது ரசிகர்களின் எண்ணம். ஆனால் இந்த ஆட்டத்தில் மைக் ஹசி, விஜய் ஆகியோர் நிதானமாக ஆடியதாலும், தோனி, ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததாலும், சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சிக்ஸர்கூட அடிக்கவில்லை. 16 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன. ஆனால் ராஜஸ்தான் அணி 9 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
சுருக்கமான ஸ்கோர்
சென்னை-141/4
(முரளி விஜய் 55,ஹசி 40, கூப்பர் 2வி/32)
ராஜஸ்தான்-144/5
(வாட்சன் 70, பின்னி 41*, ஹோல்டர் 2வி/20)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







