வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அகதிகளின் கிரிக்கெட் அணி

நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில், வீழ்த்த முடியாதவர்களாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை, ஆப்கானிஸ்தான் மட்டுமே வென்றது.

News image
Updated On :19 ஏப்ரல் 2016, 7:18 pm

நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில், வீழ்த்த முடியாதவர்களாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை, ஆப்கானிஸ்தான் மட்டுமே வென்றது. வெற்றிக்குப் பின்பாக நாடு திரும்பியவர்களை, காபூல் விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களது பாரம்பரிய முறையிலான ஆடல் பாடல்களுடன் வரவேற்றனர்.
ஆப்கானிஸ்தான் போன்ற "போர் தின்ற' தேசத்தில், இப்படியான வரவேற்புகள் புதுமையானவை. போரில் பிறந்து, போரிலேயே வாழ்ந்த சந்ததியினரான அவர்களுக்கு, ஒவ்வொரு கணத்தின் நிலைத்திருத்தலும், உயிர் வாழ்தலும்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது.
அகதி முகாம்களில் இருந்து மக்களின் மனதை நோக்கி: விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர் ஒருவரின் கைகளில் இருந்த பதாகையில் "அகதி முகாம்களில் இருந்து மக்களின் மனதை நோக்கி' என எழுதப்பட்டிருந்தது. அந்த வார்த்தைகள் சத்தியமானவை. ஏனென்றால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான வீரர்கள் அகதி முகாம்களில் இருந்துதான் உருவாகியுள்ளனர். ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு "அகதிகளின் கிரிக்கெட் அணி' என்ற பெயரும் உண்டு.
அகதிமுகாம் கிரிக்கெட்: 1979-இல் ஆப்கன் மீது படை எடுத்த சோவியத் ரஷ்யா 1987 வரை ஆட்சி செய்தது. நாட்டிலுள்ள மக்களைவிட, அகதி முகாங்களில் இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கிரிக்கெட் பிரபலமாகி இருக்கவில்லை. ஆனால், இந்தியர்கள் போல மூச்சிலும், பேச்சிலும் கிரிக்கெட்டை சுவாசிக்கும் பாகிஸ்தானியர்களால், பாகிஸ்தான் எல்லையில் இருந்த அகதி முகாம்களில் வசித்த ஆப்கன் இளம் சந்ததிக்கும் கிரிக்கெட் ஜுரம் தொற்றிக் கொண்டது.
தாஜ் மலூக் என்ற தனி ஒருவன்: ஆப்கன் தேசத்துக்காக கிரிக்கெட் அணியொன்றைக் கட்டி எழுப்பும் குறிக்கோளில் தனி ஒருவனாக நின்று ஜெயித்தவர் தாஜ் மலூக். பல ஆண்டுகள் அகதியாக இருந்தவர். ஆப்கானிஸ்தானின் "கிரிக்கெட் தந்தை' என இவரை அந்நாட்டின் இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
தனது சக அகதிகளுடன் சேர்ந்து அகதி முகாமில் கிரிக்கெட் அணியொன்றை வைத்திருந்தார். அதற்கு அவர் "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி' எனப் பெயரிட்டுருந்தார். அவரின் தொடர்ச்சியான முயற்சிகளால் 1995-இல் ஆப்கன் கிரிக்கெட் வாரியம் அமைக்கப்பட்டது.
அன்பை விதைத்த கிரிக்கெட்: ரஷியாவும், அமெரிக்காவும் ஆப்கன் தேசத்தை ஏலம் போட்டுத் துண்டாடினார்கள். தலிபான்களின் ஆட்சி கொடூரமான வெறுப்பரசியலை விதைத்துச் சென்றது. ஆப்கன் பழங்குடி இனங்களுக்கிடையே எப்போது வேண்டுமெனாலும் வெடிக்கக் கூடிய நிலையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. எங்கேயும் எப்போதும் வெடிக்கக் கூடிய மனித வெடி குண்டுகள் இவற்றை எல்லாம் தாண்டி ஆப்கானியர்களின் மனதில் அன்பை விதைத்துள்ளது கிரிக்கெட்.
"அன்பை விதைக்க வேண்டுமா...? ஒன்றாக ஆடு, ஒன்றாகப் பாடு... அப்படியும் முடியவில்லையா, ஒன்றாக விளையாடு' என்றொரு நீதிமொழி கரீபியன் பழங்குடி மக்களிடையே புழக்கத்தில் உண்டு. போர் தின்ற ஆப்கானிஸ்தானில், அன்பை விதைக்க அந்நாட்டவர்கள் தேர்ந்தெடுத்தது கிரிக்கெட்டை. இப்போதுள்ள சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் தேசத்தை ஒன்றிணைக்க கிரிக்கெட்டால் மட்டுமே முடியும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
கொடிய தலிபான்களும், போதை மருந்து கடத்தல்காரர்களும், மனித வெடிகுண்டுகளும்தான் ஆப்கானிஸ்தான் தேசம் என இதுவரை உலகம் நினைத்திருந்ததை மாற்றியிருக்கிறது கிரிக்கெட். பிளவுபட்டுப்போயுள்ளதொரு தேசத்தில், தகித்துக் கொண்டிருக்கும் மக்களின் மனங்களில் அன்பை விதைத்துச் சென்றிருக்கிறது கிரிக்கெட். தங்களது அணி வீரர்களை வரவேற்க, காபூல் விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்காண மக்களின் முகங்களில் படிந்திருந்த புன்னகையைப் பார்த்திருக்க வேண்டும். அந்தப் புன்னகைக்காகத்தான் பல ஆண்டுகளாக ஆப்கன் நாட்டவர்கள் ஏங்கியிருந்தனர். அவர்களுக்கு அதைக் கொடுத்த கிரிக்கெட்டை கொண்டாடலாமே...?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.