
கிழக்கு தில்லி தொகுதி, மக்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன்னை அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு பாஜக தலைமைக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக கௌதம் கம்பீர் தனது எக்ஸ்(டிவிட்டர்) தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”வரும் நாட்களில் கிரிக்கெட் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தவிருப்பதால், அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்ததற்காக, பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மனமார்ந்த நன்றி. ஜெய்ஹிந்த்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கௌதம் கம்பீரின் இந்த திடீர் அறிவிப்பின் மூலம், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் இம்முறை கம்பீருக்கு பதிலாக புதிய வேட்பாளர் போட்டியிடப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.