டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்..! ஜடேஜா சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை குவித்துள்ளதுடன் 300 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்..! ஜடேஜா சாதனை
PTI
Published on
Updated on
1 min read

கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று (செப். 30) காலை தொடங்கியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை திரட்டியது. இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, நான்காவது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 26 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் ஒரேயொரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வங்கதேச வீரர் காலேத் அகமது விக்கெட்டை கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இந்திய வீரர்கள் வரிசையில் அவர் 7-ஆவது வீரராக இணைந்துள்ளார்.

74-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 35 வயதான ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை குவித்துள்ளதுடன் 300 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதே சாதனையை ஜடேஜாவுக்கு முன், இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் 72 டெஸ்ட் போட்டிகளிலேயே எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை குவித்துள்ளதுடன் 300 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.