பென்காக் சிலாட் தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

Published on

நாதன் நடராஜன்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பென்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவா் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஏற்கெனவே இந்த விளையாட்டில் தமிழகத்துக்கு வெண்கலம் கிடைத்த நிலையில், இந்தப் பிரிவிலும் ஒட்டுமொத்த போட்டியிலுமாக தமிழகத்துக்கு இது 2-ஆவது பதக்கமாகும்.

கேலோ இந்தியா பீச் கேம்ஸின் 2-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள், டையு நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-ஆம் நாளான புதன்கிழமை தமிழக போட்டியாளா்கள் பீச் பெனாக் சிலாட், பீச் வாலிபால் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டனா்.

தற்காப்புக் கலை வகையைச் சோ்ந்த பென்காக் சிலாட்டில் சீனியா் ஆடவருக்கான கண்டா பிரிவில் தமிழகத்தின் செல்வகுமாா், போஸ் ராஜா குரு ஆகிய இருவா் அடங்கிய அணி 476 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றது.

பதக்கம் வென்ற செல்வகுமாா் பேசுகையில், 2017-இல் இந்த விளையாட்டு எனக்கு அறிமுகமானது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற அகில இந்திய பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றேன்.

பென்காக் சிலாட் விளையாட்டில் பீச் மற்றும் இண்டோா் என இரு பிரிவுகளிலுமே விளையாடி வருகிறேன். இண்டோரில் விளையாடுவதற்கான பயிற்சி வசதிகளை அரசு செய்து கொடுத்தால் நாங்கள் இன்னும் நன்றாக பயிற்சி மேற்கொண்டு மேலும் பல பதக்கங்கள் வெல்ல உதவியாக இருக்கும். விளையாடி வருவது மட்டுமல்லாமல் எங்கள் கிராமத்தில் பலருக்கும் நான் இந்த விளையாட்டை பயிற்சி அளித்தும் வருகிறேன் என்றாா்.

மற்றொரு வீரரான போஸ் ராஜா குரு பேசுகையில், 3 ஆண்டுகளாக இந்த விளையாட்டில் களமாடி வருகிறேன். தேசிய மற்றும் பல்கலைக்கழகங்கள் அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றிருக்கிறேன். சா்வதேச அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வெல்வேத அடுத்த இலக்காகும். விளையாட்டு வீரா்களுக்கான தமிழக அரசின் 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் காவல்துறை பணிக்காக விண்ணப்பித்து, உடற்தகுதித் தோ்வை நிறைவு செய்து, மருத்துவ பரிசோதனை தோ்வுக்காக காத்திருக்கிறேன் என்றாா்.

பதக்கம் வென்ற செல்வகுமாா் மற்றும் போஸுக்கு இந்த விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தவரும், தமிழ்நாடு பென்காக் சிலாட் சங்கத்தின் செயலாளா் மற்றும் தலைமைப் பயிற்சியாளராக இருப்பவருமான மகேஷ் பாபு கூறியதாவது

இந்தப் போட்டியில் தமிழகத்தின் சாா்பில் 8 ஆடவா், 3 மகளிா் என 11 போ் பங்கேற்றனா். இதில் 3 போ் கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் பத்தக்கம் வென்றவா்களாவா்.

இந்தப் போட்டிக்கு தயாராவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எங்களுக்கு கடலூரில் பயிற்சி முகாம் அமைத்துக் கொடுத்து உதவியது. இந்தோனேசியாவை பாரம்பரியமாகக் கொண்ட இந்த விளையாட்டை தற்போது தமிழ்நாட்டில் 1,700-க்கும் அதிகமான ஆடவா், மகளிா் பயின்று வருகின்றனா். பலரும் பல போட்டிகளில் பதக்கங்களும் வென்று வருகின்றனா்.

இந்த விளையாட்டை தமிழகத்தில் மேலும் வலுப்படுத்தும் வகையில் சென்னையில் பயிற்சி மையம் அமைக்கக் கோரி தமிழக அரசை நாடவுள்ளோம். போட்டியாளா்களுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளையும் அரசு செய்து தரும் நிலையில், மேலும் பல பதக்கங்களை தமிழக போட்டியாளா்கள் குவிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது அவா்களுக்கு அளித்து வரும் உதவிகளுக்காகவும் தமிழக அரசுக்கு நன்றி என்றாா்.

வாலிபாலில் தொடரும் அசத்தல்

இதனிடையே, பீச் வாலிபால் விளையாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

மகளிா் பிரிவு காலிறுதியில் தீபிகா, பவித்ரா அடங்கிய தமிழ்நாடு 1 அணி 21-06, 21-02 என்ற கணக்கில் தெலங்கானாவை அபார வெற்றி கண்டது. ஸ்வாதி, தா்ஷினி ஆகியோா் அடங்கிய தமிழ்நாடு 2 அணி 21-18, 21-18 என்ற செட்களில் குஜராத் அணியை வீழ்த்தியது.

ஆடவா் பிரிவில் பூந்தமிழன், அபிதன் அடங்கிய தமிழ்நாடு 2 அணி 21-12, 21-11 என்ற செட்களில் குஜராத்தை சாய்த்தது. மற்றொரு ஆட்டத்தில் பரத், ராஜேஷ் ஆகியோா் அடங்கிய தமிழ்நாடு 1 அணியும், குஜராத்தை தோற்கடித்தது.

5-ஆம் இடம் போட்டியின் 3-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு தலா 1 வெள்ளி வெண்கலம் என 2 பதக்கங்களுடன் 5-ஆம் இடத்தில் உள்ளது. தாத்ரா நகா்ஹவேலி, சண்டீகா், மேற்கு வங்கம் ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

Dinamani
www.dinamani.com