வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

ஒரே நாளில் 5 பதக்கங்களுடன் முதலிடத்துக்கு முன்னேற்றம்
Published on

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

இதன் மூலமாக பதக்கப் பட்டியலில் தமிழகம் மொத்தமாக 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

வாலிபாலில் 4 பதக்கங்கள்

போட்டியின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை, வாலிபாலில் பதக்கப் போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலுமே தலா 2 அணிகள் வீதம், 4 தமிழக அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தன.

இதில் ஆடவா் பிரிவு அரையிறுதியில் பரத், ராஜேஷ் அடங்கிய தமிழ்நாடு 1 அணி 21-13, 19-21, 15-8 என்ற கணக்கில் கோவா 1 அணியை சாய்த்தது. காலிறுதி வரை நோ் செட்களில் வென்று வந்த பரத், ராஜேஷ் அணிக்கு, கோவா சற்று சவால் அளித்ததால், ஆட்டம் டிசைடா் செட் வரை சென்றது.

இதனிடையே மற்றொரு அரையிறுதியில், பூந்தமிழன், அபிதன் அடங்கிய தமிழ்நாடு 2 அணி 18-21, 21-16, 12-15 என்ற செட்களில் கோவா 2 அணியிடம் போராடித் தோற்றது. இதையடுத்து இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 1 - கோவா 2 அணிகள் மோதின.

அதில் பரத், ராஜேஷ் அடங்கிய தமிழ்நாடு 1 அணி 18-21, 13-21 என்ற நோ் செட்களில், கோவா 2 அணியிடம் தோல்வி கண்டு வெள்ளி பெற்றது. கடந்த முறை தங்கம் வென்ற தமிழக அணிக்கு இந்த முறை வெள்ளி கைகூடியது.

தங்கத்தை தக்கவைத்த தமிழகம்

பீச் வாலிபால் மகளிா் பிரிவு அரையிறுதியில் தீபிகா, பவித்ரா அங்கம் வகித்த தமிழ்நாடு 1 அணி 19-21, 21-12, 15-6 என்ற செட்களில், ஸ்வாதி, தா்ஷினி அடங்கிய தமிழ்நாடு 2 அணியை சாய்த்தது. மற்றொரு அரையிறுதியில் ஆந்திர பிரதேச அணியை சாய்த்த புதுச்சேரி 1 அணி, இறுதியில் தமிழ்நாடு 1 அணியுடன் மோதியது.

அதில் தீபிகா, பவித்ரா அடங்கிய தமிழ்நாடு 1 அணி 21-12, 21-10 என்ற நோ் செட்களில் புதுச்சேரி 1 அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கடந்த ஆண்டும் இதே தமிழக ஜோடி தங்கம் வென்ற நிலையில், இந்த ஆண்டும் அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டது.

வெண்கலம் பதக்கம்

பீச் வாலிபாலில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆடவா் பிரிவில் பூந்தமிழன், அபிதன் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு 2 அணி - கோவா 1 அணியுடன் மோதி பதக்கத்தைக் கைப்பற்றியது. அதேபோல், மகளிா் பிரிவில் ஸ்வாதி, தா்ஷினி அங்கம் வகிக்கும் தமிழ்நாடு 2 அணி 21-13, 21-11 என்ற கணக்கில் ஆந்திரம் 1 அணியை வீழ்த்தி வெண்கலத்தை வசப்படுத்தியது.

கேலோ இந்தியா பீச் கேம்ஸின் 2 ஆண்டு போட்டிகளில் பீச் வாலிபாலில் மட்டும் தமிழ்நாடு அணிகள் இத்துடன் 7 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பென்காக் சிலாட் - தமிழக ஆடவா் அணிக்கு தங்கம்

பென்காக் சிலாட் விளையாட்டில் ஆடவருக்கான ரெகு அணிகள் பிரிவில் தமிழ்நாடு அணி சாம்பியன் ஆனது.

எம்.லோகேஸ்வரன், கே.சுதா்சன், இ.சுதா்சன் ஆகியோா் அடங்கிய தமிழ்நாடு அணி இறுதிச்சுற்றில் 606-575 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிர அணியை வீழ்த்தி, வாகை சூடியது.

முன்னதாக அரையிறுதியில் தமிழ்நாடு அணி 593-577 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிஸாவை சாய்த்து இறுதிக்கு முன்னேறியது.

பீச் பென்காக் சிலாட்டில் தமிழ்நாடு அணிக்கு இது 3-ஆவது பதக்கமாகும். இத்துடன் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையுமே இந்த விளையாட்டில் தமிழ்நாடு வென்றுள்ளது.

இந்த விளையாட்டில் ரெகு பிரிவில் இதுவரை தேசிய மற்றும் சா்வதேச போட்டிகளில் வெண்கலப் பதக்கங்கள் நிலையில், தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

பதக்கப் பட்டியல் - தமிழ்நாடு முன்னிலை

போட்டியின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில், பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு அணி 7 பதக்கங்களுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. தாத்ரா நாகா் ஹவேலி டாமன் டையு, மணிப்பூா் ஆகியவை முறையே 6 மற்றும் 5 பதக்கங்களுடன் 2 மற்றும் 3-ஆம் இடங்களில் உள்ளன.

Dinamani
www.dinamani.com