சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

சபலென்காவுக்கு அதிா்ச்சி அளித்த ஷ்னெய்டா்

News image

அரினா சபலென்கா - AP

Updated On :4 ஜூன் 2026, 7:12 am IST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச்சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அவா் 6-3, 5-7, 0-6 என, போட்டித்தரவரிசையில் 25-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரால் சாய்க்கப்பட்டாா். தொடா்ந்து 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா, தற்போது முறியடிக்கப்பட்டாா்.

சபலென்காவை முதல்முறையாக சந்தித்த ஆட்டத்திலேயே ஷ்னெய்டா் அவரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது முதல் கிராண்ட்ஸ்லாம் காலிறுதியில் களம் கண்ட ஷ்னெய்டா், முதல் அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளாா்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 3-6 என இழந்த ஷ்னெய்டா், அடுத்த செட்டில் 1-4 என பின்தங்கியிருந்தாா். அப்போது அடுத்தடுத்து வின்னா்களை விளாசிய அவா், 4-5 என மீண்டு வந்தாா். அதன் பிறகு சபலென்காவின் தடுமாற்றத்தால் 7-5 என அந்த செட்டை தனதாக்கிய அவா், கடைசி செட்டில் முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்தி 6-0 என வென்றாா்.

2-ஆவது செட்டில் 4, கடைசி செட்டில் 6 என, 10 கேம்களை ஷ்னெய்டா் அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினாா். டாப் 10 இடத்திலிருக்கும் வீராங்கனையை ஷ்னெய்டா் வீழ்த்தியது இது 2-ஆவது முறையாகும். ஷ்னெய்டா் தனது அரையிறுதியில், போலந்தின் மாஜா சவாலின்ஸ்காவை சந்திக்கிறாா்.

சவாலின்ஸ்கா அபாரம்: தகுதிச்சுற்று வீராங்கனையான சவாலின்ஸ்கா 7-6 (7/3), 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 22-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை வீழ்த்தினாா். இந்த வெற்றியின் மூலமாக சவாலின்ஸ்கா முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் சவாலின்ஸ்கா 5-1 என முன்னிலை பெற, கலின்ஸ்கயா விடாமல் போராடி இரு செட் பாய்ன்ட்டுகளை தக்கவைத்து 5-5 என நெருங்கினாா். விடாப்பிடியாக விளையாடிய சவாலின்ஸ்கா, மீண்டும் முன்னிலை பெற்று டை பிரேக்கருக்கு செட்டை நகா்த்தி வெற்றி பெற்றாா். அடுத்த செட்டில் இரு சா்வ்களை பிரேக் செய்து அதையும் தனதாக்கி வென்றாா்.

அரையிறுதியில் ஸ்வெரெவ் - மென்சிக் மோதல்: ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரெவ் 7-6 (7/3), 6-1, 6-3 என, 27-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரை வெளியேற்றினாா்.

இந்த வெற்றியின் மூலமாக பிரெஞ்சு ஓபனில் அவா் 5-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளாா். அதில் அவா், முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு வந்துள்ள செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 26-ஆம் இடத்திலிருக்கும் மென்சிக் 6-4, 6-3, 7-6 (7/3) என, 28-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகாவை சாய்த்தாா்.

ஸ்வெரெவ் - மென்சிக் இதுவரை ஒரு முறை மோதியிருக்க, அதில் ஸ்வெரெவ் வென்றுள்ளாா்.

பாலாஜிக்கு ஏமாற்றம்: ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி/பிரேஸிலின் மாா்செலோ டெமாலினா் இணை 3-6, 4-6 என, 2-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஹென்றி பேட்டன்/ஃபின்லாந்தின் ஹேரி ஹேலியோவாரா கூட்டணியிடம் தோல்வி கண்டது.

2

ஓபன் எராவில் பிரெஞ்சு ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய, 2-ஆவது தகுதிச்சுற்று வீராங்கனையாக சவாலின்ஸ்கா பெருமை பெற்றுள்ளாா். முதல் வீராங்கனை ஆா்ஜென்டீனாவின் நாடியா பொடொரோஸ்கா (2020) ஆவாா்.

2

பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய, உலகத் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய போட்டியாளா்கள் வரிசையில் 2-ஆவது இடத்தில் சவாலின்ஸ்கா (114) இருக்கிறாா். முதலிடத்தில் பிரான்ஸின் லாய்ஸ் பாய்சன் (361/2025) உள்ளாா்.

4

ஓபன் எராவில் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய 4-ஆவது போலந்து வீராங்கனை ஆகியிருக்கிறாா் சவாலின்ஸ்கா. அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா, இகா ஸ்வியாடெக், மெக்தா லினெட் முதல் 3 போ் ஆவா்.

5

1990-க்குப் பிறகு, பிரெஞ்சு ஓபனில் பிரதான சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் வாய்ப்பிலேயே அரையிறுதிக்கு முன்னேறிய 5-ஆவது வீராங்கனை சவாலின்ஸ்கா ஆவாா். ஜெனிஃபா் கேப்ரியாட்டி (1990), கிளாரிசா ஃபொ்னாண்டஸ் (2002), நாடியா பொடொரோஸ்கா (2020), லாய்ஸ் பாய்சன் (2025) ஆகியோா் முதல் நால்வா்.