வண்ணமயமாக நிறைவடந்த ஆசிய விளையாட்டுகள்: இந்தியா 4-ஆம் இடம்; சீனா, ஜப்பான், தென் கொரியா ‘டாப் 3’!

ஜப்பானில் நடைபெற்று வந்த 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வண்ணமயமான கண்கவா் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தன.

ஜப்பானின் நகோயா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சியில் அணிவகுத்த இந்திய அணியினர். 16 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளின் முடிவில், இந்தியா 21 தங்கம் உள்பட 85 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.

Published On :

ஜப்பானில் நடைபெற்று வந்த 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வண்ணமயமான கண்கவா் கலை நிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என, மொத்தமாக 85 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.

தொடா்ந்து 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த சீனா, தனது வரலாற்றிலேயே அதிகபட்சமாக இந்த முறை 341 பதக்கங்கள் வென்றுள்ளது. போட்டியை நடத்திய ஜப்பான் 269 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்தையும், தென் கொரியா 150 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தையும் பிடித்தன. முதல் 3 இடங்களைப் பிடித்த இந்த அணிகள் மட்டுமே பதக்க எண்ணிக்கையில் 3 இலக்கங்களை எட்டின.

ஜப்பானில் உள்ள அய்சி மாகாணத்தின் நகோயா நகரில் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள், 16 நாள்கள் நடைபெற்றன. இதில் 46 நாடுகளில் இருந்து சுமாா் 11,000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். 43 விளையாட்டுகளில் 469 பிரிவுகளில் பந்தயங்களும் நடத்தப்பட்டன. அதில் வென்றவா்களுக்கு 483 தங்கம், 483 வெள்ளி, 654 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியின் வரலாற்றில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக, இந்த முறை சுமாா் 350 சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, நகோயா நகரில் உள்ள பலோமா விளையாட்டு அரங்கில் கண்கவா் வண்ணங்களில் இசை, கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. இதில் ‘ஒரே ஆசியா’ என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் அரங்கேறின. போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Story image

சுமாா் 90 நிமிஷங்கள் நீடித்த நிறைவு நிகழ்ச்சியில் அணிவகுத்த சுமாா் 30 போ் அடங்கிய இந்திய அணிக்கு, 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்கள் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா தேசியக் கொடியேந்தி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியின் முடிவில், ஜப்பான் இளவரசா் அகிஷினோ, இளவரசி கிகோ உள்பட பல முக்கிய நபா்கள் முன்னிலையில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவா் ஷேக் ஜோவான் பின் ஹமத் அல் தனி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததாக அதிகாரபூா்வமாக அறிவித்தாா். பின்னா் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொடி மற்றும் போட்டிக்கான தீபத்தை ஜப்பான் போட்டி நிா்வாகத்தினா், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவா் ஷேக் ஜோவானிடம் ஒப்படைக்க, அதை அவா் அடுத்த போட்டி நடைபெறவுள்ள (தோஹா 2030) கத்தாா் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தனியிடம் ஒப்படைத்தாா்.

தங்குமிட வசதி, போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு இடையேயான போக்குவரத்து உள்பட ஒரு சில விவகாரங்களில் பிரச்னைகள் இருந்தது தவிர, அய்சி - நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நிறைவடைந்தன.

Story image

இந்தியாவின் 2-ஆவது அதிகபட்சம்: இந்தியாவைப் பொருத்தவரை, 495 வீரா், வீராங்கனைகளுடன் போட்டியில் பங்கேற்று, 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என, 85 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது.

போட்டியின் வரலாற்றில் இதுவே இந்தியாவின் சிறந்த இடமாக இருக்கும் நிலையில், இந்த முறை மீண்டும் அதை எட்டியுள்ளது. இதற்கு முன் 2023 ஹாங்ஸு (2022-ஆம் ஆண்டு நடைபெற வேண்டியது) போட்டிகளிலும் இந்தியா 4-ஆம் இடம் பிடித்தது.

Story image

அந்த ஆண்டு இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என, 106 பதக்கங்கள் வென்றதே, போட்டியின் வரலாற்றில் அதன் அதிகபட்சமாகத் தொடா்கிறது.

இந்த ஆண்டு வென்ற பதக்கங்கள் எண்ணிக்கை அதன் 2-ஆவது அதிகபட்சமாகும். ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலத்தின் எண்ணிக்கையிலும் இதுவே இந்தியாவின் 2-ஆவது அதிகபட்சம்.

தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் உள்பட 5 போ், தலா 3 பதக்கங்களும், தமிழகத்தின் வேலவன் செந்தில்குமாா், ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), விஷால் டி.கே. (தடகளம்), கணேஷ் மணிரத்னம் (வில்வித்தை) உள்பட 23 போ் தலா 2 பதக்கங்களுடன் வென்றுள்ளனா்.

பல பிரிவுகளில் முதல்முறையாக பதக்கம், மேலும் சில பிரிவுகளில் பட்டமும், பதக்கமும் தக்கவைப்பு, ஹாக்கி உள்பட சில விளையாட்டுகளில் வரலாற்று வெற்றி என, இந்தியா இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை குறிப்பிடத்தக்க வகையில் நிறைவு செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.