அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

இந்தியாவின் சாதனைப் பாய்ச்சல்!

தடகளம் சாராத பிரிவுகளில் திறமையான வீரர்களைக் கண்டறிந்து அவர்களை பாரா விளையாட்டுக்கு தயார்படுத்தினால், வெற்றிக்கு தடகளத்தை மட்டுமே இந்தியா சார்ந்திருப்பது குறையும்.

India's para lifters Ashok Kumar Malik, Kasturi Rajamani and others being greeted upon their arrival at IGI Airport following Asian Para Games

பளுதூக்கும் வீரர்கள் - PTI

Updated On :

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இதுவரை ஐந்து முறை நடைபெற்றுள்ளன. இந்த முறை இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 114 பதக்கங்களுடன் 4-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.

இந்தியாவின் பதக்கப் பட்டியலில் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் அடங்கும். அதிகபட்சமாக தடகளத்தில் 22 தங்கம், 19 வெள்ளி, 24 வெண்கலம் என 65 பதக்கங்களை இந்திய வீரர்கள் குவித்தனர். அடுத்ததாக பாட்மின்டனில் 16 பதக்கங்கள், நீச்சலில் 11 பதக்கங்கள், டேபிள் டென்னிஸில் 7 பதக்கங்கள், வில்வித்தையில் 6 பதக்கங்கள், துப்பாக்கி சுடுதலில் 5 பதக்கங்கள், ஜூடோவில் 2 பதக்கங்கள், பவர்லிஃப்டிங்கில் 2 பதக்கங்கள் அடங்கும்.

ஜப்பானில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சீனா மொத்தம் 435 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஜப்பான் 186 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், உஸ்பெகிஸ்தான் 145 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. சீனாவின் ஹாங்ஸுவில் நடைபெற்ற 4-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 108 பதக்கங்களுடன் இந்தியா 6-ஆவது இடம்பெற்றிருந்த நிலையில், இந்த முறை ஆறு பதக்கங்கள் அதிகரித்து, பட்டியலில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

ஹாங்ஸு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களில் 25 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர் என்றால், இந்த முறை 26 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றிருக்கின்றனர். வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி இரண்டு தங்கம், ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். தடகள வீரர்கள் திலீப் காவிட், நிஷாத் குமார், பிரணவ் சூர்மா, சிம்ரன் சர்மா, துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மோனா அகர்வால் ஆகியோர் இரண்டு தங்கங்கள் வென்றவர்கள்.

பாட்மின்டன் வீராங்கனையான தமிழகத்தின் துளசிமதி முருகேசன் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். நீச்சல் வீரர்கள் ரவி புடிகினா, ஹிமான்ஷு நந்தல் ஆகியோரும் மூன்று பதக்கங்கள் பெற்றவர்கள். துளசிமதி முருகேசன்- மானசி ஜோஷி இணை பாட்மின்டன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சீன இணையை 21-16, 21-13 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த ஆட்டம் 28 நிமிஷங்களே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

ஹாங்ஸு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 17 வகையான ஆட்டங்களில் இந்தியாவின் 309 வீரர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஆடவர் 196. மகளிர் 113. ஜப்பான் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 11 வகையான ஆட்டங்களில் 167 இந்திய வீரர்களே பங்கேற்றனர். அவர்களில் ஆடவர் 111. மகளிர் 56. கடந்த முறையைவிட இந்த முறை சுமார் 46 சதவீதம் குறைவான வீரர்களையே இந்தியா அனுப்பியது.

பார்வையற்றோருக்கான சதுரங்கம், பாரா துடுப்புப் படகோட்டம், பாரா-கேனோயிங் போன்ற விளையாட்டுப் பிரிவுகள் இம்முறை இடம்பெறாததும், அதேபோன்று பல விளையாட்டுப் பிரிவுகளில் ஏற்பாட்டுக் குழு விதித்துள்ள கடுமையான ஒதுக்கீட்டு கட்டுப்பாடுகளுமே இந்திய வீரர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம். அப்படியிருந்தும் கடந்த முறையைவிட கூடுதலாக பதக்கங்களை இந்தியா வென்றிருப்பதிலிருந்து இந்திய வீரர்களின் ஆட்டத் திறன் மேம்பட்டிருப்பதை உணர முடியும்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பாய்ச்சல் அபரிமிதமானது. 2010-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்ஸுவில் நடைபெற்ற முதலாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் 15-ஆவது இடத்தைப் பிடித்தது. 2014-இல் தென்கொரியாவின் இன்சியானில் நடைபெற்ற 2-ஆவது போட்டியில் மொத்தம் 33 பதக்கங்களுடன் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.

2018-இல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 3-ஆவது போட்டியில் மொத்தம் 72 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்துக்கு முன்னேறியது. 2023-இல் ஹாங்ஸுவில் நடைபெற்ற 4-ஆவது போட்டியில் முதல்முறையாக பதக்க எண்ணிக்கையில் 100-ஐ தாண்டி 6-ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா, இப்போது 114 பதக்கங்களுடன் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜப்பான் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு தடகளம் முக்கியக் காரணம். ஹாங்ஸு போட்டிகளில் தடகளத்தில் 21 தங்கம் உள்பட 52 பதக்கங்களை இந்தியா பெற்றது. ஜப்பான் போட்டிகளில் இந்த எண்ணிக்கை 65-ஆக உயர்ந்தது. ஆனால், பாட்மின்டனில் கடந்த முறை 21 பதக்கங்கள் வென்ற இந்தியா, இந்த முறை 16 பதக்கங்களுடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று.

சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகள் பாரா பாட்மின்டனில் முக்கியப் பிரிவுகளில் (எஸ்யு5, எஸ்எல்) தங்கள் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததால், இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்து பதக்க வாய்ப்பு பறிபோனது. கடும் போட்டி நிறைந்த ஆட்டங்களில் பிரமோத் பகத், துளசிமதி முருகேசன் போன்ற நட்சத்திர வீரர்கள் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், சக்கர நாற்காலி வாள்வீச்சு மற்றும் குழு விளையாட்டுகள் போன்ற தடகளம் சாராத பிரிவுகளில் திறமையான வீரர்களைக் கண்டறிந்து அவர்களை பாரா விளையாட்டுக்கு தயார்படுத்தினால், வெற்றிக்கு தடகளத்தை மட்டுமே இந்தியா சார்ந்திருப்பது குறையும். வரும் காலங்களில் பாரா விளையாட்டுகளில் இந்தியா மேலும் சிறப்பாகச் செயல்படவும் அது வழிவகுக்கும்.

அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பவை உண்டோ?

திருக்குறள் (எண் 483) அதிகாரம்: காலம் அறிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.