ஆசியப் போட்டி ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லீகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் அரையிறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லீகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் வெள்ளிக்கிழமை தகுதிபெற்றனர். இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் தீபிகா பல்லீகல் மலேசிய வீராங்கனை நிகோல் டேவிட்டை எதிர்கொண்டார். அதில், தீபிகா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம், அரையிறுதி சுற்றுடன் வெளியேறிய தீபிகா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா தனது அரையிறுதி போட்டியில் மலேசியாவின் சிவசங்கரி சுப்பிரமணியமை எதிர்கொண்டார். இதில், ஜோஷ்னா 1-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம், இவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது. 71 தங்கம், 49 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் என மொத்தம் 149 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.