
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
16 ஆண்டுகளுக்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விராட் கோலி அவரது 19-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவரது அறிமுகப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டார்.
அவரது அறிமுகப் போட்டி மிகவும் சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியில் அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 5 போட்டிகள் கொண்ட இலங்கைக்கு எதிரான அந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி 159 ரன்கள் குவித்தார். அந்த தொடரில் அவரது சராசரி 31.80.
அதன் பின், இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக மாறினார் விராட் கோலி. இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 13,906 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களுடன் அதிக சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். சேஸிங்கில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் அவர் விளாசியுள்ள 50 சதங்களில் 27 சதங்கள் சேஸிங்கின்போது எடுக்கப்பட்டதாகும்.
ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது, டெஸ்ட் போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் விராட் கோலி. இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,848 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, 125 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,188 ரன்கள் குவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விராட் கோலி அங்கம் வகித்துள்ளார். அதேபோல 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் விராட் கோலி அங்கம் வகித்தார். டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டன் என்ற பெருமையும் அவரையே சேரும். இந்திய அணியை கேப்டனாக 68 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ள விராட் கோலி 40 போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலிக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் ஷா அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 16 ஆண்டுகளுக்கு முன்னதாக, 19 வயதில் முதல் முறையாக சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்காக களம் கண்ட விராட் கோலி, இந்திய அணியின் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்து வெற்றிகரமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்யும் கிங் கோலிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: 16 ஆண்டுகளாக கிங் கோலி கிரிக்கெட்டை ஆண்டு வருகிறார். அவரது அறிமுகப் போட்டி முதல் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) வரை சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த 16 ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடியுள்ள அவர், மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்துக்கான வரைபடத்தை உருவாக்கியுள்ளார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.