
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 ஆம் தேதி வரை வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பை நடத்துவதற்கான சூழல் நிலவுகிறதா என்பதை ஐசிசி கவனித்து வந்தது.
இந்த நிலையில், ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவித்ததாவது: வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பையை நடத்த முடியாது பெரிய அளவில் வருத்தத்தைத் தரவில்லை. வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் ஐசிசி தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படும். ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பையை நடத்த முன் வந்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.