ஷனோன் கேப்ரியல்
ஷனோன் கேப்ரியல்படம் | ஐசிசி

12 ஆண்டுகள்... சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற மே.இ.தீவுகள் வீரர்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் வேகப் பந்துவீச்சாளர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
Published on

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் வேகப் பந்துவீச்சாளர் ஷனோன் கேப்ரியல் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான 36 வயதாகும் ஷனோன் கேப்ரியல், 86 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 86 சர்வதேச போட்டிகளில் அவர் அதிகமாக டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடியுள்ளார்.

ஷனோன் கேப்ரியல்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

ஷனோன் கேப்ரியல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். ஆனால், அவர் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட பந்துவீச்சாளராக மாறினார்.

இலங்கைக்கு எதிரான அந்த போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு (8/62) வெளிப்பட்டது. இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து அவர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், டெஸ்ட் போட்டி ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஷனோன் கேப்ரியல் இந்தியாவுக்கு எதிராக அவரது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடினார். அவரது கடைசி டெஸ்ட் விக்கெட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆவார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ஓய்வு முடிவை அறிவித்து ஷனோன் கேப்ரியல் பதிவிட்டிருப்பதாவது: கடந்த 12 ஆண்டுகளாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடினேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு பிடித்தமான கிரிக்கெட்டை விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். அனைத்து வடிவிலான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.

ஷனோன் கேப்ரியல்
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு இடமில்லை!

முதலில் எனது குடும்பத்துக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த சக வீரர்களுக்கு நன்றி. நீங்கள் அனைவரும் எனது இந்த பயணத்தை சிறப்பாக மாற்றினீர்கள். உலகெங்கும் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாட உள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்